Share on Social Media


ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் அருகே நீர்கோழியேந்தலைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் கடந்த 4-ம் தேதி காவல்துறை விசாரணைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சில மணி நேரங்களில் மர்மமான முறையில் மரணமடைந்தார். கீழத்தூவல் காவல்துறையினரின் தாக்குதலால் தான் மணிகண்டன் உயிரிழந்து விட்டதாக ஊர்காரர்கள் போராட்டம் நடத்தினர். மணிகண்டனின் உடலை மறு போர்ஸ்மார்டம் செய்ய மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ‘மணிகண்டன் விஷம் குடித்ததால் தான் உயிரிழந்து விட்டார்’ என்று டிசம்பர் 15-ம் தேதியன்று மதுரை வந்திருந்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி தாமரைக்கண்ணன் மீடியாக்களிடம் கூறியிருப்பது பெரும் விவாதத்தை கிளப்பிவிட்டிருக்கிறது.

தாமரைக்கண்ணன்

“மணிகண்டன் மரணம் குறித்து பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. நீர்கோழியேந்தல் கிராமத்தில் வசித்த மணிகண்டன், நண்பருடன் கடந்த 4-ம் தேதி மாலை இருசக்கர வாகனத்தில் வரும்போது காவல்துறையின் வாகன சோதனையில் நிறுத்தாமல் சென்றிருக்கிறார். உடன் வந்த நபர் மணிகண்டனை விட்டுவிட்டு தப்பித்து ஓடிவிட்டார். அதனால், போலீஸார் மணிகண்டனை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இருசக்கர வாகனம் தொடர்பாக மணிகண்டனிடம் எந்த ஆவணமும் இல்லை. மணிகண்டனை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றது தொடர்பாக அவர் தாயாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை முடிந்த பின்பு அவரின் தாய் மற்றும் உறவினருடன் மணிகண்டன் அனுப்பி வைக்கப்பட்டார்.

Also Read: மதுரை: `முதுகுளத்தூர் மாணவர் மணிகண்டன் விஷம் குடித்ததால் தான் உயிரிழந்தார்’ – ஏ.டி.ஜி.பி தகவல்!

இந்தக்காட்சிகள் காவல்நிலைய சிசிடிவியில் முழுவதுமாக பதிவாகியிருக்கின்றன. மருத்துவக் குழுவின் இறுதியான பரிசோதனை அறிக்கையின்படி மணிகண்டன் விஷம் அருந்தியதால் இறந்து விட்டதாக தெரியவந்திருக்கிறது. அவர் காவல்துறையினர் தாக்கியதால் இறக்கவில்லை. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மணிகண்டனுடன் வந்து தப்பியோடியது யார் என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மணிகண்டனின் உடலில் எந்த காயமும் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. விஷ பாட்டில் மணிகண்டனின் வீட்டில் கைப்பற்றப்பட்டிருக்கிறது. காவல்நிலையத்துக்கு அழைத்து வந்ததும், விசாரணை நடைபெற்றதும் உண்மை. மறுநாள் வந்து வாகனத்துக்கான ஆவணங்களை மட்டுமே சமர்பிக்க அவரிடம் சொன்னோம்.

மணிகண்டனின் மரணம் தொடர்பாக பெற்றோர்கள் கூறும் புகாருக்கு நான் விளக்கம் அளிக்க முடியாது. தொடர்ந்து ஆர்.டி.ஓ விசாரணையும், காவல்துறை விசாரணையும் நடைபெற்று வருகிறது. காவல்துறை மீது புகார் வந்தால் உடனடியாக ஆர்.டி.ஓ-விடம் கொண்டு செல்கிறோம். காவல்துறை தரப்பில் முழுமையான வழிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கின்றன. உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் படி காவல்துறை செயல்படுகிறது” என்றார்.

தாமரைக்கண்ணன் சொன்ன கருத்துக்கு, மணிகண்டனின் நீர்கோழியேந்தல் கிராமத்தினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

ram nad4 Tamil News Spot
உயிரிழந்த மணிகண்டனின் தாய் மற்றும் உறவினர்கள்

மணிகண்டனின் சகோதரர் அலெக்ஸ் பாண்டியன் கூறுகையில், “எனது அண்ணன் மணிகண்டனுக்கு அன்றுதான் வயது 22. பிறந்தநாளும், இறந்தநாளும் ஒரே நாளில் நடக்குமென்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. போலீஸார் ஒரு தவறை செய்துவிட்டு, அதை மறைக்க பல பொய்களை சொல்லிவருகிறார்கள். கூடுதல் டி.ஜி.பி-யான தாமரைக்கண்ணன், கீழே உள்ளவர்கள் சொன்னதை அப்படி திருப்பிச்சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். நடுநிலையான அதிகாரியாக இருந்திருந்தால், மணிகண்டனை இழந்த எங்களை அழைத்து, இறக்கும் முன் என்ன நடந்தது? என்கிற விளக்கத்தை கேட்டிருக்கவேண்டும். அதை அவர் செய்யவில்லை.

பொதுவாக, கிராமப்புற வீடுகளில் எலி மருந்து, எறும்புகளை தடுக்கும் சாக்பீஸ், இதெல்லாம் சர்வசாதாரணமாக இருக்கும். எங்கள் வீட்டிற்கு வந்த போலீஸார், இதையெல்லாம் எடுத்துக்கொண்டுப் போனார்கள். அவர்கள் சொல்லும் விஷ மருந்து, எங்கள் வீட்டில் எடுத்ததாக சொல்லுகிறார்கள். அதற்கு வாய்ப்பே இல்லை. அதை வாங்கவேண்டுமானால், பத்து கி.மீ. தூரம் போகவேண்டும். அந்த இரவு நேரத்தில் என் அண்ணன் எங்கும் போகவில்லை. எங்களுடன்தான் இருந்தார்.

சுற்றுபட்ட கிராமங்களில் யாராவது தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வந்தால், அவர்களை அண்ணன் திட்டுவார். ஏன் தற்கொலை செய்துகொள்ளவேண்டும்? வேறு எவ்வளவோ வழிகள் உள்ளதே? என்று வாதாடுவார். ராணுவத்தில் சேருவதற்காக பயிற்சிகளை எடுத்துக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில் அவர் ஏன் விஷம் அருந்தவேண்டும்?

ram nad3 Tamil News Spot
கீழத்தூவல் காவல் நிலையம்

எங்களைப்பொறுத்தவரையில், போலீஸ் சொல்வது பொய்யான ரிப்போர்ட். அண்ணனின் உடம்பில் காயம் இல்லை என்கிறார் கூடுதல் டி.ஜி.பி. ஆனால், போலீஸார் அடித்தற்கான காயங்களை அண்ணனின் உடலில் நாங்கள் பார்த்தோம். உடலை மறுபோர்ஸ்மார்டம் செய்த டாக்டரும் அடித்ததால்தான் இறந்ததாக சொல்கிறார். ஆனால், போலீஸார் தரப்பில் விஷம் அருந்தியதால்தான் இறந்ததாக திரித்துச் சொல்கிறார்கள்.

என் சகோதரர் உடம்பில் காயங்கள் உள்ளன. காவல் நிலையத்திலிருந்து அழைத்து வந்தபோது, சாப்பிடச் சொன்னார் என் அம்மா. அதற்கு அண்ணன், ‘ அடிச்சாங்க. வயிறு வலிக்கிறது. உடம்பு முழுக்க வலிக்கிறது. சாப்பிட முடியலை ‘ என்று சொல்லி கண்ணீர் விட்டார். கட்டிலில் படுத்திருந்தவர் திடீரென கண்விழித்து, “தம்பிகளை நல்லா பார்த்துக்கோம்மா” என்று சொன்னார். ஏதோ சத்தம் கேட்டது. நாங்கள் அண்ணனை பார்த்தோம். ரத்த வாந்தி எடுத்திருந்த நிலையில் கிடந்தார். நள்ளிரவு ஒருமணி அளவில் அண்ணன் இறந்துவிட்டார். அண்ணனை பிடித்துச் சென்ற போலீஸார், எங்களை வரும்படி பலமுறை போன் மூலம் பதட்டமாக அழைத்தனர். அதுவே, எங்களுக்கு டென்ஷனை அதிகப்படுத்தியது.

IMG 20211214 195242 Tamil News Spot
தாமரைக்கண்ணன்

ஆனால், நள்ளிரவு எங்கள் அண்ணன் இறந்துவிட்டார் என்று அதே போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் போட்டு சொன்னபோது, யாரும் வரவில்லை. தமிழக போலீஸார் மணிகண்டன் மரணம் குறித்து விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, சி.பி.ஐ. வசம் இந்த வழக்கு மாற்றப்பட்டு விசாரித்தால்தான், தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும்” என்றார்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.