Share on Social Media


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முறையாக ஆய்வு நடத்தவில்லை என காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் குற்றம்சாட்டினார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்த எம்எல்ஏ பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக கடந்த 25 தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள், நெசவாளர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய இடத்தில் இருக்கிறோம். இதனால் எதிர்க்கட்சி எம்எல்ஏ என்றில்லாமல் தொகுதி மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுத்து வருகிறேன். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த மத்தியக்குழு ஒரே ஊராட்சியில் இரண்டு இடங்களில் மட்டும் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை பார்த்துவிட்டுச் சென்றுள்ளனர். காஞ்சிபுரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் சுமார் 2900 ஏக்கர் நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ஏக்கருக்கு சுமார் ரூ. 25 ஆயிரம் அளவில் செலவு செய்து பயிர் வைத்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்டள்ளனர்.

எனவே, விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் 10 ஆயிரம் என்று இழப்பீடு வழங்காமல் 100 சதவீத இழப்பீடு வழங்க வேண்டும். பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மட்டுமல்லாது அறுவடை செய்து களத்துமேடு உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த நெல் கூட மழையில் நனைந்து முளைத்துள்ளது. இந்நிலையில் மத்தியக்குழு ஆய்வு, அமைச்சர் ஆய்வு எல்லாம் கண்துடைப்பாக நடத்தப்பட்டதாகவே தெரிகிறது. இதுமட்டுமல்லாது நெசவாளர்கள் நிறைந்த காஞ்சிபுரம் தொகுதியில் மழை வெள்ளம் நெசவாளர்களை பெரிய அளவில் பாதித்துள்ளது. மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் மக்கள் பிரதிநிதிகளாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

ஆனால் மத்தியக்குழு வந்தபோதும், அமைச்சர் ஆய்வின்போதும் ஆளுங்கட்சியினர் இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். அமைச்சர் 13,800 புதிய விளக்குகள் போடப்பட்டதாகக் கூறுகிறார். இது, ஏற்கனவே செய்த பணிகளை மழை, வெள்ள பாதிப்பாக கணக்கு காட்டுகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் ஆய்வு, மத்தியக்குழுவினர் ஆய்வு இரண்டிலும் முறையாக பாதிக்கப்பட்ட பகுதிகள், மக்களை பார்க்கவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சரியாக ஆய்வு நடத்தி முறையாக 100 சதவீத இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *