Share on Social Media

அல்மாட்டி: டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டிக்கான தகுதிச் சுற்றில் இந்தியாவின் சந்தீப் சிங் (74 கி.கி.,), சுமித் மாலிக் (125 கி.கி.,) உள்ளிட்டோர் ஏமாற்றினர்.

கஜகஸ்தானில், டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று நடந்தது. ஒவ்வொரு எடைப் பிரிவிலும் பைனலுக்கு செல்பவர்கள் ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெறுவர். ஆண்களுக்கான ‘பிரீஸ்டைல்’ 74 கி.கி., எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சந்தீப் சிங் மன், ஈரானின் யோன்ஸ் அலியக்பர் எமாமிகோகாயிடம் தோல்வியடைந்தார்.

ஆண்களுக்கான 97 கி.கி., எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சத்யவர்த் கடியான், ஈரானின் அஸ்காரி முகமதியனிடம் தோல்வியடைந்து ஏமாற்றினார். இதேபோல 125 கி.கி., எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சுமித் மாலிக் 0–2 என, கஜகஸ்தானின் யூசுப் பாதிர்முர்ஸாவிடம் தோல்வியடைந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டிக்கான ‘பிரீஸ்டைல்’ பிரிவில் இந்தியா சார்பில் இதுவரை 6 பேர் தகுதி பெற்றுள்ளனர். ஏற்கனவே பஜ்ரங் புனியா (65 கி.கி.,), ரவி தாஹியா (57 கி.கி.,), தீபக் புனியா (86 கி.கி.,), வினேஷ் போகத் (பெண்கள் 53 கி.கி.,), அன்ஷு மாலிக் (பெண்கள் 57 கி.கி.,), சோனம் மாலிக் (பெண்கள் 62 கி.கி.,) தகுதி பெற்றிருந்தனர்.

பல்கேரிய தலைநகர் சோபியாவில் வரும் மே 6–9ல் உலக தகுதிச் சுற்று நடக்கிறது. இதில் பங்கேற்று இந்திய நட்சத்திரங்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெறலாம்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *