Share on Social Media


1969ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ம் தேதி இரவு 11.56 மணி. முக்கியமான ஒரு வாக்கியம் உலக வரலாற்றில் பதிவானது. ‘மனிதனை பொறுத்தவரை இது ஒரு காலடிதான். ஆனால் மனித குலத்தை பொறுத்தவரை இது மிகப்பெரும் பாய்ச்சல்’ என்ற வாக்கியம். அந்த வாக்கியத்தை சொன்னவரின் பெயர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங். உலகின் முதல் மனிதன் நிலவில் காலடி வைத்தான். புதிய வரலாறு ஒன்று தொடங்கப்பட்டது.

நிலவின் பரப்பில் மனிதர்கள் குதித்துக் கொண்டு தங்களின் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகள் மனித அறிவு மற்றும் ஆற்றலின் அடையாளங்களாய் மாறியது. மனித மனங்கள் பாதுகாக்கும் சாதனைக் கணங்கள் பிறந்தன.

முறையாக ஆர்ம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின், மைக்கெல் காலின்ஸ் ஆகியோர் நிலவுக்கு சென்று திரும்பியதற்காக கொண்டாடப்பட்டு வருகின்றனர். அம்மூவருக்கும் இணையாக இன்னொரு நபரும் இன்று வரை பேசப்பட்டு வருகிறார். அவரின் பெயர் பில் கேய்சிங். அவருக்கும் நிலவுப் பயணத்துக்கும் நேரடித் தொடர்பு ஒன்றுமில்லை. ஆனாலும் அவர் பேசப்படுகிறார். காரணம் என்ன தெரியுமா? 1976ம் ஆண்டு பில் கேய்சிங் எழுதிய ஒரு புத்தகம். அந்த புத்தகத்தின் பெயர் We never went to the Moon: America’s Thirty Billion Dollar Swindle. நாம் நிலவுக்கு செல்லவேயில்லை: அமெரிக்காவின் மூவாயிரம் கோடி டாலர் மோசடி என பெயரை தமிழில் மொழிபெயர்க்கலாம்.

ஆம். பில் கேய்சிங்கை பொறுத்தவரை நிலவுக்கு அமெரிக்கா செல்லவே இல்லை. நிலவுக்கு சென்றதாக சொல்லப்படும் எல்லா விஷயங்கள், எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாமுமே நாடகம். பெரும் மக்கள் கூட்டம் பில் கேய்சிங்கின் நூலால் அதிர்ச்சி அடைந்தது.

தன் தரப்பை விளக்கவென சில முக்கியமான விஷயங்களை முன் வைக்கிறார் பில் கெய்சிங். நிலாவுக்கு மனிதனை அனுப்பும் தொழில் நுட்பம் நாசாவிடம் இல்லை என்கிறார். நிலவில் எடுத்த புகைப்படங்களில் நட்சத்திரங்கள் இல்லை என்கிறார். பல அறிவியல் பூர்வமான சிக்கல்களை புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன என வாதாடுகிறார். மொத்தத்தில் அந்த காணொளி மற்றும் புகைப்படங்கள் யாவும் ஒரு திரைப்பட ஸ்டுடியோவில் வைத்து எடுக்கப்பட்டது என சாதித்தார்.

அமெரிக்காவில் இருக்கும் மக்களில் 5% பேர் நிலவில் மனிதன் இறங்கவில்லை என்றே எண்ணுகின்றனர். காட்டப்படும் காணொளிகளும் புகைப்படங்களும் பொய்யாக உருவாக்கப்பட்டதென நம்புகின்றனர். 5% பேர் என்பது கிட்டத்தட்ட ஒன்றரை கோடி பேர். அத்தனை பேரின் நம்பிக்கைக்கும்தான முதற்காரணம் பில் கேய்சிங்.

பில் கேய்சிங் கொஞ்ச காலம் அமெரிக்காவின் விண்வெளி திட்டத்தில் பணிபுரிந்தார். 1956ம் ஆண்டிலிருந்து 1963ம் ஆண்டு வரை ராக்கெட்டைன் என்கிற நிறுவனத்தில் அவர் பணிபுரிந்தார்.

ராக்கெட்களுக்கான எஞ்சின் தயாரிப்பில் உதவுவதே அவரின் வேலை. அங்கிருந்து வெளியேறிய பிறகு 1976ம் ஆண்டில்தான் பில் கெய்சிங் நூலை பதிப்பிக்கிறார். அந்த நூலை பதிப்பிக்கக் கூட எந்த நிறுவனமும் அவருக்கு கிடைக்கவில்லை. சொந்தமாகவே அந்நூலை பதிப்பித்தார்.

அவருடைய முக்கியமான கேள்விகள் இவைதாம். ஏன் எந்த புகைப்படத்திலும் நட்சத்திரங்கள் இல்லை? நிலவில் கலம் தரை இறங்கியபோது எந்தவித சிறுவெடிப்பும் ஏன் நிலப்பரப்பில் இல்லை? நிழல்கள் ஏன் இல்லை? இருந்தாலும் ஏன் வித்தியாசமாக இருக்கின்றன? மிக எளிய கேள்விகள்தான்.

2005ம் ஆண்டு அவர் இறந்துபோனார். ஆனால் 1994ம் ஆண்டில் கொடுத்த பேட்டியில் கூட அவர், “நாசா மையம் ஒழுங்காக செயல்படுவதில்லை என்பதற்கும் குறைந்த தரம் அது கொண்டிருப்பதற்கும் பல ஆதாரங்கள் ஏற்கனவே இருக்கின்றன. ஆனால் திடீரென 1969ம் ஆண்டில் மனிதனையே விண்வெளிக்கு அனுப்பி விடும் சாத்தியம் எப்படி நமக்கு கிடைத்தது? அதுவும் வெற்றியும் அடைந்தது. இருக்கும் தரவுகளுக்கு எதிராக எல்லாமும் சரியாக நடந்தது எப்படி?,” என்றுதான் கேட்டார். இறுதிவரை அவர் துளி கூட மாறிவிடவில்லை.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *