Share on Social Media


நம் நாட்டில் இன்று சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சுய விளம்பரத்துக்காகவும், ஊடக வெளிச்சத்துக்காகவும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் அறம் சார்ந்து தன் இறுதி மூச்சு வரையிலும் போராடிய விரல்விட்டு எண்ணக்கூடிய சமூக சேவகர்களில், டிராஃபிக் ராமசாமி என்று எல்லோராலும் அறியப்படும் கே.ஆர்.ராமசாமியும் ஒருவர். சமூக சேவை செய்ய வயது தடையல்ல என்பதை மெய்ப்பித்துக் காட்டியவர்.

நூல் ஆலை ஒன்றில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற கையோடு சமூக நலப்பணிகளில் இறங்கிய ராமசாமிக்கு `டிராஃபிக்’ ராமசாமி என்ற அடைமொழியை வழங்கி கௌரவித்தது சென்னை மாநகரம். பாரிமுனையில் தன்னார்வலராக முன்னின்று சாலைப் போக்குவரத்தை சீர்செய்த ராமசாமி பின்னாளில் சமூக நலப்பணிகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு களத்தில் இறங்கினார். பாரிமுனையில் போக்குவரத்தைச் சீர்செய்த ராமசாமிக்கு காவல்துறையினர் வழங்கிய அடைமொழிதான், `டிராஃபிக் ராமசாமி.’

ஆரம்பத்தில் சாலை போக்குவரத்தைச் சீர்படுத்தி வந்த டிராஃபிக் ராமசாமி, தொடர்ந்து சமூகத்தில் எண்ணற்ற மாற்றங்களுக்கு வழிவகுத்தார். பொதுமக்கள் நலன் கருதி ஏராளமான பொதுநல வழக்குகளை நீதிமன்றங்களுக்குக் கொண்டு சென்றவர், அவற்றைத் தானே வாதாடி வென்றிருக்கிறார். அதிக எடை ஏற்றிக்கொண்டு கட்டுப்பாடு இல்லாமல் சென்றுகொண்டிருந்த வாகனங்களுக்கு வாதாடி தடை விதித்தது, சென்னையில் அனுமதியின்றி அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டிய முதலாளிகளுக்கு எதிராகப் பல வழக்குகள் தொடர்ந்து நீதிமன்றத்தில் வாதாடி கட்டடங்களை இடிக்க வைத்தது, எல்லா கட்டடங்களிலும் வாகன நிறுத்தும் வசதி அமைக்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற ஆணைக்கு வித்திட்டது என எண்ணற்ற சமூக நலப்பணிகளை ராமசாமி இந்த சமூகத்துக்குச் செய்திருக்கிறார். எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்றெல்லாம் அரசியல் சாயலுடன் சமூகப் பிரச்னைகளைக் கையாளாமல் அறம் சார்ந்து செயல்பட்டவர். அதன் காரணமாக ராமசாமி பல முறை சிறைக்குக் கைதாகிச் சென்றிருக்கிறார். என்றாலும் அதிகார அடக்குமுறைகளுக்கு எதிராகத் திமிறி எழுந்தபடி சாலையில் புரட்சி செய்தவர் அவர்.

டிராஃபிக் ராமசாமி

டிராஃபிக் ராமசாமி

மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் எதையும் ராமசாமி எதிர்த்தார். தமிழக அரசியலின் அடையாளமாக விளங்கும் பேனர், கட்-அவுட் கலாச்சாரத்துக்கு எதிராகப் பல வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர்ந்து வாதாடி கட்டுப்படுத்தியதும் டிராஃபிக் ராமசாமிதான்.

நூல் ஆலையிலிருந்து ஓய்வுபெற்ற பின் தன் அடுத்த 20 ஆண்டுக்காலத்தை மக்கள் நலப்பணிகளுக்காக ஒதுக்கிய சேவகர் ராமசாமி, கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். மார்ச் மாத இறுதியில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ராமசாமி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இருதய நோய் இருந்ததால் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று (4.5.2021) மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *