Share on Social Media


சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று (ஏப்.,17) காலை காலமானார்.

விவேக், தான் ஏற்று நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்களில், நகைச்சுவையோடு சமூக சீர்திருத்தக் கருத்துகளை கூறி தனது ரசிகர்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தார். மூட நம்பிக்கை, ஜாதி மத வேறுபாடு, லஞ்ச லாவண்யம், மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் அவலம், தண்ணீர் பிரச்னை ஆகியவற்றை, தனது வசனங்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மரம் நடுவதில் ஆர்வம் கொண்ட விவேக், செழிப்பான நாட்டை உருவாக்க நாடு முழுவதும் மரக்கன்று நட வேண்டும் என வலியுறுத்தினார். அந்த வகையில், நேரம் கிடைக்கும் போதெல்லாம் மரக்கன்றுகளை நட்டு வந்தார். தனது ரசிகர்களையும், மாணவர்களையும் மரக்கன்று நடும்படி வலியுறுத்தி வந்தார். இதற்காக, அவரை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பாராட்டினார்.

அப்துல் கலாம் மீது அதீத அன்பு கொண்ட விவேக், அவரை முன்மாதிரியாக கொண்டு தனது வாழ்க்கையில் பல விஷயங்களை மாற்றி கொண்டவர். கலாமின் ‛பசுமை இந்தியா’ திட்டத்தை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றதில் விவேக்கிற்கு முக்கிய பங்கு உண்டு. சுற்றுச்சூழலிலும் விவேக் அதீத ஆர்வம் கொண்டவர். அவர் காலமானது, திரையுலகம், ரசிகர்களுக்கு பெரிய இழப்பு, அவருக்கு அஞ்சலி செலுத்த நீங்கள் நினைத்தால், உங்கள் வீட்டிலோ, சாலை ஓரங்களிலோ, மைதானங்களிலோ, பள்ளிகளிலோ மரக்கன்றுகளை நட்டு, அவற்றை புகைப்படம் எடுத்து உங்கள் பெயர், ஊர், ஆகிய விவரங்களுடன் எங்களுக்கு அனுப்புங்கள். தினமலர் இணையதளத்தில் வெளியிடப்படும்.
புகைப்படங்களை அனுப்ப :https://www.dinamalar.com/vivek/

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *