Share on Social Mediaநீண்ட காலத்திற்கு எதிர்மறை உணர்வுகளை சுமந்து கொண்டிருப்பவர்கள் விரைவில் வயதான தோற்றத்தை பெற்றுவிடுவார்கள் என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

‘சிரிப்பை விட சிறந்த மருந்து இல்லை’ என்று சொல்வார்கள். ஆனால் நாம் தினமும் எத்தனை முறை சிரிக்கிறோம்? என்று சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா? சிரிப்பு மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. இறுக்கமான மன நிலையில் இருக்கும்போது புன்னகைத்து பாருங்கள். மனம் இலகுவாகும்.

எதிர்மறை எண்ணங்களை மனதுக்குள் தேக்கி வைப்பது உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். நீண்ட காலத்திற்கு எதிர்மறை உணர்வுகளை சுமந்து கொண்டிருப்பவர்கள் விரைவில் வயதான தோற்றத்தை பெற்றுவிடுவார்கள் என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. அழகுக்கும், மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

மன அழுத்தம், கோபம், கவலை, எரிச்சல் உணர்வு போன்றவை புற அழகை பாதிக்கும். ஒருவருடைய வெளிப்புற தோற்றத்தை வைத்தே அவருடைய மன நிலையை புரிந்து கொண்டுவிடலாம் என்பதால் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. அவை மன நலனையும், உடல் நலனையும் சீர்குலைத்துவிடும். சரும அழகை பாதிக்கும் விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

மன அழுத்தம்: தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்தால் முகத்தில் அதன் தாக்கம் வெளிப்படும். கார்டிசோல் ஹார்மோன்களின் உற்பத்திதான் மன அழுத்தத்திற்கு முக்கிய காரணமாகும். இதன் உற்பத்தி அதிகரிக்கும்போது சருமம் சார்ந்த பிரச்சினைகளும் உருவாகும். மன அழுத்தம் நீண்ட நாட்களாக இருந்தால், புதிய செல்கள் உருவாகுவதில் குறைபாடு உண்டாகும். விரைவில் வயதான தோற்றம் தொற்றிக்கொள்ளும்.

மன அழுத்தத்தில் இருக்கும்போது, ​சாக்லேட் பார், உருளைக்கிழங்கு சிப்ஸ் மீது நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு குடிப்பழக்கம் அதிகமாகிவிடும். இது தண்ணீர் பருகும் அளவை குறைப்பதற்கு வழிவகுத்துவிடும். சரும சுருக்கங்கள் உட்பட பல தோல் பிரச்சினைகளுக்கு நீரிழப்புதான் முக்கிய காரணமாகும். முறையற்ற உணவு பழக்கம், சரும பராமரிப்பில் போதிய அக்கறையின்மை காரணமாக முகப்பரு பிரச்சினையும் உண்டாகும். மன அழுத்தம் ரத்த நாளங்களில் சுருக்கத்தையும் ஏற்படுத்திவிடும்.

கோபம்: நீங்கள் யாரிடமாவது கோபம் கொள்ளும்போது முகத்தை கவனியுங்கள். கோபம் உங்கள் முக தசையை இறுக்கமாக்கும். சோர்வும் தென்படும். அது காலப்போக்கில் சுருக்கத்திற்கு வழிவகுக்கும். கோபமாக இருக்கும் சமயத்தில் கார்டிசோல் ஹார்மோன்கள் வேகமாக உற்பத்தியாகும். இது சருமத்தை பாதுகாக்கும் முக்கிய உறுப்பான கொலோஜனின் உற்பத்தியைத் தடுக்கும். அதன் காரணமாக சருமத்தின் பொலிவு குறைந்து, விரைவாகவே சுருக்கம் தென்பட வழிவகுத்துவிடும்.

சோர்வு: முகபாவம் சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அடிக்கடி மனச்சோர்வடைந்தால் முகத்தில் சுருக்கங்கள் எட்டிப்பார்க்க தொடங்கிவிடும்.

நீண்டகால மனச்சோர்வு சருமத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். உயிரணுக்களும் பாதிப்புக்குள்ளாகும். ஹார்மோன் செயல்பாடுகளில் மாறுதலை உண்டாக்கி தூக்கத்தை பாதிக்கும். கண்களில் வீக்கம், மந்த உணர்வு, சோர்வு போன்ற பிரச்சினைகள் உண்டாகும். நீண்ட காலமாக ஏதாவதொரு விஷயத்தை பற்றி நினைத்து கவலையுடன் இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாகும்.

பயம் : ஆபத்தில் இருப்பதாக உணரும்போதோ, பீதி அடையும்போதோ, பயம் தொற்றிக்கொள்ளும்போதோ மூளை உடனடியாக அட்ரினலின் சுரப்பிகளுக்கு சிக்னல் கொடுக்கும். இதன் விளைவாக, இதய துடிப்பு அதிகரிக்க தொடங்கி விடும். உடலுக்குள் ரத்தம் செல்லும் வேகமும் அதிகரித்துவிடும். இந்த சமயத்தில் உடல் தசைகளுக்கு தேவையான ரத்தம் முகத்தில் இருந்து எடுக்கப்படும். காயம் அடையும்போதும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதற்கு சருமத்தில் உள்ள ரத்த நாளங்கள் உதவும். அப்போது சருமத்தில் ரத்தத்தின் அளவு குறைவதால் சோர்வு எட்டிப்பார்க்கும்.

எதிர்மறை எண்ணங்கள்தான் அக அழகையும், புற அழகையும் அதிகளவில் பாதிக்கின்றன. இதனால், தேவையற்ற எண்ணங்கள், சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. எப்போதும் மனதை ரிலாக்‌ஸாக வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது புன் சிரிப்பை உதிர விட வேண்டும். நகைச்சுவை உணர்வை தூண்டும் விஷயங்களில் ஈடுபட வேண்டும்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *