Share on Social Media


கொரோனா தடுப்பூசியை மாநிலங்களுக்கு வழங்குவதில், மத்திய பா.ஜ., அரசு அரசியல் பார்வையுடன் நடந்து கொள்கிறது என்ற கருத்து, நாடு முழுதும் நிலவுகிறது. மத்திய அரசின் போக்கு சரியில்லை என்ற பேச்சும் நிலவுகிறது. அரசியல் பார்வையை தவிர்த்து, மனிதநேய பார்வை தான் அவசியம்.
– திராவிடர் கழகத் தலைவர் வீரமணி

‘மத்திய அரசு நியாயமாகத் தான் செயல்படுகிறது. அரசியல் சார்பாக, ‘சிலர்’ செயல்படுகின்றனர். அவர்கள் கொஞ்ச நாளைக்கு சும்மா இருந்தால், எல்லாம் சரியாகி விடும்…’ என, கூறத் துாண்டும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை.

கொரோனாவால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரிய தொழில், சிறிய தொழில் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான பொருளாதார திட்டத்தை, தமிழக முதல்வர் வகுக்க வேண்டும். அதன்படி, சவரத்தொழில், உடற்பயிற்சி கூடங்கள் என அனைத்து தொழில்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும்.
– நடிகர் சரத்குமார்

‘உண்மை தான். கொரோனாவால் தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முதலில், தமிழக அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் அறிக்கை.

மத்தியில், பா.ஜ., பொறுப்பேற்று, வரும் 30ல் ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன. அந்த நாளை அனைவரும் கொண்டாட வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் நாளாக இதை கொண்டாட வேண்டும்.
– தமிழக பா.ஜ., தலைவர் முருகன்

‘அதற்காக கட்சியினர் அனைவரையும் தெருவில் இறக்கி விட்டு, கொரோனாவை இன்னும் அதிகரித்து விடாதீர்கள். கவனமாக இருக்க வேண்டும்…’ என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., தலைவர் முருகன் அறிக்கை.

பதவியேற்பின் போது, தமிழ் மொழியில் பதவியேற்க வேண்டுமென்பது என் தனிப்பட்ட ஆர்வம். அதற்காக கேரள சட்டப்பேரவை செயலரிடம் முன்னரே விருப்பம் தெரிவித்து, அனுமதியும் பெற்று விட்டேன். என் தொகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாக தமிழ் மொழியில் பதவியேற்றது எனக்கு மகிழ்ச்சியே.
– கேரளாவின் தேவிகுளம் சட்டசபை தொகுதி மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., ராஜா

‘பதவியேற்பின் போது தமிழில் பேசியது பெரிதல்ல; கேரளாவில் உள்ள தமிழர்கள் நலன்களுக்காக பாடுபடுங்கள்…’ என அறிவுரை கூறத் துாண்டும் வகையில், கேரளாவின் தேவிகுளம் சட்டசபை தொகுதி மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., ராஜா பேட்டி.

கொரோனா பரவல் தடுப்பு பணியை, விரைவுபடுத்தி உள்ளோம். 100 வீட்டுக்கு ஒரு தன்னார்வலர் என்ற நிலையில், தினமும் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தி, உடனடி சிகிச்சை வழங்கப்படுகிறது. கொரோனா தடுப்பு பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்த அரசு ஆலோசனை வழங்கியது. இதன்படி எந்த ஆசிரியரையும் நாங்கள் கட்டாயப்படுத்தி, பணி செய்ய நிர்ப்பந்திக்கவில்லை.
– வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி

‘வீடு வீடாக செல்லும் போது, முக கவசம் அணிந்து செல்ல சொல்லுங்கள். தி.மு.க., கரை வேட்டியுடன் போய், மக்களை அச்சுறுத்தி விடாமல், பேன்ட், சட்டையுடன் போகச் சொல்லுங்கள்…’ என, கிண்டலாக கூறத் துாண்டும் வகையில், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி.

AdvertisementSource link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *