Tamil News No20 29 700588405132294 Tamil News Spot
Share on Social Media

பாட்னா: ‘ராமர் என்ற கடவுளே இல்லை என்று கூறியவர்களையும், ராமர் கோயிலுக்கு முட்டுக்கட்டை போட்டவர்களையும் மக்கள் மறக்கக் கூடாது,’ என்று பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். பீகார் மாநில சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதல் கட்டத் தேர்தல் கடந்த மாதம் 28ம் தேதி முடிந்தது. 2ம் கட்டத் தேர்தல் நாளையும், 7ம் தேதி 3ம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளன. 2ம் கட்டத் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது. இந்த பிரச்சாரத்துக்காக பீகார் வந்துள்ள பிரதமர் மோடி, சாப்ராவில் நேற்று நடந்த பேரணியில் கலந்து கொண்டார்.

அதில் அவர் பேசுகையில், ‘‘பீகாரில் இரட்டை இன்ஜின் அரசு நடந்து வருகிறது. மற்றொரு பக்கத்தில் 2 இளவரசர்கள் உள்ளனர். ஒருவர் காட்டாட்சியில் இருந்து வந்தவர். இருவரும் சிம்மாசனத்துக்காக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். எங்களின் இரட்டை இன்ஜின் அரசு, மாநிலத்தை முன்னேற்றுவதில் உறுதியாக உள்ளது. சாத் பூஜை வரை ஏழைகளுக்கான இலவச தானியங்களை வழங்குவதை அரசு உறுதி செய்துள்ளது. எந்த பெண்ணும் சாத் பூஜையை கொண்டாட முடியாமல் போகுமோ என கவலைப்பட வேண்டாம்,’’ என்றார்.

பின்னர், சமஸ்திபூர், காந்தி மைதானம், பாகாஹா உள்ளிட்ட இடங்களிலும் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு அவர் பேசுகையில், ‘‘மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பொய்களையும், புரளிகளையும் பரப்பி வருகின்றன. குடியுரிமை திருத்த சட்டத்தால், இந்தியாவில் பல ஆயிரம் மக்களின் குடியுரிமை பறிபோகும் என்றனர். ஆனால், இன்று வரையில் ஒருவரும் அதனால் பாதிக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட உள்ளதாக புரளியை கிளப்பினர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது பற்றி பீதியை கிளப்பினர். ராமர் என்று கடவுள் ஒருவர் இல்லை என்றனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டனர். இப்படிப்பட்டவர்களை மக்கள் மறக்கக் கூடாது,’’ என்றார்.

* கை சின்னத்துக்கு ஓட்டு கேட்ட ஜோதிராதித்யா
மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசில் துணை முதல்வராக இருந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. காங்கிரஸ் இளம் தலைவர்களில் ஒருவராக விளங்கிய அவர், கடந்த மார்ச்சில் தனது ஆதரவு எம்எல்ஏ.க்கள் 22 பேருடன் கட்சியில் இருந்து விலகினார். இதனால், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, பாஜ. ஆட்சி அமைத்தது. பின்னர், பாஜ.வில் சிந்தியா இணைந்தார். இந்நிலையில், இம்மாநிலத்தில் 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஜோதிராதித்யா நேற்று ஈடுபட்டார். அப்போது, ‘3ம் தேதி கை சின்னத்தில் பட்டனை அழுத்தி காங்கிரசுக்கு வாக்களியுங்கள்,’ என்று தன்னையும் அறியாமல் பழைய நினைவில் கூறினார். பின்னர், சுதாரித்துக் கொண்டு, ‘தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்’ என்று கூறினார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

* மோடிக்கு தேஜஸ்வியின் 11 கேள்விகள்
பீகாரில் பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் மகாபந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ், பீகார் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ‘‘பீகார் மாநிலத்தின் முன்னேற்றம் மற்றும் மேம்பாடு தொடர்பாக பின்வரும் கேள்விகளை மதிப்பிற்குரிய பிரதமர் மோடியிடம் கேட்க விரும்புகிறேன். ஏனென்றால், நிதி ஆயோக் அறிக்கையின்படி கல்வி மற்றும் சுகாதாரம் என அனைத்திலும் பீகார் மிக மோசமான மாநிலமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது,” என்றார்.

1 பீகாரில் உள்ள இரட்டை இன்ஜின் அரசு, மொத்த பட்ஜெட்டில் குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரத்துக்காக 4 சதவீதம் மட்டுமே ஒதுக்குவது ஏன்?
2 பீகாரில் ஊட்டசத்து குறைபாடு மற்றும் பட்டினியை குறைப்பதற்காக மொத்த பட்ஜெட்டில் 2 சதவீதத்துக்கும் குறைவாக செலவிடப்படுவது ஏன்?
3 பதினைந்து ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இருந்த போதிலுரும் ஊட்டசத்து குறைபாடு மற்றும் பட்டினி இருப்பது ஏன்?
4 பீகார் மாநில இளைஞர்கள் பொறியியலில் பிஎச்டி முடித்த பின்னரும் பியூன் மற்றும் தோட்டக்காரர் வேலைக்கு விண்ணப்பிப்பது ஏன்?
5 இரட்டை இன்ஜின் அரசில் வேலையின்மை 46.6 சதவீதமாக இருப்பது ஏன்?
6 மாநிலத்துக்கு திரும்பிய தொழிலாளர்கள் ஜூன் மாதத்தில் அறிவித்த காரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்ட பயனை பெறாதது ஏன்? – என்பது உள்ளிட்ட 11 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *