Share on Social Media


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் வணிக வளாக கடைகள் ஏலம் விடுவதில் ஆளும் கட்சியினருக்குச் சாதகமாக மாநகராட்சி நிர்வாகம் நடந்துகொள்வதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஏலத்தில் மேல் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரியார் பேருந்து நிலையம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்திருக்கும் முறைகேடு பற்றி விசாரிக்கப்படும் என்று தேர்தலுக்கு முன்பும், பின்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வினர் பேசினார்கள். சமீபத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய மழை வெள்ளத்துக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடுகள்தான் காரணம் என்றும் கூறினார்கள். ஆனால், இதுவரை எந்தவொரு ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேட்டுக்கு எதிராகவும் தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அந்த திட்டத்தை விரைவில் முடித்து அதன் பலனை தாங்கள் அடைய வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதாகச் சொல்லப்படுகிறது.

அந்த அடிப்படையில்தான், அரைகுறையாகக் கட்டப்பட்டிருக்கும் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை அவசர கதியில் முதலமைச்சர் திறந்துவைத்திருப்பதாகவும், இதனால் இந்தத் திட்டத்தில் முறைகேடு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட அ.தி.மு.க புள்ளிகள், அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் வணிக வளாக கடைகளை, விதிகளை மீறி தி.மு.க புள்ளிகள் கைப்பற்றிக்கொள்ள முயல்வதாக பா.ஜ.க மாநகரத் தலைவர் டாக்டர் சரவணன் குற்றம்சாட்டி வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

இதுகுறித்து டாக்டர் சரவணனிடம் பேசினோம். “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும், அதை விசாரிக்கப்போவதாகவும் பேசிய தி.மு.க அரசு, இப்போது அந்த திட்டத்தின் பலனை அனுபவிக்கப் பார்க்கிறது. உதாரணத்துக்கு மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புராதன பெருமையைப் பாதுகாக்க 42 கோடி மதிப்பில் சில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் ஜான்சிராணி பூங்காவில் ரூ.2.45 கோடியில் புராதன பஜார் அமைக்கப்பட்டு, 12 கடைகள் கட்டப்பட்டிருக்கின்றன. மதுரை நகரம் புராதன நகரம் என்பதால் வருகின்ற சுற்றுலாப் பயணிகள் புராதனப் பொருள்களை வாங்கும் வகையில் இந்தக் கடைகள் கட்ட வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் இந்தக் கடைகளை ஏலம் விடுவதற்கான மாநகராட்சியின் அறிவிப்பில், அதில் 2 மட்டும் புராதனப் பொருள்கள் விற்கும் கடைகள் என்றும், மற்றவை பொதுவானவை என்றும், அதையும் தி.மு.க புள்ளிகள் ஏலத்தில் எடுத்து அதிக தொகைக்கு உள்வாடகைக்கு விடத் திட்டமிட்டிருப்பதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்துதான், மதுரைக்குப் பெருமை சேர்க்கும் புராதன பொருள்கள் விற்கக் கட்டப்பட்ட கடைகளை வேறு வணிக நோக்கத்துக்காக மாற்றக்கூடாது என்று வழக்கு தாக்கல் செய்தேன்.

என்னுடைய வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘மதுரை புராதன நகரம், ஜான்சி ராணி பூங்காவில் அமைக்கப்பட்ட ஹெரிடேஜ் பஜாரில் பாரம்பர்ய பொருள்களை விற்பனை செய்யும் கடைகளை அமைக்கப் பரிசீலனை செய்தால் என்ன?’ என்று கேள்வி எழுப்பினர். ஏலம் விட்டாலும் அதன் மீது மேல் நடவடிக்கை எடுக்காமல் நிறுத்தி வைக்க கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருக்கின்றனர். மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும்போது இதற்கு முடிவு தெரியும். கடைகள் ஏலத்தில் நடந்திருக்கும் முறைகேடுகள் களையப்படும் என்று நம்புகிறேன்.

137333 thumb Tamil News Spot
டாக்டர் சரவணன்

இதுமட்டுமல்ல, பெரியார் பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு வணிக வளாகத்திலிருக்கும் 400-க்கும் மேற்பட்ட கடைகள், குன்னத்தூர் சத்திரத்தில் கட்டப்பட்டிருக்கும் 190 கடைகளையும் தி.மு.க-வினர் கைப்பற்றிக்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் உதவி வருகிறது. நியாயப்படி அங்கு ஏற்கெனவே கடைகள் வைத்திருப்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆனால், இதிலும் முறைகேடுகள் நடப்பதாகத் தகவல் வருகிறது. ஊழல் பற்றித் தொடர்ந்து பேசிய அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இப்போது மௌனமாக இருக்கிறார்” என்றார்.

மீனாட்சியம்மன் கோயிலருகே பல ஆண்டுகளாக பிளாட்பாரத்தில் கடை வைத்திருக்கும் மாநகராட்சியால் அடையாள அட்டை வழங்கப்பட்டவர்களுக்குப் பழைய சென்ட்ரல் மார்க்கெட் அருகில் சிறிய கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளை ஏலத்தில் எடுக்க ஆரம்பத்தில் ஒரு லட்சம் டெபாசிட் என்று மாநகராட்சி அறிவித்த நிலையில் டெபாசிட் தொகையை 5 லட்சமாக உயர்த்தியிருக்கிறார்கள். அதனால், தெருவோர வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இவ்வளவு பெரிய தொகையை எப்படிச் செலுத்த முடியும் என்று அவர்கள் கலெக்டரிடமும், கமிஷனரிடமும் மனு அளித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: ரூ.17,590 கோடி ஸ்மார்ட் இல்லாத திட்டம்… அலட்சியத்துக்கு யார் பொறுப்பு?

இந்தப் புகார்கள் குறித்து மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்-ஸிடம் கேட்டபோது, “இதில் எந்தவொரு முறைகேடும் நடைபெறவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் கட்டப்பட்டிருக்கும் வணிக வளாகங்கள், கடைகள் மூலம் கூடுதல் வருவாயை மாநகராட்சிக்குக் கொண்டு வருவதுதான் நோக்கம். அதேநேரம் அந்தப் பகுதியில் ஆரம்பக் காலத்திலிருந்து வியாபாரம் செய்து வந்தவர்களுக்குத்தான் முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்படும். இதில் புதிதாக யாரும் நுழைய முடியாது. ஜான்சி ராணி பூங்காவில் கட்டப்பட்டிருக்கும் 12 கடைகள் அனைத்தும் புராதனப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் என்று திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், அந்தக் கடைகளில் புராதனப் பொருள்களும் விற்கலாம் அவ்வளவுதான். ஆனால், நாங்கள் அதில் 2 கடைகள் புராதனப் பொருள்கள் மட்டும் விற்க வேண்டுமென்று ஒதுக்கியிருக்கிறோம். வருகின்ற வெளியூர் மக்கள் அங்கு வந்து புராதனப் பொருள்கள் வாங்க மாட்டார்கள். அதனால் அதுபோன்ற கடைகளை வைக்க வேறு இடத்தை தேர்வு செய்து கொடுங்கள் என்று வியாபாரிகள் கூறியிருப்பதையும் பரிசீலனை செய்து வருகிறோம். இதுதான் உண்மை.

IMG 20211217 WA0052 Tamil News Spot
மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன்

அதேபோல, புது மண்டபத்தின் தொன்மையைப் பாதுகாக்க வேண்டுமென்றுதான் அங்குக் கடை வைத்திருந்தவர்களுக்காக குன்னத்தூர் சத்திரம் அருகில் கட்டப்பட்டிருக்கும் கடைகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட இருக்கின்றன. ஏற்கெனவே, கடை வைத்திருந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதால்தான் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். அதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட கடைகள் ஒதுக்க முடியாது. இவர்கள்தான் குழப்பம் ஏற்படுத்துகிறார்கள்.

மற்றபடி இதில் அரசியல் அழுத்தம், சிபாரிசெல்லாம் இல்லை. ஒரு பொருளைக் குறைவான விலைக்குக் கொடுத்தால்தான் முறைகேடு என்று சொல்லலாம். முன்பைவிட கூடுதலாக வருவாய் கிடைக்கும் வகையில் ஏலத்தொகையை அதிகப்படுத்தியதை எப்படி சலுகை காட்டுவதாகச் சொல்ல முடியும்? இதனால் மாநகராட்சி நிர்வாகத்துக்கு லாபம்தானே. அது மட்டுமல்லாமல் இது அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்துகின்ற டெண்டர். தகுதி உள்ள யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். இதில் எந்த பாகுபாடும் கிடையாது. பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு வணிக வளாகத்தில் ஏற்கெனவே அங்குக் கடை வைத்திருந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும், அதில் எந்த மாற்றமும் இல்லை. தெருவோர வியாபாரிகளின் கோரிக்கையும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மொத்தத்தில் கடைகள் ஏலத்தில் சிலர் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். அது உண்மையில்லை” என்றார்.

Also Read: சென்னை வெள்ளம்: `ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு; நடவடிக்கை நிச்சயம்’ – முதல்வர் ஸ்டாலின்Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.