ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் அருகே நீர்கோழியேந்தலைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் கடந்த 4-ம் தேதி காவல்துறை விசாரணைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சில மணி நேரங்களில் திடீரென மரணமடைந்தார்.

கீழத்தூவல் காவல்துறையினரின் தாக்குதலால் தான் மணிகண்டன் உயிரிழந்து விட்டதாக ஊர்காரர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவருடைய உடலை மறு உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், ‘மணிகண்டன் விஷம் குடித்ததால் தான் உயிரிழந்து விட்டார்’ என்று இன்று மதுரை வந்திருந்த சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக்கண்ணன் கூறியிருப்பது இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “மணிகண்டன் மரணம் குறித்து பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. நீர்கோழியேந்தல் கிராமத்தில் வசித்த மணிகண்டன், நண்பருடன் கடந்த 4-ம் தேதி மாலை இருசக்கர வாகனத்தில் வரும்போது காவல்துறையின் வாகன சோதனையில் நிறுத்தாமல் சென்றிருக்கிறார். உடன் வந்த நபர் மணிகண்டனை விட்டுவிட்டு தப்பித்து ஓடிவிட்டார்.
அதனால், போலீஸார் மணிகண்டனை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இருசக்கர வாகனம் தொடர்பாக மணிகண்டனிடம் எந்த ஆவணமும் இல்லை. மணிகண்டனை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றது தொடர்பாக அவர் தாயாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை முடிந்த பின்பு அவரின் தாய் மற்றும் உறவினருடன் மணிகண்டன் அனுப்பி வைக்கப்பட்டார். இந்தக்காட்சிகள் காவல்நிலைய சிசிடிவியில் முழுவதுமாக பதிவாகியிருக்கின்றன.

மருத்துவக் குழுவின் இறுதியான பரிசோதனை அறிக்கையின்படி மணிகண்டன் விஷம் அருந்தியதால் இறந்து விட்டதாக தெரியவந்திருக்கிறது. அவர் காவல்துறையினர் தாக்கியதால் தான் இறக்கவில்லை. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மணிகண்டனுடன் வந்து தப்பியோடியது யார் என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மணிகண்டனின் உடலில் எந்த காயமும் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. விஷ பாட்டில் மணிகண்டனின் வீட்டில் கைப்பற்றப்பட்டிருக்கிறது. காவல்நிலையத்துக்கு அழைத்து வந்ததும், விசாரணை நடைபெற்றதும் உண்மை. மறுநாள் வந்து வாகனத்துக்கான ஆவணங்களை மட்டுமே சமர்பிக்க அவரிடம் சொன்னோம்.
மணிகண்டனின் மரணம் தொடர்பாக பெற்றோர்கள் கூறும் புகாருக்கு நான் விளக்கம் அளிக்க முடியாது. தொடர்ந்து ஆர்.டி.ஓ விசாரணையும், காவல்துறை விசாரணையும் நடைபெற்று வருகிறது. காவல்துறை மீது புகார் வந்தால் உடனடியாக ஆர்.டி.ஓ-விடம் கொண்டு செல்கிறோம். காவல்துறை தரப்பில் முழுமையான வழிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கின்றன. உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் படி காவல்துறை செயல்படுகிறது” என்றார்.
இந்தச் சந்திப்பின் போது, தென் மண்டல ஐ.ஜி அன்பு, ராமநாதபுரம் எஸ்.பி கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.
Also Read: போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தாரா கல்லூரி மாணவர்?! – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!