Share on Social Media


மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதிமுகவின் அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில், உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஆக. 14) சென்னை, தாயகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. தமிழகத்தில் திராவிட இயக்க ஆட்சி தொடங்கிய நூறாவது ஆண்டில், 2021 மே 7 ஆம் நாள் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர்களுக்கும் இக்கூட்டம் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பேருவகை கொள்கின்றது.

2. சட்டப்பேரவைத் தேர்தலில் வாகை சூடிய மதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களான வாசுதேவநல்லூர் தொகுதி தி.சதன்திருமலைக்குமார், மதுரை தெற்கு தொகுதி புதூர் மு.பூமிநாதன், அரியலூர் தொகுதி வழக்கறிஞர் கு.சின்னப்பா, சாத்தூர் தொகுதி ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் ஆகியோருக்கு இக்கூட்டம் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.

3. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தமிழக முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும், அரசு மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பாராட்டுகளையும், நன்றியையும் உரித்தாக்குகின்றது.

4. முதல்வர் பொறுப்பு ஏற்ற முதல் நாளிலேயே, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல் கையெழுத்திட்டு மு.க.ஸ்டாலின் பிறப்பித்த ஐந்து அரசாணைகளும் நூறு நாட்களில் செயலாக்கம் பெற்று, மக்களின் நம்பிக்கையைப் பெற்று இருப்பதற்கு மதிமுக சார்பாக வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் இக்கூட்டம் தெரிவிக்கின்றது.

5. தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவதற்கான திட்டங்களில் கவனம் செலுத்தி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு ஆலோசனை அளிக்க முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு ஒன்றையும் உருவாக்கி உள்ளார்.

முதல்வரின் இந்த முயற்சி, அரசியல் வரலாற்றில் முதன் முதலில் மேற்கொள்ளப்பட்டு இருப்பதற்கு இக்கூட்டம் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றது.

மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவையும் திருத்தி அமைத்து, ஜெ.ஜெயரஞ்சனை, மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு துணைத் தலைவராகவும், வேறு சில உறுப்பினர்களையும் நியமித்து இருப்பதையும் இக்கூட்டம் வரவேற்கின்றது.

6. பத்து ஆண்டுக் காலம் பாழ்பட்டுப்போன தமிழ்நாட்டை உய்விக்கும் வகையில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு,

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு

எனும் குறள்நெறிக் காட்டும் வகையில் செயல்பட்டு சாதனைச் சரித்திரம் படைப்பதற்கு மதிமுக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

7. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகள், நீர்பங்கீட்டுச் சட்டங்கள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்துவிட்டு, மேகேதாட்டு அணை கட்டியே தீருவோம் என்று அறைகூவல் விடுத்துள்ள கர்நாடக பாஜக அரசின் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜக அரசு, கர்நாடகத்துகுத் துணைபோகக் கூடாது என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

8. பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு, பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சமூக செயல்பாட்டாளர்களான வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், கவுதம்நவ்லகா, வெர்னான் கன்சல்வெஸ், அருண் ஃபெரைரா, கவிஞர் வரவரராவ், பேராசிரியர் ஆனந்த் டெல்டும்ளே, எல்கார் பரிசத் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சுதிர்தாவ்லே, சுரேந்தர் கட்லிங், மகேஷ் ரௌட், சோமா சென், ரொனாவில்சன் உள்ளிட்ட 16 பேர் மீதும் தேசிய விசாரணை முகமை (NIA) தொடர்ந்துள்ள ஊபா சட்டப் பிரிவு வழக்குகளை திரும்பப் பெற்றுக்கொண்டு அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

ஜார்கண்ட் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட 84 வயது முதியவரும் சமூக செயல்பாட்டாளருமான மனித உரிமைப் போராளி ஸ்டேன் சுவாமி பாதிரியார் பீமா காரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறைக் கொடுமையில் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததற்கு மத்திய பாஜக அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

9: விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலையை தாறுமாறாக உயர்த்தி வரும் பாஜக அரசுக்கு இக்கூட்டம் கண்டனம் தெரிவிப்பதுடன், பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைத்து, விற்பனை விலையைக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றது.

தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல் மீதான வரி ரூ. 3 குறைத்து இருப்பதற்கு இக்கூட்டம் பாராட்டுத் தெரிவிக்கின்றது.

10. பாரம்பரிய மீனவர்களை ஒடுக்கி, வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையிலும், நமது கடல் வளத்தை பன்னாட்டு அந்நிய நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் வகையிலும் கொண்டுவரப்பட்டு இருக்கின்ற கடல்மீன் வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை) சட்ட முன் வரைவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மதிமுக வலியுறுத்துகின்றது.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *