Share on Social Media


இந்தியாவில் ஏப்ரல் மாதம் தொடங்கிய கொரோனா தொற்றின் இரண்டாம் அலையும், இந்த காலகட்டம் ப்ளஸ் டூ பொதுத் தேர்வுக்குமானது என்பதால் அது தொடர்பான விவாதங்களும் யூகங்களும் சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜூன் 1-இல் பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து நாடு முழுவதும் சிபிஎஸ்இ ப்ளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும் பிரதமர் மோடி இது குறித்துப் பேசும்போது “மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பே முக்கியம். நீங்கள் கூறியதுபோல தற்போதைய சூழலில் இந்த முடிவுதான் சிறப்பான மற்றும் மாணவர் நலன் சார்ந்த முடிவு” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனா இரண்டாம் அலை மாநிலத்தின் பல பகுதிகளில் இன்னும் தீவிரமாகவே இருந்து வருவதாலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த இயலும் என்பதாலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மாணவர்களை தேர்வு எழுத அழைப்பது தொற்றினை அதிகரிக்கச் செய்யலாம் என்பதை கருத்தில் கொண்டும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதாக அவ்வறிக்கையில் குறிபிடப்பட்டிருக்கிறது.

கொரோனா காலத்தில் பொதுத் தேர்வுகள்

கொரோனா காலத்தில் பொதுத் தேர்வுகள்

ப்ளஸ் டூ தேர்வு ரத்தை பல்வேறு தரப்பினரும் வரவேற்றாலும் அந்த அறிவிப்பால் புதிய தேசிய கல்விக் கொள்கை நுழையவும் தனியார் பள்ளிகள் மதிப்பெண் விற்பனையில் ஈடுபடவும் வாய்ப்பளிக்கும் எனவும் கல்வியாளர்கள் தரப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கல்வியாளர் ஆயிஷா நடராஜனிடம் பேசினோம் “பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு உட்பட 24 மாநிலங்கள் ப்ளஸ் டூ தேர்வு நடத்த வேண்டும் என்றே தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளன. ஆனால், வழக்கம்போல தன்னிச்சையாகப் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனைக் கூட்டம் நடந்த இரண்டு நாட்கள் கழித்து நாடு முழுவதும் சிபிஎஸ்சி தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார். நீட், ஜேஇஇ உள்ளிட்ட எந்த தேர்வுகளையும் ரத்து செய்யவில்லை. இந்தத் தேர்வுகள் எழுத செல்லும்போது மட்டும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படதா? அரசுப் பள்ளியில் 6 லட்சம், தனியார்ப் பள்ளியில் 2 லட்சம், சிபிஎஸ்சி பள்ளியில் 86 ஆயிரம் மாணவர்கள் ப்ளஸ் டூ தேர்வு எழுத உள்ளனர். இதில் சிபிஎஸ்சி மாணவர்களுக்கு தேர்வு இல்லை என்று சொல்லிவிட்டதால் நுழைவுத் தேர்வு எழுதி மேல்படிப்புக்குச் சென்றுவிடுவார்கள். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தீர்வு என்ன? அது பற்றி ஏன் தெளிவுபடுத்தவில்லை. செய்முறைத் தேர்வுகள் முடிந்துவிட்டன. பொதுத் தேர்வு மட்டும்தான் நடத்த வேண்டும். கொரோனாவை காரணம் காட்டாமல் இவர்களுக்கு ஏற்கெனவே இருக்கும் வாட்ஸப், ஆன்லைன் வசதிகள் மூலம் தேர்வுகளை எளிதாக நடத்தலாம். ஆனால், இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ப்ளஸ் டூ தேர்வை ரத்து செய்திருக்கிறார்கள்.

ஆயிஷா நடராஜன்

ஆயிஷா நடராஜன்

மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் கல்லூரிச் சேர்க்கைக்காக மட்டும் தற்போதைக்கு நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்பார்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏன் அதைத் தொடரக்கூடாது என்பார்கள். தேசிய கல்விக் கொள்கையின் மிக முக்கியமான குறிக்கோள்களில் இதுவும் ஒன்று. இதை நோக்கித்தான் ப்ளஸ் டூ தேர்வு ரத்து என்ற அறிவிப்பு கொண்டுசெல்லும். தமிழக அரசு இதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது” என்றார்.

கல்வியாளர், பேராசிரியர் ப.சிவகுமாரிடம் பேசினோம் “கல்விக் கொள்கையில் ஒன்றிய அரசு என்ன கொண்டுவந்தாலும் அதைச் சந்தேகத்துடன்தான் பார்க்க வேண்டும். மாநில அரசு தன்னுடைய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 2006-ஆம் ஆண்டு கருணாநிதி அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்தார். தற்போது இருக்கும் தி.மு.க அரசும் அதேபோல நடந்துகொள்ள வேண்டும். ப்ளஸ் டூ தேர்வு என்றதும் மருத்துவம் மட்டும்தான் முன்னிற்கிறது. ஆனால், பொறியியல், சட்டம், வேளாண் உள்ளிட்ட படிப்புகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பேராசிரியர் ப.சிவகுமார்

பேராசிரியர் ப.சிவகுமார்

தேர்வுகளை விடுங்கள் கடந்த ஓராண்டாக இணையம் உள்ளிட்ட அடிப்படை வசதியில்லாமல் எத்தனை மாணவர்கள் பள்ளிப்படிப்பை விட்டுள்ளனர், எத்தனை மாணவர்களுக்குத் திருமணம் செய்யப்பட்டிருக்கிறது என்ற கணக்கும் ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா? முதலில் இந்தக் கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு உரிய கல்வி வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்.” என்றார்.

ப்ளஸ் டூ தேர்வு ரத்தில் உள்நோக்கம் ஏதும் இருக்கிறதா என பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசனிடம் பேசினோம் “ப்ளஸ் டூ தேர்வை ரத்து செய்துதான் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பதில்லை. பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலத்தில்கூட இப்படியான குற்றச்சாட்டு இல்லை. இது கொரோனா காலம். மாணவர்கள்தான் முக்கியம், தேர்வு இல்லை என்ற அடிப்படையில் தான் பிரதமர் நரேந்திர மோடி ப்ளஸ் டூ தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். தமிழகத்திலும் அதே நோக்கத்தில்தான் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இராம ஶ்ரீநிவாசன் பா.ஜ.க

இராம ஶ்ரீநிவாசன் பா.ஜ.க

தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாததால் உருவான வெற்றிடத்தை பா.ஜ.க நிறப்பிவிடக் கூடாது என்ற காழ்ப்பில்தான் எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரியான அடிப்படை ஆதாரமற்ற, கிசு கிசுக்கள் போன்ற விமர்சனங்களுக்கு முக்கியத்துவமும் கொடுக்கக்கூடாது.” என்றார்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *