Share on Social Media


போலீசை கண்டால் திருடன் தான் பயப்படுவான் : சினிமா சட்ட எதிர்ப்பாளர்களை உரிக்கும் எஸ்.வி.சேகர்

04 ஜூலை, 2021 – 08:39 IST

எழுத்தின் அளவு:


மத்திய அரசு, ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா – 2021ஐ விரைவில் தாக்கல் செய்ய உள்ளது. இதற்கு சினிமா துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது, கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் செயல் என, நடிகர் சூர்யா கூறியுள்ளார். தணிக்கை செய்யப்பட்டு, திரையில் ஓடிக் கொண்டிருக்கும் படங்களை, மறு தணிக்கை என்ற பெயரில் முடக்கும் அபாயம் இருக்கிறது என, இயக்குனர் சீனு ராமசாமி கூறியுள்ளார்.

இது குறித்து, இரண்டு முறை தணிக்கை குழு உறுப்பினராக இருந்த, நடிகர் எஸ்.வி.சேகர் கூறியதாவது: நல்லவன் என்றைக்காவது, போலீஸ்காரரை பார்த்து பயந்தது உண்டா; நலம் விசாரித்து விட்டு போய் விடுவான். திருடன், ரவுடி தான், போலீசாரை கண்டு பயப்படுவான். கேடு விளைவிப்பவர்கள் அப்படித்தான், மத்திய அரசு கொண்டு வர இருக்கும், ஒளிப்பதிவு திருத்த சட்டம் – 2021ஐ பார்த்து பலரும் பயப்படுகின்றனர்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பவர்கள், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடிய காட்சிகளை அமைத்து படம் எடுப்பவர்கள், சட்டம், ஒழுங்குக்கு கேடு விளைவிப்பவர்கள், இந்திய சட்ட திட்டங்களுக்கு எதிராக படம் எடுப்பவர்களுக்கு, இந்த சட்ட திருத்தத்தால் சிக்கல் தான். சினிமாவில் உள்ள பலர், தணிக்கை சட்டங்கள் என்ன என்பதை, தெரிந்து கொள்ளாமலேயே படம் எடுத்து, சிக்கலில் மாட்டிக் கொள்ளும் போது, கதறுவது, பல காலமாக நடந்து வருகிறது.

30 கோடி மக்கள் தொகை இருந்தபோது போட்ட அதே சட்டங்களை, 130 கோடி பேர் இருக்கும் போது மாற்றக் கூடாது என்று சொல்வது, அறியாமை அல்லது அகந்தை.தனிமனித ஒழுக்கத்துடன், கட்டுப்பாடுகளுடன், சினிமாவை கலையாக நேசித்து, ஒரு நேர்மையான வியாபாரமாக நினைப்பவர்களுக்கு, இந்த சட்டம், எந்த பாதிப்பையும் தராது.அடுத்தவன் பணத்தில், நம் தாய்நாட்டுக்கு எதிரான கருத்துக்களை, உலகம் முழுதும் கொண்டு செல்ல, மோடி அரசு அனுமதிக்கவில்லை என்ற ஆத்திரத்தின் வெளிப்பாடே, கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறது என, சிலர் கோஷம் எழுப்புகின்றனர்.

இனி, பொழுதுபோக்கு அம்சம் உள்ள படம் எடுக்கலாம். நாட்டை துண்டாடக்கூடிய எண்ணத்தோடு படம் எடுக்க முடியாது. இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லை, எதிர்ப்பேன் என்று சொல்லி, வீராவேசம் பேசி, ஊரை விட்டு போய் விடுவேன்; சினிமா எடுக்க மாட்டேன் என்று சொன்னால், அதை தாராளமாகச் செய்யலாம். அதனால், எதுவும் கெட்டுப் போய் விடாது. தியாகராஜ பாகவதர், சிவாஜி, எம்.ஜி.ஆர்., போன்ற ஜாம்பவான்கள் இன்று இல்லை. ஆனாலும், சினிமா படம் வந்து கொண்டு தான் இருக்கிறது.

இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *