Share on Social Media


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: கேரளாவில் உள்ள மஹாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவி தீபா மோகனன், கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரின் துறை தலைவர் பேராசிரியர் நந்தகுமார் அவரை தொந்தரவு கொடுப்பதை எதிர்த்து இந்த போராட்டத்தை நடத்துகிறார். கேரள அரசு, இதில் உடனே தலையிட்டு, பிரச்னையை தீர்க்க வேண்டும்.

பேராசிரியருடன் பிரச்னை என்றால், முதல்வர், கல்வி அதிகாரியிடம் சொல்லலாம். அதற்குப் பதிலாக, போராட்டம் நடத்தினால் சரியாகுமா; வேறு ஏதோ விவகாரம் உள்ளது!


தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை
: மோடியின் வளர்ச்சி என்ற வாகனம், ‘ரிவர்ஸ் கியரில்’ இயங்குகிறது என காங்., ராகுல் கூறியுள்ளார். முறைகேடு, லஞ்சம், மோசடி, சூது, ஊழல் என்ற, ஐந்து ‘கியர்’களில் முந்தைய, காங்., கூட்டணி அரசு இயங்கியதால், அதை சரிப்படுத்த, மோடி அரசு, நேர்மை என்ற ரிவர்ஸ் கியரில் இயங்குகிறது.

ராகுலுக்கு சரியாக உதாரணம் கூறி கூட பேசத் தெரியவில்லை என்பதை, சரியான பதிலடி மூலம் உணர்த்தி விட்டீர்களே!


தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி அறிக்கை:
நம் நீண்ட நாள் கோரிக்கையின் விளைவாக, கோவில்பட்டி மக்களின் இடர் நீங்கும் வகையில், நாகர்கோவில் — கோயம்புத்தூர் ரயில் இனி, கோவில்பட்டியில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நம் கோரிக்கைக்குச் செவி சாய்த்த ரயில்வே அமைச்சருக்கு நன்றி.

நீங்களும், உதயநிதி ஸ்டாலினும் வளர்ச்சி, உட்கட்டமைப்பு, தொகுதியில் தீவிர பிரசாரம் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறீர்கள். ஆனால், உங்கள் கட்சியினர் அப்படியில்லையே… அவர்களை அவிழ்த்து விட்டு விட்டீர்களா?

தமிழக காங்., – எம்.பி., கார்த்தி சிதம்பரம் அறிக்கை: சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகம் உயர்ந்து வருகிறது. ஆனால், அந்நாடோ, லடாக் பகுதியில் உள்ள, கல்வான் பள்ளத்தாக்கு மோதல் தொடர்பான அதன் வெற்றி படங்களை வெளியிட்டு துர்பிரசாரம் செய்து வருகிறது. இதை நாம் அனுமதிக்கலாமா?

எல்லை பிரச்னை என வந்தால், சீன ராணுவம், வர்த்தகம், வெளியுறவு, நல்லிணக்கம் போன்றவற்றை கவனத்தில் கொள்வதே இல்லை என்பது தான், உலகம் அறிந்த செய்தியாயிற்றே!

தமிழக பா.ஜ., இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் அறிக்கை: எஸ்.டி., பிரிவில் உள்ள சங்கவி என்ற மாணவி, திருச்சியில் கிராம பகுதியைச் சேர்ந்தவர். மருத்துவத்திற்கான ‘நீட்’ தேர்வில் அவர் வென்று, திராவிட கட்சிகளின் பொய் பிரசாரத்தை துாள்துாளாக்கியுள்ளார். வாழ்த்துகள்.

நீட் தேர்வு கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு எதிரானது என்று கூறி வரும் திராவிட கட்சிகள், இனிமேல் அது போன்ற பிரசாரத்தை மேற்கொள்ள முடியாது என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *