அண்ணாவை விடவும் அதிகம் சோதனைகளைச் சந்தித்தவர் கலைஞர்தான். இருமுறை கட்சி பெரும்பிளவைச் சந்தித்தது. எம்.ஜி.ஆர் தி.மு.க.வை விட்டுப் பிரிந்தது பெரும் பாதிப்பு. எம்.ஜி.ஆர் தி.மு.க.வை விட்டு வெளியேறக் காரணமாக இருந்த நெடுஞ்செழியனே பிறகு எம்.ஜி.ஆர் கட்சிக்குச் சென்றார். அதேபோல் வைகோ தி.மு.க.வை விட்டு விலகியபோதும் மூன்றில் ஒருபங்கு மாவட்டச் செயலாளர்கள் வைகோவுடன் சென்றார்கள்.
எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு கட்சி உடையும் சூழல். “தி.மு.க.வுக்குக் கள்ளச்சாவி போடும் வேலை நடக்கிறது” என்று எச்சரித்த பெரியார், “தி.மு.க.வினர் வலியுறுத்தும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றில் முன் இரண்டைவிட கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் இப்போது மிக முக்கியம்” என்று அறிவுறுத்தினார். பெரியாரின் வார்த்தைகளை யார் கேட்டார்களோ இல்லையோ, அவற்றை இறுதிவரை இறுகப்பற்றி வாழ்ந்தவர் பேராசிரியர் அன்பழகன். கலைஞரைவிட்டு எவ்வளவு பெரிய ஆட்கள் விலகினாலும், எத்தனையோ பேர் சென்றாலும் ‘கொண்டது தி.மு.க, கண்டது தலைவர் கலைஞர்’ என்பதில் அவர் கொஞ்சமும் மாறவில்லை.
இந்த இடைப்பட்ட காலங்களில்தான் தி.மு.க மிசாவைச் சந்தித்தது. மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, சிட்டிபாபு என்று பலரும் சிறையில் வதைபட்டார்கள். நெருக்கடியின் காரணமாகத் தி.மு.க.வை விட்டுப் பலர் விலகிப்போனார்கள். கலைஞருக்கு கார் ஓட்டக்கூட டிரைவர் வரவில்லை. தன்னந்தனி ஆளாக சென்னையில் துண்டறிக்கைகளை விநியோகித்தார், சில நாள்களுக்கு முன் தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர். இத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் அவருடன் நிழலாக இருந்தவர் அன்பழகன்.

13 ஆண்டுகள் முதல்வர் பதவியில் அமர முடியாமல் அரசியல் வனவாசத்தில் இருந்தார் கலைஞர். 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் ஆட்சி கலைக்கப்பட்டது. ராஜீவ்காந்தி படுகொலையையொட்டி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் தாக்கப்பட்டனர். அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் இரண்டே இரண்டு தொகுதிகளில்தான் தி.மு.க. வென்றது. ஜெயின் கமிஷன் அறிக்கை, ராஜீவ் கொலையில் தி.மு.க.வையும் குற்றம் சாட்டியது. இவற்றில் இருந்து மீண்டபிறகு 2ஜி வழக்கு என்று தி.மு.க.வுக்குப் பல சோதனைகள். எல்லா சோதனைக்காலகட்டங்களிலும் புயலில் வீழாத பெருமரமாக இருந்தார் அன்பழகன்.