Share on Social Media


தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாச்சூர் கிராமத்தில் 9 வயதுச் சிறுவனும், 6 வயதுச் சிறுமியும் வயல்களில் வாத்து மேய்த்து வந்துள்ளனர். சக குழந்தைகள் கொரோனா லாக்டெளனில் பள்ளிகள் திறக்காததால் வீட்டில் இருந்தபடியே செல்போனில் ஆன்லைன் கிளாஸ் அட்டண்ட் செய்துவர, ஆனால் இந்த இரு குழந்தைகளோ மேடு, பள்ளம் எனக் கடந்து ஒவ்வொரு வயலாகச் சென்று வாத்து மேய்ச்சலில் ஈடுப்பட்டு வந்ததை பார்த்த அப்பகுதியினர் மனம் கலங்கினர்.

குழந்தைகள்

Also Read: மதுரை: `மூதாட்டியின் மனு; தன் காரிலேயே வீட்டுக்கு அழைத்துச் சென்று நடவடிக்கை! – நெகிழவைத்த கலெக்டர்

குழந்தைகளிடம் விசாரித்தற்கு, தங்கள் விவரத்தை கூட சரியாக சொல்லத் தெரியாத நிலையில் இருந்ததை கண்டுள்ளனர். இதையடுத்து, அக்குழந்தைகள் கொத்தடிமைகள் ஆக்கப்பட்டு குழந்தைத் தொழிலாளர்களாக வாத்து மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வரும் தகவலை, சிலர் தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

உடனடியாக ஒரத்தநாடு தாசில்தார் சீமானுக்குத் தகவல் கொடுத்து விசாரிக்க அறிவுறுத்தினார் கலெக்டர். இதையடுத்து நேரில் சென்ற சீமான் குழந்தைகளிடம் விசாரிக்க, பெற்றோர் விட்டுச் சென்று விட்டனர், சாப்பிட வழியில்லை, அதனால் வாத்து மேய்க்கும் வேலைக்கு வந்து விட்டதாகக் கண்கள் கலங்கத் தெரிவித்துள்ளனர் அந்தக் குழந்தைகள். இதனை தாசில்தார் சீமான், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் சொல்ல, `சிறு வயதில் வறுமை என்பதே பெரும் கொடுமை, இதில் பொற்றோரும் கைவிட்ட நிலை எத்துணை துயரம்’ என்று எண்ணி மனம் உருகியிருக்கிறார்.

அத்துடன் உடனடியாக குழந்தைகளை மீட்டு வர அறிவுறுத்தினார். அதன்படி தாசில்தார் குழந்தைகளை அழைத்து வந்து குழந்தைகள் நலக் குழுவில் ஒப்படைத்தார். பின்னர் அந்தக் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் குழந்தைகளை மாவட்ட நிர்வாகத்தின் பாதுகாப்பில் பராமரிக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்குக் கலெக்டர் வலியுறுத்தினார். இது குறித்து தாசில்தார் அலுவலக வட்டாரத்தில் பேசினோம்.

“10 வயதை தாண்டாத சிறுவனும், சிறுமியும் வாத்து மேய்க்கும் வேலை செய்வதாகத் தகவல் வந்தது. கலெக்டர் இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டார். அதன் பேரில் சென்று ஆய்வு நடத்தினோம். அதில் கிருஷ்ணகிரி மாவட்டம் கங்கலேரி கிராமத்தைச் சேர்ந்த கங்காதுரை என்பவர் இந்தக் குழந்தைகளை கொத்தடிமைகளாக அழைத்து வந்து குழந்தை தொழிலாளராக வேலைசெய்ய வைத்துள்ளார் என்பது தெரிய வந்தது.

d5e35824 3b8a 4b3f ba63 7b3ad15a4428 Tamil News Spot
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

அவர்கள் இருவரும் அண்ணன், தங்கை கிடையாது. ஆனால் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அண்ணன் தங்கையாக, ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து வந்துள்ளனர். பொற்றோர் கைவிட்டுச் சென்ற நிலையில் கிருஷ்ணகிரி பகுதியில் தெருவில் கிடக்கும் பாட்டில்களை எடுத்து இரும்புக் கடையில் போட்டு அதில் கிடைத்த காசில் சாப்பிட்டு வந்துள்ளனர். பல நாள் கால் வயிற்றுக் கஞ்சி குடித்து வயிறு காய்ந்த நிலையிலேயே அந்தச் சிறுவனுக்கும், சிறுமிக்கும் ஒவ்வொரு பொழுதும் விடிந்திருக்கிறது.

இந்நிலையில்தான், ஒரத்தநாடு பகுதிக்கு வந்து வாத்து மேய்க்கும் வேலையினைச் செய்து வந்தனர். அங்கு அவர்களுக்குச் சாப்பாடு மட்டும் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. பணம் என்றால் என்னவென்றுகூட அந்தக் குழந்தைகளுக்குத் தெரியவில்லை. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சாருக்கு குழந்தைகள் குறித்துச் சொல்லப்பட்டது.

பதறியவர், உடனடியாகக் குழந்தைகளை மீட்டு, தனித் தனியாக இல்லாமல் ஒரே காப்பகத்தில் ஒப்படைத்து பராமரிக்க உத்தரவிட்டார். ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்பார்கள் என்றே ஒரே இடத்தில் தங்க வைக்க வலியுறுத்தினார். அத்துடன் இல்லாமல் காப்பகத்துக்கு நேரில் வந்து குழந்தைகளைப் பார்த்து, `கலங்காதீங்க கண்ணுங்களா… உங்களுக்கு யாரும் இல்லனு நெனக்க கூடாது. அப்பாவா, அம்மாவா நாங்க இருக்கோம். நீங்க பட்ட துயரம் போதும். இனி உங்களுக்கு எந்தக் கஷ்டமும் வராம பாத்துக்குறோம்’ என்று குழந்தைகளின் கைகளைப் பற்றிக்கொண்டு தெம்பூட்டினார்.

align fingers 71282 1280 Tamil News Spot
Child – Representational Image

Also Read: `கடைகளை அடைச்சுட்டோம் சார்… அந்த டாஸ்மாக்?’ -நெகிழவைத்த தஞ்சை கலெக்டர்

மேலும் குழந்தைகளுக்குத் தேவையான உடைகள், இனிப்பு வகைகள் ஆகியவற்றையும் தன் சொந்தச் செலவில் வாங்கி, `இப்போதைக்கு இத வச்சுக்கங்க, இன்னும் நிறைய செய்றேன்’ எனக் கூறினார். பெற்றோரின் பாசத்தை தவறவிட்ட அந்தப் பிஞ்சுகளின் முகத்தில் கலெக்டர் உதிர்த்த வார்த்தைகள் புது வெளிச்சத்தை பாய்ச்சியது. கலெக்டர், இரு குழந்தைகளையும் சிறப்பு கவனம் செலுத்தி பராமரித்திட வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார். அவரோடு சேர்ந்து எங்கள் அன்பும் அந்தப் பிஞ்சுகளுக்குக் கிடைக்கும்” என்றார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *