Share on Social Media


பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி அறிக்கை: பெட்ரோலிய பொருட்களின் விலையில் மேலும் உயர்வு ஏற்பட்டுள்ளது நேர்மையான மக்களுக்கு வேதனையாக இருக்கும். இது நாட்டின் பொருட்கள் தேவையை பலவீனமாக்கி பொருளாதார மீட்சியை மேலும் சிக்கலாக்கி விடும்.

என்ன சார் செய்வது… பெரிய பொருளாதார மேதை நீங்கள். உங்களாலும் இதற்கு தீர்வு சொல்ல முடியவில்லை; சொன்னாலும் கேட்க மோடி அரசு தயாரில்லை. காங்., ஆட்சியில் பெட்ரோலிய நிறுவனங்களிடம் விலை நிர்ணயம் ஒப்படைக்கப்பட்டது; அப்படியே தொடர்கிறது!

தமிழக பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா அறிக்கை: ‘கடவுளை நம்பியவன் காட்டுமிராண்டி என எழுதப்பட்டுள்ளதை முதலில் அழியுங்கள். இல்லையேல், நாங்கள் அழிப்போம். இந்த எதிர்வினை வெறும் மாதிரி தான். இன்னும் கடுமையாகும்.

மிரட்டலால் எதுவும் நடக்காது. சட்டத்தின் ஆட்சி தான் இங்கு நடக்கிறது. அதனால், சட்ட நடவடிக்கை எடுத்து, எல்லா பிரச்னைக்கும் தீர்வு காணுவோமே!

தமிழக வாழ்வுரிமை என்ற கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிக்கை: தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அறுவடை பணிகள் தொடங்கியிருப்பதால் கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே கொள்முதல் செய்த நெல், இன்னமும் வீதியில் தான் கிடக்கிறது; மழையில் முளைத்து வருகிறது. அதற்கு வழி காணாமல் கூடுதல் நிலையங்களை திறப்பார்களா?

பா.ஜ.,வில் உள்ள நடிகை குஷ்பு அறிக்கை: சில கோழைகள் எதிர்பார்ப்பது போன்ற வார்த்தைகளை நான் பேச மாட்டேன். இந்த நாட்டின் குடிமகளாக என் மனதில் தோன்றுவதை பேசத் தான் செய்வேன். என் கட்சியையும் தலைமையையும் மதிக்கிறேன்; பிரதமர் மோடியை நம்புகிறேன். அவரால் தான் இந்தியா பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் உள்ளது.

நல்லவேளையாக புரியும்படி சொன்னீர்கள்… இப்படி விளக்கமாக அறிக்கை விட்டால் தானே, இப்போதைக்கு நீங்கள் கட்சி தாவப் போவதில்லை என்பது விளங்குகிறது!

காங்., தேசிய செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி அறிக்கை: சமையல் காஸ் சிலிண்டர் விலை, மேலும் 15 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்திய மக்களுக்கு பாராட்டுகள்… பிரதமர் மோடி ஏற்கனவே, ‘முத்ரா’ என்ற சிறு கடன் திட்டத்தை அறிவித்துள்ளார். அந்த கடனை இப்போதோ அல்லது விரைவிலேயே இந்திய மக்கள் பெறுவர் என்ற நம்பிக்கை மோடிக்கு உள்ளது.

அப்படியாவது ஏழை மக்கள் கடன் பெற, ‘முத்ரா’ திட்டமாவது இருக்கிறதே. காங்., கூட்டணி ஆட்சியில் எந்த திட்டமும் இன்றி, கூட்டணி கட்சிகளால் மக்கள் மொட்டை தானே அடிக்கப்பட்டனர்?



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *