Share on Social Media

சேலம்: நாடு முழுவதும் நேற்று பெட்ரோல் விலை 15 காசும், டீசல் விலை 26 காசும்  உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைத்து வருகிறது.  கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று பரவிய மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்து ஒரு பீப்பாய் 25 டாலருக்கு கீழ் வந்தது. அந்த நேரத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு பதிலாக மத்திய, மாநில அரசுகள் கலால் வரியை உயர்த்திக் கொண்டன.  கடந்த ஆண்டின் ஜூன் மாதத்திற்கு பின், கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியதும், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்த தொடங்கினர். இதனால், 10க்கு மேல் உயர்ந்து விட்டது.

5 மாநில தேர்தல் முடிந்த நிலையில், தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகிறது. இந்நிலையில், நேற்றும் பெட்ரோல் 15 காசும், டீசல் 26 காசும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 94.71ல் இருந்து 15காசு உயர்ந்து 94.86க்கும், டீசல் 88.62ல் இருந்து 26 காசு உயர்ந்து 88.88க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவே, சேலத்தில் பெட்ரோல் 95.14ல் இருந்து 15காசு அதிகரித்து 95.29க்கும், டீசல் 89.06ல் இருந்து 26 காசு அதிகரித்து 89.32க்கும் விற்பனையாகிறது. அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 1.03ம், டீசல் 1.39ம் உயர்ந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும், இவ்விலையேற்றத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால், மக்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *