Share on Social Media

சென்னை: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று வீட்டு உபயோக காஸ் சிலிண்டரின் விலை மேலும் ரூ.15 உயர்த்தப்பட்டது. இதனால் ரூ.1,000ஐ நெருங்குவதால், இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், சமையல் மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டரின் விலை மாதத்திற்கு ஒருமுறை மாற்றப்பட்டு வருகிறது. கடந்த 1ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.36.50 அதிகரித்தது. அதேசமயம், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால், பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.

 இந்நிலையில் நேற்று, திடீரென 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.15 உயர்த்தப்பட்டது. அதன்படி, சென்னையில் ரூ.900.50 ஆக இருந்த சிலிண்டர் விலை ரூ.915.50 ஆக உயர்ந்துள்ளது. சேலத்தில் ரூ.918.50க்கு விநியோகிக்கப்பட்டு வந்தது, ரூ.933.50 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், டெல்லி, மும்பையில் ரூ.884.50 ஆக இருந்த வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.899.50 எனவும், கொல்கத்தாவில் ரூ.916 எனவும் அதிகரித்துள்ளது.  வழக்கமாக மாதத்தின் முதல் தேதியில் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த 1ம் தேதி வெளியான அறிவிப்பில், வர்த்தக சிலிண்டர் மட்டும் விலை உயர்த்தப்பட்டது. வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றமில்லாததால், பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்திருந்தனர்.

ஆனால், நேற்று திடீரென விலை உயர்த்தப்பட்டு, காஸ் சிலிண்டரின் விலை ரூ.1,000ஐ நெருங்கியிருப்பது, இல்லத்தரசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஏற்கனவே, கடந்த பிப்ரவரியில், ஒரே மாதத்தில் 3 முறையும், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், தலா ரூ.25 வீதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் கடந்த 1ம் தேதி ரூ.36.50 உயர்த்தப்பட்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலையில், நேற்று ரூ.2.50 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.1867.50-ல் இருந்து ரூ.1,865 ஆக குறைந்துள்ளது. சேலத்தில் ரூ.1,825 ஆக இருந்த வர்த்தக சிலிண்டர், ரூ.1,822.50 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலையும் தொடர்ந்து அதிகரிப்பு: இது ஒருபுறம் இருக்க, பெட்ரோல், டீசல் விலையும் ெதாடர்ச்சியாக உயர்ந்து, மக்களை வேதனைக்கு ஆளாக்கியுள்ளது.  கடந்த ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் மீதான வரியில் ரூ.3ஐ தமிழக அரசு குறைத்தது. இதனால், பெட்ரோல் விலை ரூ.100க்குள் வந்தது. ஆனால், அதன் பின்னர் தொடரும் விலை உயர்வால், மீண்டும் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றும், பெட்ரோல் லிட்டருக்கு 26 காசும், டீசல் லிட்டருக்கு 34 காசும் அதிகரித்தது. அந்த அடிப்படையில், சென்னையில் நேற்று முன்தினம் பெட்ரோல் ரூ.100.23க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று 26 காசு அதிகரித்து, ரூ.100.49க்கு விற்கப்பட்டது.

மேலும், டீசல் ரூ.95.59க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று 34 காசு அதிகரித்து, ரூ.95.93க்கு விற்கப்பட்டது. தொடர் விலை உயர்வால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெட்ரோல் மீண்டும் ரூ.100ஐ கடந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். அதேபோல், டீசலும் பெரும்பாலான இடங்களில் ரூ.95ஐ தாண்டி விற்கப்பட்டு வருகிறது. இதனால் கனரக வாகன உரிமையாளர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலையை கட்டுப்படுத்த, ஒன்றிய பாஜக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், அனைத்து பொருட்களின் விலைவாசியும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வும் வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. எனவே, ஒன்றிய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வும் வேதனைக்கு ஆளாக்கியுள்ளது

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *