Share on Social Media

புதுடெல்லி: பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.100ஐ நெருங்கி அதிர்ச்சி அளித்துள்ளது. 21வது நாளாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராஜஸ்தானில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.99.24 ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச  சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, பெட்ரோல் மற்றும் டீசல்  விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி  உள்ளது. இதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினத்தோறும், மாற்றியமைக்கப்பட்டு  வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்  விலை படுவீழ்ச்சி அடைந்தது. இருந்தபோதும், மத்திய அரசு கலால் வரியை  உயர்த்தி பொதுமக்களுக்கு பலன் எதுவும் கிடைக்காமல் செய்தது.

சமீபத்தில்  நடந்த 5 மாநில தேர்தல் காரணமக பெட்ரோல், டீசல் விலையில் ஒரு மாதம் காலம்  எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. தேர்தல் முடிந்ததும், பெட்ரொல் மற்றும் டீசல் விலையும் தினமும் உயர தொடங்கியது. கடந்த மே 4ம் தேதி முதல் 20 முறை பெட்ரோல் விலை உயர்ந்ததால் ராஜஸ்தான்,  மத்திய பிரதேசம், மகராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில்  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றும் 21வது முறையாக பெட்ரோல் லிட்டருக்கு 22 பைசாவும், டீசல் லிட்டருக்கு 21 பைசாவும் உயர்ந்தன. இதனால், பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலையும் ரூ.100ஐ நெருங்கி அதிர்ச்சி தந்துள்ளது.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் தான் நாட்டிலேயே அதிகபட்ச பெட்ரோல், டீசல் விலை உள்ளது. இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.106.39 ஆகவும், டீசல் ரூ.99.24 ஆகவும் அதிகரித்துள்ளது. அடுத்த சில நாட்களில் இங்கு டீசல் விலை ரூ.100ஐ எட்டி வரலாற்றில் மோசமான சாதனை நிகழ்த்தப்பட உள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.95.31, டீசல் ரூ.86.22க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ.96.71 ஆகவும், டீசல் ரூ.90.92 ஆகவும் உள்ளது. கடந்த மே 4ம் தேதிக்குப் பிறகு 21 முறை விலை அதிகரிப்பால் பெட்ரோல் ரூ.4.76, டீசல் ரூ.5.31 உயர்ந்துள்ளது. கொரோனா நெருக்கடிக்கு இடையே இந்த விலை உயர்வால் அத்தியவாசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

* காங். கடும் கண்டனம்
பெட்ரோல் விலை தொடர் உயர்வுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி டிவிட்டரில் பதிவில், ‘‘பல மாநிலங்களில் ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பெட்ரோல் விலை அதிகரிப்பால் நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும். வரி வசூல் தொற்றுநோயின் அலை தொடர்கிறது’’ என்றார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, ‘‘பெட்ரோல் விலை உயர்வு அதிகப்படியான பொது கொள்ளை. இதற்கு மோடி அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். கடந்த 13 மாதங்களில் அதிகப்படியான பொது கொள்ளையால் பெட்ரோல் ரூ.25.72, டீசல் ரூ.23.93 உயர்ந்துள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் உயர்வு காரணமில்லை. மோடி அரசு உயர்த்திய வரிதான் காரணம்’’ என்று டிவிட் செய்துள்ளார்.

* மத்திய அரசு விளக்கம்
மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ‘‘கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 70 டாலருக்கு அதிகமாக விற்கப்படுவதே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு காரணம். இந்தியா கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி செய்து பெறுவதால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து கவுன்சில்தான் முடிவு செய்ய வேண்டும். கவுன்சிலில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படும்’’ என்றார்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *