Share on Social Media


இந்தியாவின் 40-க்கும் மேற்பட்ட முக்கிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள் உட்பட உலகம் முழுவதும் பலரின் செல்போன்கள் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் ஹேக் செய்யப்பட்டு வேவு பார்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஜே.என்.யு மாணவர் உமர் காலித், பீமா கொரேகான் கலவரத்தோடு தொடர்புடையவர்களாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் எனப் பலரும் இந்த ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்திதான் அரசியல் தளத்தில் தற்போது மிக முக்கியமான பேசுபொருள். ” ‘பெகாசஸ்’ என்பது கிரேக்க கதைகளில் வரும் ஒரு கற்பனைக் குதிரையின் பெயர். வேவு பார்க்கத் தீர்மானிக்கப்பட்ட ஒருவரின் போன் கால், எஸ்.எம்.எஸ்., வாட்சப் கால், மெசேஜ் உள்ளிட்டவற்றோடு அவர்கள் பயன்படுத்தும் மொபைல் போனில் இருக்கும் கேமாரவையும் இயக்க முடியும்” என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். “வேவு பார்க்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு ஒரு லிங்க் அனுப்புவதன் மூலம் வாட்ஸப்பில் மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் இந்த சாப்ட்வேரை அவரது மொபைல் போனில் எளிதில் நிறுவலாம்” என்கின்றனர் துறை வல்லுநர்கள்.

திருமுருகன் காந்தி

திருமுருகன் காந்தி

பார்பிட்டன் என்ற ஊடக நிறுவனத்துடன் இணைந்து தி வயர், வாஷிங்டன் போஸ்ட், கார்டியன் உள்ளிட்ட 17 நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வில் வேவு பார்ப்பதற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, மெக்சிகோ, ஹங்கேரி பஹ்ரைன் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்தவை என்றும் கூறப்படுகிறது.

2019-ஆம் ஆண்டிலேயே, இந்திய அரசு பத்திரிகையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர், சமூகச் செயல்பாட்டாளர்களின் செல்போன்களை வேவு பார்க்கிறது என்று புகார் எழுந்தது. சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் “ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மற்றும் மத்திய அமைச்சர்களின் செல்போன்களும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்கள் இன்றிரவு வாசிங்கடன் போஸ்ட் மற்றும் கார்டியன் இதழில் வெளியாகும்” என நேற்று பதிவிட்ட நிலையில் மீண்டும் அந்த சர்ச்சை எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி பா.சிதம்பரம், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஓ.பிரெய்ன், இந்தியாவின் முக்கிய பத்திரிகையாளர்கள் சிலரும் பெகாசஸ் குறித்துப் பேசியதால் மீண்டும் இந்தப் பிரச்னை அரசியல் தளத்தில் முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. “எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பிறரின் செல்போன் கால்களை ஒட்டுக் கேட்க சட்ட ரீதியாக அனுமதி இருக்கிறது. ஆனால், பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் அவர்களின் அன்றாட வாழ்க்கையையும் கண்காணிக்க முடியும் எனும்போது தனிமனித சுதந்திரத்துக்கு மட்டுமல்ல ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியும்.

'பெகசாஸ்' ஸ்பைவேர்

‘பெகசாஸ்’ ஸ்பைவேர்

சமூகச் செயற்பாட்டாளர்களை வேவு பார்ப்பதன் மூலம் அவர்களின் போராட்டங்களை ஒடுக்குவதோடு அதைக் காரணமாக வைத்தே நாட்டின் நலன் என்ற பெயரில் அவர்களைக் கைது செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்கும். இதனால், ஆளும் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களே இல்லாமல் போகும் சூழல் உருவாகும்” என சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

மேலும், “பிரதமர் மோடி தனது கட்சி அமைச்சர்களையும், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களையும் வேவு பார்த்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. தனக்கு எதிராக கட்சிக்குள் நடக்கும் உள்விவகாரங்களையும் அறிந்து கொண்டு, அதற்கு ஏற்றார்போல தனது அதிகாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள அரசியலில் காய் நகர்த்த இந்த ஸ்பைவேரை அவர் பயன்படுத்தியிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை மாற்றத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நெருக்கமாக இருந்த அதே சமயம் கட்சியின் முக்கியப் பொறுப்பிலிருந்தவர்கள் நீக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையை இதோடு தற்போது தொடர்புப் படுத்தி சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர். மோடி தலைமையில் இரண்டாவது பா.ஜ.க ஆட்சி அமைத்தபின் நடந்த அரசியல் நகர்வுகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் பா.ஜ.க-வில் சேர்ந்தது, பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் கைது என அனைத்தையும் ஒப்பிட்டு மத்திய அரசு ஸ்பைவேரைப் பயன்படுத்தியிருக்கலாம் என சிலர் சந்தேகிக்கின்றனர்.

செலோன்கள் ஹேக்

செலோன்கள் ஹேக்

உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து குழுவை அமைத்து விசாரணையும் நடத்த வேண்டும். இந்தியாவின் முக்கிய இறையாண்மையான ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” என அரசியல் விமர்சகர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்து வருகிறார்கள்.

பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உளவு பார்த்ததாக எழுந்துள்ள சர்ச்சையை மத்திய அரசு மறுத்துள்ளது. “இந்தியா ஒரு வலுவான ஜனநாயக நாடு, தனிமனித சுதந்திரம் என்பது அனைத்து குடிமக்களுக்கும் உள்ள ஓர் அடிப்படை உரிமை என்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் தார்மீகக் கடமை. குறிப்பிட்ட நபர்களை அரசாங்க கண்காணிப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு உறுதியான அடிப்படை ஆதாரமோ, அந்தக் குற்றச்சாட்டில் உண்மைத் தன்மையோ இல்லை. மேலும் தொலைப்பேசி உரையாடல்களைக் குறுக்கீடு செய்வது, கண்காணிப்பது என அனைத்தும் சட்டப்படியே செய்யப்படுகின்றன’’ எனவும் விளக்கம் அளித்துள்ளது என்றாலும் பெகாசஸ் ஸ்பைவேரை நாங்கள் பயன்படுத்தவில்லை என மத்திய அரசு மறுக்கவில்லை. அதுமட்டுமல்ல பெகசாஸ் ஸ்பைவேரை தனியார் நிறுவனத்துக்கோ, தனிநபருக்கு நாங்கள் விற்பனை செய்ய மாட்டோம். அரசாங்கத்திற்கு மட்டும்தான் விற்பனை செய்வோம் என அந்த ஸ்பைவேரை உருவாக்கிய இத்தாலியில் உள்ள என்.எஸ்.ஓ நிறுவனம் கூறியுள்ளது. இதன்மூலம், இந்திய அரசும் இந்த ஸ்பேரைப் பயன்படுத்தியிருக்கத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது” எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

'பெகசாஸ்'

‘பெகசாஸ்’
Pixabay

இந்திய அரசியல் சட்டப்படி தொலைப்பேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்க பல்வேறு விதிமுறைகள் உள்ளன என்றாலும் அதை ஹேக் செய்வது இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி குற்றமாகும். எனவே உண்மை என்ன என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்துவதோடு தனிமனித சுதந்திரம் மற்றும் ரகசியங்கள் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டிய கட்டத்தில் மத்திய அரசு நிற்கிறது. மத்திய அரசின் அடுத்தகட்ட நகர்வை எதிர்பார்த்துத்தான் தற்போது அனைவரும் காத்திருக்கிறார்கள்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *