கொரோனா தடுப்பூசியைப்போல இரண்டு, மூன்று டோஸ் போடப்படும் தடுப்பூசிகள் வேறு இருக்கின்றனவா?
“இதுபோன்ற நிறைய தடுப்பூசிகள் இருக்கின்றன. குழந்தைகளுக்கான தடுப்பூசிகளில் இரண்டு டோஸ், மூன்று டோஸ் கொடுக்கப்படுவதுண்டு. உதாரணத்துக்கு போலியோ தடுப்பூசி, ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் பி தடுப்பூசிகள்… எனவே, கொரோனா தடுப்பூசி மட்டும்தான் இரண்டு, மூன்று டோஸ் கொடுக்கப்படுவதாக நினைத்து யாரும் பயப்படத் தேவையில்லை.”
பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்பவர்கள்தான் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களாகக் கருதப்படுவார்களா?
இரண்டு டோஸ் எடுத்துக்கொண்டாலே நீங்கள் ‘fully vaccinated’ என்றே அழைக்கப்படுவீர்கள். பூஸ்டர் டோஸ் என்பது கூடுதல் பாதுகாப்புக்காகவும், நோய் எதிர்ப்பாற்றலை மேலும் அதிகரிப்பதற்காகவும் போடப்படுவதுதான். ஏற்கெனவே சொன்னதுபோல பூஸ்டர் டோஸ் என்பது தினமும் கோவிட் நோயாளிகளுடன் நெருங்கிப் பழகும் இடத்தில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் போன்றோருக்கும், 60 வயதுக்கு மேலான, இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. எனவே, மற்றவர்கள் மாஸ்க் அணிவது, கைகழுவுவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமே நோய்த்தொற்றி லிருந்து தற்காத்துக்கொள்ளலாம். `நமக்கு பூஸ்டர் டோஸ் கிடைக்கவில்லையே’ என்று கவலைப்படத் தேவையில்லை. பூஸ்டர் எடுத்துக்கொள்ளத் தகுதியானவர்கள் முதலில் எடுத்துக்கொள்ளட்டும். அடுத்து மற்றவர்களுக்கும் அது கிடைக்கப்பெறும்.
`பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளாவிட்டால் எனக்கு தொற்று வருமா’ என்று கேட்டால், மேற்குறிப்பிட்ட கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றினால் உங்களுக்கு தொற்று வருவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.

கர்ப்பிணிகளுக்கு பூஸ்டர் டோஸ் போடப்படுமா?
“கர்ப்பிணிகளுக்கு பூஸ்டர் டோஸ் போடுவது பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. தற்போதைக்கு கர்ப்பிணிகளும் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளலாம் என்பதால் அதைத் தவிர்க்க வேண்டாம். அதைத் தாண்டி அவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தேவையா என்பது இனிமேல்தான் தெரிய வரும். இப்போதைய நிலவரப்படி இரண்டாவது டோஸ் போட்டு 39 வாரங்கள் கழித்து அல்லது 9 மாதங்கள் கழித்துதான் பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். கர்ப்பகாலமே மொத்தமாக 40 வாரங்கள்தான். அதனால் கர்ப்பிணிகள் பூஸ்டர் பெறத் தகுதியானவர்கள் பட்டியலிலேயே வர மாட்டார்கள். 60 வயதுக்கு மேலானவர்களுக்குதான் இப்போது பூஸ்டர் டோஸ் பரிந்துரைக்கப்பட்டிருப்பதால் இளம் வயது கர்ப்பிணிகள் அந்தப் பட்டியலில் வர மாட்டார்கள்.”
இருமுறை கோவிட் தொற்றுக்குள்ளானவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தேவையா?
“ஏற்கெனவே ஒருமுறையோ, இரண்டு முறையோ கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கக்கூடும். அந்த நபர் கோவிட் தாக்குதலுக்குள்ளாகும் சூழலில் இருக்கிறார் என்றும் அர்த்தம். எனவே, எப்போது பூஸ்டர் எடுத்துக்கொள்வது என்பதைவிட, அரசு அறிவித்திருக்கும் பிரிவினரில் வருபவர் என்றால் மட்டுமே நீங்கள் பூஸ்டர் டோஸ் பற்றி யோசிக்க வேண்டும். அந்தப் பட்டியலில் வருபவர் என்றால் மருத்துவரிடம் ஆலோசித்து, உங்களுக்கு பூஸ்டர் தேவையா என்று தெரிந்துகொண்டு முடிவெடுக்கலாம்.”