Share on Social Media

“தினமும் 40 நிமிடங்கள் கார்டியோ, 20 நிமிடங்கள் எடைப் பயிற்சி, 50 புஷ் அப்ஸ், அத்துடன் காய்கறி, பழங்கள் நிரம்பிய அளவான சரிவிகித உணவு… இவைதான் என்னுடைய வெற்றிக்கான மந்திரங்கள். அன்று உதவாக்கரை என்று சொன்ன பலரும் இன்று என்னை மோட்டிவேட்டர் என்கிறார்கள். வாருங்கள் முறையான உடற்பயிற்சி செய்து நீங்களும் மோட்டிவேட்டராய் மாறுங்கள்” என்கிறார் இந்த சூப்பர் மாடல்.

தினேஷ் மோகன் சொல்வது போல நாமும் தினசரி உடற்பயிற்சியை ஆரம்பித்துவிடலாம். ஆனால், முறையான உடற்பயிற்சி என்கிறாரே அவர். அதென்ன முறையான உடற்பயிற்சி? அதற்கு உடல்வாகு பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் நாம்.

ஒவ்வொரு மனித உடலும் தனித்தன்மை கொண்டது. எப்படி ஒவ்வொருவரின் கைரேகையும் ஒவ்வொரு விதமோ அதேபோல, அவரவர் உடல்வாகும் தனித்துவம் மிக்கது. ஆனால், பொதுவாக எலும்புகளின் அளவு, சதைகளின் தன்மை மற்றும் கொழுப்பின் அளவு ஆகியவற்றைக் கொண்டு உடல்வாகை உடற்பயிற்சி மருத்துவர்கள் (Physical Medicine Physicians) மூன்றாகப் பிரிக்கிறார்கள். Ectomorph (எக்ட்டோமார்ஃப்), Mesomorph (மீஸோமார்ஃப்) மற்றும் Endomorph (எண்டோமார்ஃப்) என்று மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கின்றனர்.

இவர்களில் எக்ட்டோமார்ஃப் என்பவர்கள் Pencil frame ரக மனிதர்கள். ஒல்லியாக, உயரமாக, நீண்ட கால்களும், சதைப்பற்றில்லாத உடலும் கொண்டவர்கள். இவர்களுக்கான உடற்பயிற்சி மற்றும் உணவுமுறைகளைப் பரிந்துரைக்கும் இந்த மருத்துவர்கள், எக்டோமார்ஃப்களுக்கு நீண்ட நேரம் தாக்குப்பிடித்து நிற்கும், தடகளப்போட்டிகள், நீச்சல், சைக்ளிங், டென்னிஸ் ஆகிய உடற்பயிற்சிகள் சரியானவை என்கிறார்கள். அதேசமயம் உடற்பயிற்சியின்போது உடலின் எடையைக் குறைக்கும் ஏரோபிக் பயிற்சிகளை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள்.

கூடவே, எக்டோமார்ஃப்களுக்கு இன்சுலின் செயல்பாடு நன்றாக இருக்கும் என்பதால், அதிகக் கலோரிகள் கொண்ட மாவு உணவையும் (45%) அதனுடன் புரதங்கள் நிறைந்த மீன், இறைச்சியையும் (35%), அதேசமயம் பால் மற்றும் கொழுப்பு வகைகள் மிதமாகவும் உட்கொள்ள அறிவுறுத்துகின்றனர். அத்துடன் எக்டோமார்ஃப்கள் பரிந்துரைக்கப்பட்ட கலோரிகளுக்கு மேலாகவும் உணவை உட்கொள்ளலாம் என்பது இவர்களுக்கு டயட்டில் ஒரு போனஸ்.

உலகளவில் பிராட் பிட், ப்ரூஸ் லீ, கேட் மாஸ், எட்வர்ட் நார்டன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நம்ம ஊர் தனுஷ் மற்றும் விஜய் போன்றவர்கள் எக்ட்டோமார்ஃப்கள் உடல்வாகிற்கு சிறந்த உதாரணங்கள்.

அடுத்து வருவது, எண்டோமார்ஃப்கள். எக்டோமார்ஃப் உடல்வாகுக்கு நேர் எதிரான உடல்வாகு கொண்ட இந்த எண்டோமார்ஃப்கள், பொதுவாக குறைந்த உயரத்துடனும், உடலின் மத்தியப்பகுதியில் அதிக சதைப்பிடிப்புடனும் இருப்பவர்கள். பொதுவாக எண்டோமார்ஃப்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு கூடுதல் என்பதால் மாவு உணவு குறைவாகவும், தானியங்கள் மற்றும் பயிறு வகைகள் சற்று கூடுதலாகவும், காய்கறிகள் மிக அதிகமாகவும் பரிந்துரைக்கும் உணவு வல்லுனர்கள், தேவையைவிட 200-500 கலோரிகள் குறைந்த உணவே இவர்களுக்கு ஏற்புடையது என்கிறார்கள்.

அதேசமயம் இந்த எண்டோமார்ஃப்கள், முதலில் சாதாரண ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்துவிட்டு பிறகு தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் பரிந்துரைக்கிறார்கள். அத்துடன் உடலின் வலிமையையும், சக்தியையும் காட்டும் பளுதூக்குதல், மல்யுத்தம் போன்ற விளையாட்டுப் போட்டிகளில் இவர்கள்தான் ஜொலிப்பார்கள் என்கிறார் பேராசிரியர் மார்கோ. உலக அளவில் ஜெனிஃபர் லோபஸ், ஓப்ரா வின்ஃப்ரே, பீயான்ஸும் நம் ஊரில் பிரபு, ஜிப்ரான் மற்றும் மறைந்த எஸ்.பி.பி அவர்களும், இந்த தினேஷ் மோகன் கூட சில பிரபலமான எண்டோமார்ஃப்கள் எனலாம்.

மூன்றாவது வகை இந்த எக்ட்டோ எண்டோமார்ஃப் உடல்வாகுக்கு இடையில் இருக்கும் மீசோமார்ஃப்கள். இயற்கையிலேயே விளையாட்டு வீரர்கள், எளிதில் தசைவலிமை பெறுபவர்கள் என்பதுடன் எதையுமே சிறப்பாகச் செய்பவர்கள் என்று இவர்களைச் சொல்லும்போது புகழ்ந்து சொல்கிறார் பேராசிரியர் மார்கோ.

மீசோமார்ஃப்காரர்கள் மாவுச்சத்து, புரதச்சத்தும் கூடுதலாகவும், கொழுப்பு மிதமாகவும் உண்ணவேண்டும் என்பதுடன், அதிலும் ஒவ்வொரு முறையும் கையளவு உணவு, கலோரியின் தேவைக்கேற்ற உணவு என்பதே சிறந்தது என்கிறார்கள் வல்லுநர்கள்.

தசையை வலிமையாக்கும் உடற்பயிற்சிகளையும், மூச்சை மேம்படுத்தும் உடற்பயிற்சிகளையும் சமவிகிதத்தில் மீசோமார்ஃப்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தும் மருத்துவ அறிவியல், இவர்கள் கிரிக்கெட், டென்னிஸ், ரக்பி, எடை தூக்குதல் என எல்லாவற்றிலும் கலக்குவார்கள் என்கிறது.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

சில்வஸ்டர் ஸ்டாலோன், புரூஸ் வில்லீஸ், அன்னா கோர்னிகோவா… நம்மூரில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி என இந்தவகை உடல்வாகு கொண்ட எல்லோருமே மீசோபார்ஃப்கள்தான். ஆக, நமது உடல்வாகு என்ன வகையானது என்பதைத் தெரிந்து, அதற்கேற்ப உணவுப்பழக்கத்தையும் மாற்றியமைத்து செய்யும் உடற்பயிற்சியே, முறையான உடற்பயிற்சி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆனால், எல்லா உணவையும் உட்கொண்டு, எந்தவொரு உடற்பயிற்சியும் செய்யாமல் அதிக நாள் வாழலாம் என்று வாட்சப் சொல்லும்போது இதெயெல்லாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறீர்களா?

உண்மையில் எப்போதும் போல, அந்த வாட்சப் செய்தி பொய் என்பதுடன், மாரடோனா தொடங்கி இளம் வயதில் மரணத்திவர்களுக்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

உண்மையில் முறையான உடற்பயிற்சிதான் நம்மை நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழவைக்கும். அதைத்தான் தனது வாழ்க்கை மூலமாகப் புரிய வைக்கிறார் தினேஷ் மோகன் எனும் சூப்பர் மாடல்!

ஆம்… வியர்வையைக் காட்டிலும் அழகானதொரு உடை வேறொன்றும் இல்லை!

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *