Share on Social Media

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஓர் ஏழ்மையான யூதக் குடும்பத்தில் 1914 அக்டோபர் 28-ம் தேதி பிறந்த Jonas Edward Salk, அக்குடும்பத்தின் மூன்றுபேரில் மூத்த மகன். ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்த தந்தைக்கும், வீட்டு வேலை செய்து வந்த தாய்க்கும் பிறந்தாலும், நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள் என்று விடாது சொல்லும் தனது தாயின் வார்த்தைகளால் ஊக்கமடைந்து கல்வியில் அதிக கவனம் செலுத்தினார் சால்க். “குழந்தையாக இருந்த போது, அறிவியலில் எனக்கு சிறிதும் ஆர்வமில்லை… ஆனால் புதுமைகளில் ஈடுபாடு அதிகம் இருந்தது!” என்று சொன்ன சால்க், முதலில் நியூயார்க் நகர சட்டக் கல்லூரியில் தான் சேர்ந்திருக்கிறார். பிறகு தனது தாயின் அறிவுறுத்தலால் மருத்துவப் படிப்புக்கு மாறியவர், படிக்கும்போதே பரிசோதனைக்கூட தொழில்நுட்ப பணியாளராகவும் பணியாற்றியபடி 1939-ல் நியூயார்க் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டத்தைப் பெற்றார்.

தன் மகனுக்கு தடுப்பூசி போடும் ஜோனஸ் சால்க்

தன் மகனுக்கு தடுப்பூசி போடும் ஜோனஸ் சால்க்

அச்சமயத்தில் அமெரிக்காவில் போலியோவால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்படுவதைப் பார்த்த அவர், போலியோ தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறார்.

“என்னை நானே தொற்றுநோயை உண்டாக்கும் ஒரு வைரஸ் போல எண்ணிக்கொள்வேன். அப்படி நான் மாறினால் என்னவெல்லாம் செய்வேன் என்று யோசித்தபோது அது மிக பயங்கரமாக இருக்கும். அந்த பயங்கரம் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே நான் விடாமல் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டேன்!” என்ற சால்க்கின் ஏழு வருடத் தொடர் ஆராய்ச்சியின் முடிவில் 1955-ம் ஆண்டு உருவானதுதான், Injection Polio Vaccine என்ற போலியோ தடுப்பூசி.

“மனித உடற்கூறியல் என்னை ஈர்த்ததே இல்லை… ஆனால், மனிதநேயமும், இயற்கை சார்ந்த மனிதமும் என்னை ஈர்க்கின்றன!” என்று எப்போதும் கூறிய சால்க், தான் கண்டுபிடித்த போலியோ தடுப்பூசியை மற்றவர்களுக்கு செலுத்தும் முன்பு தனக்கும், தனது மனைவிக்கும், குழந்தைகளுக்கும் செலுத்திப் பார்த்த பிறகுதான் மற்றவர்கள் அதைப் பயன்படுத்த அனுமதித்தாராம்.

இத்தனைக்குப் பிறகும், கிட்டத்தட்ட 20 லட்சம் குழந்தைகளுக்கு செலுத்திப் யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை என்று உறுதியான பிறகுதான் சால்க் போலியோ தடுப்பூசி வெற்றி பெற்றதாக முறைப்படி 1953-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி அறிவித்து, அதன்பின்னர் 1957-ம் ஆண்டிலிருந்து பயன்பாட்டிற்கும் வந்திருக்கிறது.

ஜோனஸ் சால்க்

ஜோனஸ் சால்க்

இதனைத் தொடர்ந்து ஆல்பர்ட் சாபின் என்ற அமெரிக்க விஞ்ஞானியும் போலியோவுக்கு சொட்டு மருந்தைக் கண்டுபிடிக்க, உலகெங்கும் இந்த இரண்டு தடுப்பு மருந்துகளும் சேர்ந்துதான், இன்று போலியோ இல்லாத உலகம் என்ற நிலையை நம்மை அடைய வைத்திருக்கிறது.

எல்லாம் முடிந்து ஒரு பத்திரிகைப் பேட்டியில் நிருபர் ஒருவர், “போலியோ தடுப்பு மருந்துக்கான காப்புரிமை யாரிடம் உள்ளது?” என்று சால்க்கிடம் கேட்டபோது, “மனிதர்களுக்கு வெளிச்சம் தரும் சூரியனை யாராவது காப்புரிமை கேட்டு கொண்டாடினால் நீங்கள் என்ன சொல்வீர்கள், அது அநியாயம் இல்லையா? அதுபோல எனது தடுப்பூசி எலோருக்குமானது. அதற்கு நான் காப்புரிமை கோரப்போவதில்லை” என்று பதிலளித்திருக்கிறார்.

யோசித்துப்பாருங்கள்… கோவிட் பெருந்தொற்றின் அடுத்தடுத்த அலைகள் மூலமாக மனித இனமே கொன்றழிந்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், கோவிட் நோய்க்கு எதிரான ஒவ்வொரு தடுப்பு மருந்திற்கும் ஃபார்மா நிறுவனங்கள் காப்புரிமை கோரி வருவதுடன், தடுப்பூசிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான விலையை நிர்ணயித்து கோடிக்கோடியாக சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தனது கண்டுபிடிப்பை உலக மக்களுக்கு வழங்கிய ஜோனஸ் சால்க் எவ்வளவு பெரிய மாமனிதர்!

“மனிதர்கள் தாங்கள் படைக்கப்பட்டது எதற்காக என்பதை உணரவேண்டும். தாங்கள் செய்யும் வேலை அவர்கள் பிழைப்பதற்காக மட்டும் இல்லாமல் மற்றவர்களுக்கும் உதவி, தங்கள் மனம் திருப்தியடையும் வண்ணம் அது இருக்கவேண்டும்!” என்று ஜோனஸ் சால்க் ஒருமுறை கூறியிருக்கிறார்.

அவர் வாழ்க்கை கூட அப்படிப்பட்டதுதான்!

இப்போதைய நம் அனைவரின் தேவையும்… ஒரு ஜோனஸ் சால்க் தான். இன்று சால்க்கின் நினைவு நாள்!

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *