Share on Social Media

“தொற்று நோய்க்கு தடுப்பூசி இருப்பதுபோல புற்றுநோய்க்கும் தடுப்பூசி இருந்தா நல்லா இருக்குமல்ல டாக்டர்?’’

தனது தாய்க்கு ஏற்பட்டிருந்த கருப்பை புற்றுநோயைப் பற்றிச் சொல்லும்போது நண்பர் வருத்தத்துடன் சொன்ன வார்த்தைகள் இவை!

ஆம்… வேகமாகப் பரவி உயிர்களைக் கொன்றழிக்கும் தொற்றுநோய்களைக் காட்டிலும், நின்று நிதானமாக உடலுக்குள் பரவி உயிர்களை அழிக்கும் புற்றுநோய்தான் உலகம் முழுவதும் இதுவரை அதிக உயிர்களைக் கொன்றிருக்கிறது. அதிலும், கோவிட் போன்ற எண்ணற்ற தொற்று நோய்களுக்கு தடுப்பூசிகள் இருப்பதுபோல, புற்றுநோய்களுக்கு தடுப்பூசிகள் இல்லையென்றாலும், ஒன்றே ஒன்று இருக்கிறது.. அதுதான் ‘ஹெச்பிவி தடுப்பூசி’.

மனிதர்களின் உயிர்காக்கும் கண்டுபிடிப்பான தடுப்பூசிகள் இதுவரை 26 வகையான தொற்றுநோய்களுக்கு கண்டறியப்பட்டுள்ளன. அந்த வரிசையில் சேர்ந்துள்ளதுதான் இந்த ஹெச்பிவி எனும் புற்றுநோய்த் தடுப்பூசி. இந்த புற்றுநோய் தடுப்பூசியைப் பற்றி அறியும் முன், சில புள்ளி விவரங்கள் தெரிந்து கொள்வோம்.

HPV vaccine

சென்ற வருடம் கோவிட் காலத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் கூடுதலான நபர்கள் புற்றுநோயால் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், புற்றுநோய் கோவிட் போல ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவாது என்பதால் நாம் அதைப்பற்றி கவலைப்படுவதே இல்லை என்பதுதான் வேதனை. ஆண்களை நுரையீரல், ப்ராஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் அதிகம் பாதிக்கிறது என்றால், பெண்களை அதிகம் பாதிப்பது மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய்.

அதிலும் நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் மிகப்பெரிய சவாலாக விளங்குவது, செர்வைக்கல் கேன்சர் என்ற கருப்பைவாய் புற்றுநோய் தான். வருடந்தோறும் 10 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் உலகம் முழுவதும் கருப்பைவாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றால் அதில் நமது நாட்டில் மட்டும் ஒரு லட்சம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். மற்ற புற்றுநோய்களை போல, இதில் நோயின் ஆரம்ப அறிகுறிகள் வெளியே தெரியவில்லை என்பதால், நோய் முற்றிய ஸ்டேஜ் 3 அல்லது 4-ல் தான் பெரும்பான்மையான பெண்கள் கண்டறியப்படுகின்றனர். இதனாலேயே கண்டறியப்பட்ட சில மாதங்களில் அந்தப் பெண்கள் இறக்கவும் நேரிடுகின்றன.

இந்தப் புற்றுநோயால் இந்தியாவில் மட்டும் ஒருமணி நேரத்திற்கு 8 பெண்கள், 8 நிமிடங்களுக்கு ஒரு பெண் இறக்க நேரிடுகிறது என்கிறது இந்தியப் புற்றுநோய் தடுப்பு அமைப்பு. அதாவது, தினமும் ஒரு ஏர்பஸ்-320 விமானம் விழுந்து நொறுங்குவதற்கு ஒப்பான இழப்புகளை கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுத்தி வருகிறது.

ஏன் வருகிறது இந்தக் கொடூரமான கருப்பைவாய் புற்றுநோய், இதனைத் தடுக்கும் வழிகள் என்ன என்ற இரு கேள்விகளுக்கும் பதிலாக வருகிறது ஹெச்பிவி!

பொதுவாக பாலியல் நோய்கள், புகைப்பிடித்தல், வாழ்க்கை முறைமாற்றம், சுற்றுச்சூழல் மாசு போன்றவை கருப்பைவாய் புற்றுநோய்க்கு காரணமாக இருக்கலாம் என்றாலும், மிக முக்கியக் காரணமாக இருப்பது HPV என்ற Human Papilloma Virus என்ற டிஎன்ஏ வகை வைரஸ் தொற்றுதான். இதை, தனது ஆராய்ச்சியின் மூலம் முதன்முதலில் உறுதிசெய்தது ஜெர்மானிய மருத்துவ விஞ்ஞானியான ஹெரால்ட் ஹாசன் (Herold Zur Hausen).

E6QEjywVEAs2Rv2 Tamil News Spot
HPV vaccine

இந்த ஹெச்பிவி கிருமிகளில் ஏறத்தாழ இருநூறுக்கும் அதிகமான வகைகள் இருந்தாலும், HPV 16, 18, 31, 45 ஆகிய வகைகள் தான் புற்றுநோய் தாக்கத்தை ஏற்படுத்த கூடியது என்பதையும் தனது ஆராய்ச்சியில் குறிப்பிட்ட ஹெரால்ட், இதனை 1973-ம் ஆண்டிலேயே உலக பாப்பில்லோமா கருத்தரங்கில் பகிர்ந்தார். அதிலும் குறிப்பிட்ட அந்த வகை வைரஸ்கள் ஆரம்பத்தில் நோய்த்தொற்றை ஏற்படுத்துவதுடன், அப்படியே உடலுக்குள் பல வருடங்கள் தங்கி பின்னாளில் புற்றுநோயையும் ஏற்படுத்துகின்றன என்பதை உறுதிசெய்தார் ஹெரால்ட் ஹாசன்.

அப்போது மறுக்கப்பட்ட அவரது ஆய்வு, 25 ஆண்டுகளுக்குப் பின் ஒப்புக்கொள்ளப்பட்டு, பின்பு அதற்கான நோபல் பரிசும் 2008-ம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்டது. கருப்பைவாய் புற்றுநோய் மட்டுமன்றி பெண் பிறப்புறுப்பு, ஆண் பிறப்புறுப்பு, ஆசனவாய் என மற்ற புற்றுநோய்களுடன் condyloma என்ற மருக்கள் உதடு மற்றும் பிறப்புறுப்புகளில் ஏற்படுவதற்கும் இந்த ஹெச்பிவி தான் காரணியாக உள்ளது. அதிலும் இந்த ஹெச்பிவி வைரஸ்களின் தாக்கம் reproductive age எனும் சந்ததிகளை உற்பத்தி செய்யும் 20லிருந்து 40 வயதுக்குட்டவர்களையே பாதிக்கிறது என்பதால் இதை வருமுன்னரே காப்பது மிகவும் அவசியமாகிறது.

நோய் எதனால் உருவாகிறது என்பது தெரியாமல் இருந்தவரை தடுப்புமருந்து கண்டுபிடிப்பது சோதனையாக இருந்தாலும், காரணத்தை ஹெரால்ட் ஹாசன் கண்டுபிடித்த பிறகு இதற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பும் வேகம் பிடித்தது.

E6rXaIEVcAEeW2 Tamil News Spot
HPV vaccine

ஆஸ்திரேலியாவின் க்வீன்ஸ்லாண்ட் பல்கலைக்கழகத்தில், இயான் ஃப்ரேசர் (Ian Frazer) என்ற ஆஸ்திரேலிய மருத்துவ விஞ்ஞானி, 2006ம் ஆண்டு HPV கிருமிக்கு தடுப்பூசியை முதலில் கண்டுபிடிக்க, தொற்றுநோய்களுக்கு மட்டுமல்ல… புற்றுநோய்க்கும் எதிராகவும் முதன்முதலாக ஒரு தடுப்பூசி கண்டறியப்பட்டது மருத்துவ வரலாற்றின் முக்கியமான மைல்கல்லாகவே மாறியது.

இந்த ஹெச்பிவி தடுப்பூசிகள், மற்ற தடுப்பூசியைப் போல நோயை ஏற்படுத்தாமல், நேரடியாக நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து, வைரஸ் தொற்றை 99.7% வரை தவிர்ப்பதுடன், 90% கருப்பைவாய் புற்றுநோயையும், மற்ற பாதிப்புகளையும் தடுக்கின்றன. கென்யா, இலங்கை உட்பட்ட 100க்கும் அதிகமான நாடுகள் ஹெச்பிவி தடுப்பூசி தங்களது தேசிய தடுப்பூசித் திட்டத்திலும் சேர்த்து வழங்கப்பட்டு வந்தாலும் இந்தியாவில் சில நடைமுறைச் சிக்கல்களால் இதுவரை ஹெச்பிவி வேக்சின் இலவசமாக வழங்கப்படுவதில்லை.

என்றாலும் விரும்புபவர்கள் தனியார் மருத்துவமனைகளில் 9-14 வயதிலிருக்கும் பெண் குழந்தைகளுக்கு ஆறுமாத கால (0,6) இடைவெளியில் இரண்டு முறையும், 15- 26 வயது வரை (0,2,6) ஆறு மாதங்களில் மூன்று முறையும் போட்டுக் கொள்ளலாம். கூடவே பெண்ணின் வயது கூடும் போதோ, திருமண வாழ்க்கைக்குப் பிறகோ இந்த தடுப்பூசி செயல் (efficacy) குறைகிறது என்பதால் பெண்கள் தங்கள் பதின்பருவத்திலேயே போட்டுக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

E6fKT3GUYAQ Dp6 Tamil News Spot
HPV vaccine

பெண்களைப் போலவே ஆண்களுக்கும் இது ஆசனவாய்ப் புற்றுநோய் உட்பட பல்வேறு பாதிப்புகளையும் தடுப்பதால் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அரசுகள் ஆண், பெண் இருபாலினருக்கும் HPV தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளன.

என்றாலும் கர்ப்பிணிப் பெண்கள், அதீத அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் இந்தத் தடுப்பூசியை நிச்சயமாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று கூறும் மருத்துவர்கள், இந்தத் தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளான தலைவலி, காய்ச்சல், தசைவலி, தலைசுற்றல் ஆகியன மற்ற எந்த தடுப்பூசியையும் போன்றதே என்று தைரியமூட்டுகின்றனர்.

தற்சமயம் இந்தியாவில் கிடைக்கப்பெறும் Gardasil (quadrivalent) மற்றும் Cervarix (bivalent) என்ற இரண்டு வகையான தடுப்பூசிகளின் விலை, கிட்டத்தட்ட 3500 ரூபாய் என்பதுடன் இந்தத் தடுப்பூசியை இலவசமாக அரசாங்கம் வழங்குவதற்கான பரிந்துரைகளை இந்திய குழந்தைநல அமைப்பும், பெண்கள் நல அமைப்பும் தொடர்ந்து முனைந்து வருகின்றன.

எத்தனையோ புற்றுநோய்களால் மனிதர்கள் மரணித்துக் கொண்டிருக்க, இப்படி ஹெச்பிவி எனும் ஹியூமன் பேப்பில்லோமா வைரஸ் தடுப்பூசி, உண்மையில் புற்றுநோய்களைத் தடுக்கும் ‘ஹியூமன் ப்ரொட்டக்டிவ் தடுப்பூசியாக’ நம்மை பாதுகாக்கிறது.

தனது தாயின் புற்றுநோய் குறித்து பெரிதும் வருத்தப்பட்ட நண்பருக்கும், நம் அனைவருக்குமான இன்றைய மெசேஜ் இதுதான்…

நாம் மிகவும் நேசிக்கும் நமது அடுத்த தலைமுறையை.., அதாவது நமது குழந்தைகளை புற்றுநோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாக்க, ஹெச்பிவி தடுப்பூசி இருப்பதையும், அதைப் போடுவது அவசியம் என்பதையும் தெரிந்துகொள்வோம்.

Why talk of cure, when you can prevent it!

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *