Share on Social Media

திடீரென பெட்ரோலுக்குப் பஞ்சம் வந்துவிட்டது என்றால் என்ன செய்வோம்? என்ன விலை என்றாலும் முந்தைய நாள் இரவே க்யூவில் நின்று எவ்வளவு செலவானாலும் பெட்ரோலை வாங்கி நிரப்பிக் கொள்வோமா?! இப்போது நம் பக்கத்து வீட்டுக்காரர் காரை நிறுத்திவிட்டு காலையில் சிரித்தபடி சைக்கிளில் வேலைக்குக் கிளம்பினால் அவரைப்பற்றி என்ன நினைப்போம்?

இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் ஒரு நாடே சைக்கிளுக்கு மாறியிருக்கிறது!

அந்த தேசம் நெதர்லாந்து.

நாட்டில் வசிக்கும் ஒன்றரை கோடி மக்களிடம், இரண்டு கோடி மிதிவண்டிகள் இருக்கும் நாடு அது. தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் மட்டும், சுமார் 400 கிலோமீட்டர் நீளத்தில் சைக்கிள்கள் ஓட்டும் பாதைகள் கொண்ட நாடு. பொழுதுபோக்குக்காக இல்லாமல், பணிக்கு, பள்ளிக்கு எனத் தங்களது பெரும்பங்கு போக்குவரத்தை மிதிவண்டிகள் மூலமாகவே முறைப்படுத்தி, செயல்படுத்தி வரும் நாடு.

‘டச்சு சைக்ளிங்’ என்ற பிரத்தியேகமான திட்டத்தை உருவாக்கி, இந்த ஆண்டில் மட்டும் இன்னும் இரண்டு லட்சம் மக்களை, தங்களது கார்களில் இருந்து, மிதிவண்டிக்கு மாற்ற இருக்கும் நாடு நெதர்லாந்து. எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால் மிதிவண்டிகளுக்கான நாடு தான் இந்த நெதர்லாந்து!

சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டதும் இங்கல்ல, அதிகம் தயாரிக்கப்படுவதும் இங்கல்ல. ஆனால், ஏன் இப்படி மக்கள் சைக்கிளைப் பிரியாமல் பிரியமாக இருக்கிறார்கள் என்பதற்குப் பின்னால் ஒரு நெகிழ்வான வரலாறு இருக்கிறது.

எல்லா வளர்ந்த நாடுகளையும் போலவே இரண்டாம் உலகப்போருக்குப் பின், 1950, 60-களில் நெதர்லாந்தின் கார் மார்கெட்டும் சூடுபிடிக்க, அதன் பெருநகரங்கள் அனைத்திலும் சாலைப் போக்குவரத்து அதிகரித்ததோடு போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது.

1970-ம் ஆண்டில், அந்த சிறிய நாட்டில் வாகன விபத்துகளால் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இறக்க, அதில் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை மட்டும் 450. அதிர்ந்து போன அரசு யோசிக்க ஆரம்பித்தது.

தனது குழந்தையை கார் விபத்தில் பறிகொடுத்த பத்திரிகையாளர் விக் லாங்கன்ஹாஃப், “குறைந்த மக்கள்தொகை கொண்ட ஒரு சிறிய நாட்டில் இவ்வளவு விபத்துகளா?” என தன் அனுபவத்தை முன்வைத்து முன்னணி நாளிதழில் எழுதியதோடு, ‘Stop De Kindermood’ எனும் பெயரில் ‘குழந்தை கொலைகளைத் தவிர்த்திடுங்கள்’ என்ற இயக்கத்தையும் தொடங்கினார். இதேநேரத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட எண்ணெய் போரில் சிமிழி விளக்கிற்கு ஊற்றக்கூட மண்ணெண்ணெய் இல்லாமல் இருண்டுபோன நெதர்லாந்து, பயணப் போக்குவரத்துக்கு சைக்கிளை கையிலெடுத்து அதற்கான வழிமுறைகளையும் நெறிபடுத்தியது.

EiXvhz7WkAAfYvD Tamil News Spot

நாடு முழுவதும் 35,000 கிலோமீட்டர் நீளத்தில் மிதிவண்டி சாலைகள், உலகிலேயே மிகப்பெரிய அண்டர்கிரவுண்ட் சைக்கிள் பார்க்கிங் ஆகியவற்றை உருவாக்கியதோடு, மோட்டார் வாகனங்களை பின்னுக்குத் தள்ளி சைக்கிளுக்கு முன்னுரிமை தரும் பிரத்தியேக சிக்னல்கள், சைக்ளிங் டூரிசம், அதற்காக அரசே நடத்தும் வாடகை சைக்கிள்கள் என்று ஒரு நாடே இன்று உலகிற்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. இயற்கையிலேயே நெதர்லாந்தின் தட்பவெப்ப சூழல் அதற்கேற்ப அமைந்திருக்க, சைக்கிளிங் தேசம் சாத்தியமானது.

அதற்குப்பின் வாகனங்கள் குறைந்து, சைக்கிள்களின் பயன்பாடு அதிகரிக்க, காற்றில் கரியமிலவாயு குறைந்ததுடன், வாகனங்களின் இரைச்சலும் குறைந்து, சுற்றுச்சூழல் மாசு இதுவரை 40% வரை குறைந்துள்ளது என்று கூறும் நெதர்லாந்து அரசு, சைக்ளிங் தருவிக்கும் ஆரோக்கியத்தின் உபயோகத்தையும் கணக்கிட்டு கூறுகிறது.

E24vAgZWUAI Ro7 Tamil News Spot

தொடர்ந்து சைக்கிள் ஓட்டும்போது தசைகள் வலுவடையும், கொழுப்புகள் எரிக்கப்படும், உடலின் ஆரோகியம் கூடும். கலோரிகள் குறைந்து, உடல் எடையும் குறையும். இவற்றின் காரணமாக, வாழ்க்கைமுறை நோய்களான சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், மாரடைப்பு குறையும் ; வாழ்நாள் நீடிக்கும் என்ற பொதுவான பலன்களுடன், தனது மக்களிடையே புற்றுநோய் 40%, இருதய நோய் 52%, இறப்பு விகிதம் 40% வரை குறைந்துள்ளது என்பதால் எரிபொருள் சிக்கனத்துடன் மருத்துவ செலவுகளும் குறைந்திருக்கின்றன என்கிறது நெதர்லாந்து அரசு. எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் மகிழ்ச்சி நிலை 59% அதிகரித்துள்ளது என்றும், உலகின் மகிழ்ச்சியான குழந்தைகள் டச்சு குழந்தைகள்தான் என்றும் மகிழ்வுடன் கூறுகிறது.

இவையனைத்திற்கும் மேலாக தனது நாட்டின் குழந்தைகள் நடைபயிலத் துவங்கும் முன்பே குழந்தைகளுக்கான ‘bakfiets’ என்ற சிறப்பு இருக்கைகள் கொண்ட சைக்கிள்கள், நடைபயிலத் துவங்கியவுடன் குழந்தைகளுக்கு சிறப்பு சைக்ளிங் மற்றும் குழந்தைகள் சிறப்பு பாதைகள், பள்ளிக்கு 90% மாணவர்கள் சைக்கிளில் மட்டுமே பயணம், பாடத்திட்டத்தில் சைக்ளிங்கிற்கு தனி மதிப்பெண்கள் என வருங்கால சந்ததியினரையும் ஆரம்பத்திலிருந்தே ஆரோக்கியத்தின் பாதையில் செல்ல ஆவன செய்கிறது ‘தி சைக்கிளிங் பாரடைஸ்’ என்ற பெயருக்கு எல்லாவிதத்திலும் பொருத்தமாக நிற்கும் இந்த நெதர்லாந்து.

அடுத்தமுறை உங்களில் யாருக்காவது நெதர்லாந்து செல்ல யோசனை இருந்தால், தயவுசெய்து உங்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமா என்பதையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்!

#BicycleDay

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *