Share on Social Media

ஒரு சிக்கன் தந்தூரியால் அன்று உயிர் போக இருந்தது ஜேக் ஸ்நெல்லிங் எனும் இளைஞருக்கு! கோவிட் பெருந்தொற்று, லாக்டெளன், தடுப்பூசி என அனைத்தும் தாண்டி, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு நண்பர்களுடன் மதிய உணவிற்காக அந்த பாங்கர் தந்தூரி உணவகத்திற்குச் சென்ற ஜேக் ஸ்நெல்லிங், தான் ஆர்டர் செய்த தந்தூரியை சாப்பிடும்போது தொண்டையில் சிக்கிக்கொண்டது சிக்கன்.

அடுத்த 30 விநாடிகளில் மூச்சு விடமுடியாமல் திணறி, ஜேக் முகம் முழுவதும் கரும்சிவப்பானதைக் கண்ட நண்பர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அதேசமயம், அதைக் கவனித்த அந்த உணவக வெய்ட்டரான ஒரு பங்களாதேஷி, ஓடிவந்து ஜேக்கின் பின்பக்கமாக நின்று இரண்டு கைகளாலும் அவர் வயிற்றைக் கட்டித் தூக்கி நான்கைந்து முறை குலுக்க, தொண்டையில் அடைத்திருந்த சிக்கன் வெளிவந்து, நிலைமை சீரானது. தக்க சமயத்தில் தனது உயிரைக் காப்பாற்றிய அந்த ஷேக் நஜ்முல்லுடன், ஜேக் ஸ்நெல்லிங் எடுத்துக்கொண்ட செல்ஃபி, சமீபத்தில் வலைதளங்களில் உலகெங்கும் வைரலாகியது.

ஜேக்கை அந்த வெய்ட்டர் காப்பற்றியது ஏதோ கிராம வைத்தியம் போலத் தோன்றினாலும், உண்மையில் அது ஒரு அருமையான முதலுதவி முறையாகும்.
மூச்சுத்திணறல் அடைந்தவர்களின் உயிரைக் காப்பாற்ற ஓர் எளிய முறையைத் தேடிக் கொண்டிருந்த ஹென்றி ஹெய்ம்லிக் என்ற சின்சினாட்டி மருத்துவமனையின் தலைமை இருதய அறுவைசிகிச்சை நிபுணர், 1974-ம் ஆண்டு, விசிலை விழுங்கிவிட்ட தனது நாய்க்கு எதேச்சையாக செய்த முதலுதவியின் மூலமாக இந்த முறையைக் கண்டறிந்தார்.

HeimlichManeuverDay

அதே வருடம் ஆகஸ்ட் மாதம், மருத்துவமனை கேன்டீனில் உணவருந்திக் கொண்டிருந்த ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது, மற்ற மருத்துவர்கள் அதை ஹார்ட் அட்டாக் என்று கருதி, ‘கேஃபே கொரோனரி’ என்று சொல்ல, அதை மறுத்த டாக்டர் ஹென்றி ஹெய்ம்லிக் முதன்முதலில் மனிதருக்கும் அதைச் செய்து உயிரைக் காப்பாற்றியுள்ளார். இந்த எளிய உயிர்காக்கும் முதலுதவி முறையை அமெரிக்க மருத்துவ சங்கத்தின் பத்திரிகை ‘ஹெய்ம்லிக் மென்யூவர்’ என்று குறிப்பிட, பின்பு அப்பெயரே நிலைத்துவிட்டது.

ஏதேனும் ஒரு பொருள் தொண்டையில் சிக்கிக்கொண்டு, புரை ஏறி, காற்றுக்குழாயை (trachea) லேசாக அடைக்கும்போது, நுரையீரலுக்கு செல்லும் காற்று தடைபட்டு வரும் லேசான மூச்சுத்திணறலுக்கு பெரும்பாலும் முதலுதவி எதுவும் தேவைப்படுவதில்லை. ஆனால், குழந்தைகள் ரப்பர், விசில், கோலிக்குண்டு, காயின்கள் போன்றவற்றை அறியாமல் வாயில் போட்டுக் கொள்வதாலும், பெரியவர்கள் உணவருந்தும்போது பேசியோ, சிரித்தோ தொண்டையில் உணவு மாட்டிக் கொள்வதாலும், அவை மூச்சுக்குழாயில் முழுமையான அடைப்பை ஏற்படுத்தும்போது உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் குறைந்து பல சிக்கல்கள் உருவாகிறது.

இதில் இருமல், மூச்சுத்திணறல் ஏற்படுவது மட்டுமன்றி உதடுகளும், நகங்களும் கருஞ்சிவப்பு அல்லது நீல நிறமாக மாறி மயக்கநிலை ஏற்படுவதுடன் மருத்துவமனைக்கு செல்வதற்குள்ளேயே உயிருக்கு கூட ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால், இந்த உயிர்காக்கும் ஹெய்ம்லிக் மென்யூவர் முதலுதவி முக்கியத்துவம் பெறுகிறது.

பொதுவாக, இரண்டு வயதிற்கு மேலான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கேனும் இந்த choking என்ற அடைப்பு ஏற்பட்டால், முதலில் அவர்களுக்கு சுயநினைவு உள்ளதா என்பதைப் பரிசோதித்துவிட்டு, உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் அவசர உதவிக்கு தகவல் அளிக்கவேண்டும். பின்பு பாதிக்கப்பட்டது குழந்தை என்றால் குழந்தையை குப்புற வாக்கில் வைத்து, ஒரு கையால் முன்பக்கத்தை தாங்கியபடி, மறுகையால் தோள்பட்டை எலும்புகளுக்கு இடையில் உள்ளங்கையின் அடிப்பாகத்தால் ஓங்கித் தட்ட வேண்டும்.

பாதிக்கப்பட்டது பெரியவர் என்றால் அவரை நேராக நிற்கச்செய்து, அவருக்கு நேர் பின்பாக நின்றபடி, உள்ளங்கைகளால் தோள்பட்டை எலும்புகளுக்கு இடையேயான முதுகுப்பகுதியை ஐந்து முறை பலமாகத் தட்ட வேண்டும். அடுத்து, அதேபோல நின்றபடி, விலா எலும்புகளுக்கு கீழே இடுப்புப் பகுதியை அணைத்தபடி இரு மணிகட்டின் உட்பகுதியையும் தொப்புளுக்கு மேலான வயிற்றுப்பகுதியில் வைத்து, அதிக அழுத்தத்தை தரவேண்டும். இந்த அழுத்தத்தால் மார்பின் அழுத்தம் அதிகமாகி, மூச்சுக்குழாயில் சிக்கிய பொருளை அது வேகமாக வெளியே தள்ளிவிடுகிறது. இந்த எளிய முறை தான் ஹெய்ம்லிக் மென்யூவர் எனப்படுகிறது.

Tamil News Spot

இங்கு முக்கியமாக, விழுங்கிய பொருள் நன்றாக வெளியே தெரிந்தால் மட்டுமே வாய்க்குள் விரலைவிட்டு எடுக்க முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் மருத்துவர்கள், அருகில் யாரும் இல்லாத சூழலில் நமக்கு நாமே கூட ஹெய்ம்லிக் மென்யூவரை மேற்கொள்ளலாம் என்றும், அதற்கு லேசாக முன்சாய்ந்தபடி நமது மணிக்கட்டைக் கொண்டு நாமே நமது வயிற்றில் அழுத்தத்தை தந்து சிக்கிய பொருளை வெளியேற்றவும் செய்யலாம் என்றும் கூறுகின்றனர்.

இதில் குழந்தைகள், பெரியவர்கள் யாரென்றாலும், இந்த ஹெய்ம்லிக் முதலுதவி பயனளிக்காதபோது, உடனடியாக மருத்துவமனைக்கு அவர்களை அழைத்து செல்ல வேண்டுமென்றும், தேவைப்படும்போது CPR எனும் இருதய மீட்பு முதலுதவியை மேற்கொள்வதும் அவசியமென்றும் அறிவுறுத்துகின்றனர்.

இவையனைத்தைக் காட்டிலும், வருமுன் தடுப்பதே நல்லது என்று கூறும் டாக்டர் ஹென்றி ஹெய்ம்லிக் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் மீது தனிகவனம் செலுத்துவதுடன், அனைவருமே உணவு உட்கொள்ளும் போது கவனம் செலுத்தும்படியும் அறிவுறுத்துகிறார். இது ஒருவிதத்தில், சாப்பிடும்போது பேசாதே, டிவி பார்க்காதே, புத்தகம் படிக்காதே என்று நம்மை திட்டிக் கொண்டேயிருக்கும் நமது பாட்டியை நினைவுபடுத்துகிறதல்லவா?!
#HeimlichManeuverDay

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *