Share on Social Media

மிரியத்தின் ஆராய்ச்சி வெற்றியை அறிந்த நூற்றுக்கணக்கான தம்பதியர், டாக்டர் ராக் மற்றும் உதவியாளர் மிரியத்திற்கு கடிதங்கள் மூலமாகத் தொடர்பு கொண்டு, தங்களுக்கு சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொள்ள ஆரம்பித்த அதே சமயத்தில், “செயற்கை கரு என்பது மிகப்பெரிய ஊழல்” என்று மருத்துவர்கள் சிலரே எதிர்க்க ஆரம்பித்தனர். அதேசமயம், இது இயற்கைக்கு எதிரானது என்று மத ரீதியாகவும் பிரசாரம் செய்யப்பட பிரச்னை பெரிதானது.

பிற்பாடு, மிரியம் மென்கின் உடனிருந்த மருத்துவர்கள் வேறு நாட்டிற்கும், வேறு துறைக்கும் மாற்றப்பட்ட… அதேசமயம் அவரது கணவர், நார்த் கரோலினாவின் பல்கலைக்கழகத்திற்கு தனது பணியை மாற்றிக்கொள்ள மிரியம் தனியாகிப் போனார். ஆராய்ச்சிக்கும் தடங்கல் ஏற்பட்டது.

சோதனைகள் எப்போதும் தனித்து வருவதில்லையே… மிரியத்தின் மகள் லூசிக்கு வலிப்பு நோய் மற்றும் மன வளர்ச்சி குறைபாடு, கணவரின் போக்கில் திடீர் மாற்றம் என்பதால் விவாகரத்து என வாழ்க்கை அவரை புரட்டிப் போட்டது.
தனியாக நின்று மகளையும், இளைய மகன் கேப்ரியேலையும் வளர்க்க வேண்டிய சூழலில் அவரது கனவுகள் அப்படியே கனவுகளாகவே நின்றுபோனது. என்றாலும், தனது ஆராய்ச்சியைத் தொடர அவர் எடுத்த முயற்சிகளுக்கு, ‘Rape in vitro’ என்ற அவப்பெயர் கிடைக்க, முற்றிலும் நிலைகுலைந்து போனார் மிரியம்.

காலம் எவ்வளவு கொடூரங்களைச் செய்யும் பாருங்கள். உயிரை உற்பத்தி செய்ய தான் எடுத்த அத்தனை முயற்சிகளையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, கடைசியாக அவர் 1950-ம் ஆண்டு கையிலெடுத்தது கருத்தடை முறைகள் பற்றிய ஆராய்ச்சி.
மிரியம் மென்கின் முதன்முதலாக செயற்கை கருவை உருவாக்கிய நாளிலிருந்து, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, 1978ம் ஆண்டு, ஜூலை 25ம் தேதி, இங்கிலாந்து மருத்துவர்கள் ராபர்ட் எட்வர்ட்ஸ் மற்றும் பாட்ரிக் ஸ்டெப்ட்டோ ஆகியோரின் முயற்சியால் லூயிஸ் பிரவுன் என்ற உலகின் முதல் டெஸ்ட் ட்யூப் குழந்தை பிறந்ததை உலகமே கொண்டாடிக் கொண்டிருந்தது.

தான் உருவாக்கிய அந்த செயற்கை முறையைப் பின்பற்றித்தான், அந்தக் குழந்தை பிறந்தது என்று புன்னகையுடன் தனது மகளை மடியில் வைத்துக்கொண்டு அந்த வெற்றியைப் படித்துக் கொண்டிருந்தார் மிரியம் மென்கின் எனும் தாய்.
இதோ… முதல் டெஸ்ட் ட்யூப் குழந்தை பிறந்து இன்றோடு 43 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன.

இன்று பல லட்சம் குழந்தைகளும் உலகெங்கும் பிறந்து, அம்மாக்களைப் பெற்றுக் கொடுக்கும் மகப்பேறு மருத்துவர்களுக்கெல்லாம் தாயாக விளங்கும் மிரியம் மென்கினின் அறிவியலை சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

எத்தனையோ தோல்விகளைச் சந்தித்திருந்தாலும் “எங்களது பெருமிதமும், எங்களது மகிழ்ச்சியும்” என்ற மிரியம் மென்கின்னின் குறிப்புடன் கூடிய இரண்டு செல் கரு, இன்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழக நூலகத்தில் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.வாழ்க்கை உங்களைப் புரட்டிப் போட்டாலும், வரலாறு உங்களை விடுதலை செய்யும் என்பதற்கு அத்தாட்சியாக!

#IVFDAY

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *