புதுச்சேரியில் பல்வேறு முயற்சிகள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் தொற்றிக் கொண்ட பா.ஜ.க, 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலை சந்தித்தது. அதுவரை புதுச்சேரி தேர்தலில் வெற்றியை பார்த்திராத பா.ஜ.க, ரங்கசாமியிடம் இருந்து 10 சீட்டுகளை பெற்று அதில் 6 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அத்துடன் இரண்டு அமைச்சர்கள், சபாநாயகர் பதவியையும் பெற்றுக்கொண்டு ஆட்சியில் பங்கெடுத்து வருகிறது பா.ஜ.க. கூட்டணி கட்சியான பா.ஜ.க மத்தியில் ஆட்சியில் இருப்பதால் இந்த ஆட்சியில் அனைத்தையும் எளிதாக செய்துவிடலாம் என்று கணக்கு போட்டிருந்தார் முதல்வர் ரங்கசாமி.

ஆனால் அவர் அறிவித்த பல திட்டங்களை புதுச்சேரியில் செயல்படுத்த முடியாத நிலை தொடர்கிறது. தலைமைச் செயலகத்தில் இருந்து அனைத்து கோப்புகளும் திருப்பி அனுப்பப்படுகிறது. தீபாவளிக்காக அறிவிக்கப்பட்ட 10 கிலோ அரிசி, இரண்டு கிலோ சர்க்கரையை தீபாவளி முடிந்த பிறகும் முழுமையாக கொடுக்க முடியவில்லை. இந்த நிலையை கண்டித்து பாஜக எம்.எல்.ஏக்களே போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட எதையும் இன்னும் நடை முறைப்படுத்த முடியவில்லை. இதனிடையே சமீபத்தில் பெய்த கனமழையை தொடர்ந்து அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5,000 மழை நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார் முதல்வர் ரங்கசாமி. ஆனால் அதை தற்போதுவரை நடைமுறைப்படுத்த முடியவில்லை.