Share on Social Media


புதுச்சேரி : கவர்னரை கண்டித்து புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் அமைச்சரின் போராட்டம் ஐந்தாவது நாளாக நேற்று தொடர்ந்தது.

புதுச்சேரி நலத் துறை அமைச்சர் கந்தசாமி தனது துறைகள் சார்ந்த 15 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காதது குறித்து விவாதிப்பதற்கு கவர்னர் கிரண்பேடியிடம் நேரம் கேட்டிருந்தார். அமைச்சர் குறிப்பிட்டுள்ள திட்டங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளின் செயலர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது; விவாதிப்பதற்கான தேதி நேரம் தெரிவிக்கப்படும்’ என கவர்னர் பதில் கடிதம் அனுப்பி இருந்தார்.

கவர்னரின் பதிலில் திருப்தி அடையாத அமைச்சர் கந்தசாமி கடந்த 10ம் தேதியன்று மாலையில் புதுச்சேரி சட்டசபை வளாகத்தின் முகப்பு மண்டபத்தில் அமர்ந்து காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினார்.இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் சக அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் காங். மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழையையும் குளிரையும் பொருட்படுத்தாமல் முகப்பு மண்டபத்திலேயே அமைச்சர் இரவு நேரத்தில் படுத்து உறங்குகிறார். காலையில் எழுந்து போராட்டத்தை தொடர்கிறார். அமைச்சர் கந்தசாமியின் போராட்டம் பொங்கல் பண்டிகையான நேற்றும் ஐந்தாவது நாளாக தொடர்ந்தது.

அமைச்சர் கந்தசாமி கூறும்போது ‘ஏற்கனவே அனுப்பிய 15 திட்டங்களுடன் மேலும் 21 திட்டங்கள் அடங்கிய கடிதத்தை கவர்னருக்கு அனுப்பி உள்ளேன். இந்த 36 திட்டங்களும் நிறைவேறும் வரை எனது போராட்டத்தை தொடருவேன்’ என்றார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *