Share on Social Media


புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “பிரதமர் மோடி 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று சம்பந்தமாக உரையாற்றினார். அவரது உரையில் தடுப்பூசி திட்டத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை மாற்றி, தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக கொடுக்கும் என்று கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்கது.

மோடி

புதுவையில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்திருக்கும் காரணத்தினால் மதுக்கடைகள் உட்பட அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அண்டை மாநிலமான தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. மாநில எல்லையில் உள்ள மதுக்கடைகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து மதுபாட்டில்களை வாங்கி கொண்டு செல்கின்றனர். இதனால் கொரோனா 2வது அலை மறுபடியும் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடலூர், விழுப்புரத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. புதுவையில் கொரோனா கட்டுக்குள் வந்திருக்கிறது என்ற எண்ணத்தோடு மாநில அரசு ஒரு தவறான முடிவை எடுத்து மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளது. இதனை அரசு புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் விஷப்பரிட்சையை இந்த அரசு செய்யக் கூடாது.

புதுவையில் அரசியல் துரோகிகள் நிறைய பேர் வெற்றி பெற்று வந்துள்ளார்கள். இதில் சில அரசியல் கோமாளிகளும் வெற்றி பெற்று வந்துள்ளனர். இவர்களை எல்லாம் எங்களது ஆட்சியில் கட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால், அந்த கோமாளிகள் எல்லாம், `மக்கள் கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு உயிரிழக்கிறார்கள்’ என்கிறார்கள். கொரோனாவால் ஒரு மாதத்தில் மட்டும் 750 பேர் இறந்தது அரசியல் கோமாளிகளின் கண்ணுக்கு தெரியவில்லை. இதனால் கவர்னரை சந்தித்து மதுக்கடைகளை திறக்க வேண்டும் என கூறுகிறார்கள். இந்த அரசியல் கோமாளிகளை கட்டுக்குள் வைத்திருக்க இந்த அரசுக்கு துப்பு கிடையாது.

98917 thumb Tamil News Spot
முன்னாள் முதல்வர் நாராயணசாமி

மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையில்லை. கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் மக்களுக்கு கொடுக்க வேண்டிய நிவாரணத்தை அரசால் கொடுக்க முடியவில்லை. இதை தர நிதியில்லை என்கிறார்கள். ஏற்கனவே நிர்வாகத்தை பார்த்த முதல்வர், நிதியில்லாமல் எப்படி நிவாரணத்தை அறிவித்தார். மதுக்கடைகளை திறந்ததன் மூலமாக கொரோனா அதிகமாக வந்தால் அதற்கான முழு பொறுப்பையும் ரங்கசாமி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பிரதமர் மோடி எடுத்த முடிவின் அடிப்படையில் பிளஸ்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால் நீட் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இது எந்த வகையில் நியாயம். தமிழக முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், புதுவை முதல்வர் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. எனவே மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

தற்போது பெட்ரோல் விலை ரூ.100 ஐ தாண்டிவிட்டது. டீசல் விலை ரூ.92 வந்து விட்டது. காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலையை ரூ.1 உயர்த்தினால் தெருவில் இறங்கி போராடிய பாஜக, இன்று வாயை மூடி கொண்டிருக்கிறது. இந்த சூழநிலையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாளை மறுநாள் (11ம் தேதி) காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்த வேண்டும் என சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் புதுச்சேரி மாநில காங்., தலைவர் தலைமையில் நாங்கள் போராட்டம் நடத்த உள்ளோம்.

தேர்தல் முடிவு வெளியாகி ஒரு மாதத்திற்கு மேலாகியும் முதல்வரை தவிர அமைச்சர்கள் யாரும் பொறுப்பேற்கவில்லை. அதிகார சண்டையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றவில்லை. இவர்கள் எப்போதுதான் பதவியேற்று கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்களுக்கு பயனளிக்காத அளவில் இந்த ஆட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது.

1622017278812 Tamil News Spot
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

என்ஆர் காங்., பாஜக கூட்டணி ஆட்சி வந்தால் மத்தியில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாயை கொண்டு வந்து மாநிலத்தில் வளர்ச்சியை காண்போம் என்று கூறினார்கள். இப்போது அவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடங்கள் எல்லாம் விரைவில் அம்பலமாகும். மக்களை காப்பாற்ற இந்த அரசு தவறிவிட்டது. டிசம்பருக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டு காப்பாற்ற வேண்டும்” என்று கூறினார்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *