Share on Social Media


புதுச்சேரி : புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து முதல்வர் ரங்கசாமி, நேற்று கவர்னரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 18ம் தேதி கொட்டிய கனமழையால் புதுச்சேரி பிராந்தியமே வெள்ளக்காடானது.இந்நிலையில், அன்று இரவு தமிழகத்தில் உள்ள சாத்தனுார், வீடூர் அணைகள் திறக்கப்பட்டதால் தென்பெண்ணை, சங்கராபரணி ஆறுகளில் நேற்று முன்தினம் விடியற்காலை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.கரையோர கிராமங்களில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட வீடுகள், 2,500 ஏக்கர் விளை நிலங்களில் பயிர்களை வெள்ளம் சூழ்ந்தது.வெள்ள பாதிப்புகளை முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு, மீட்பு பணிகளை முடுக்கவிட்டு வருகின்றனர்.

மழை சேதம் குறித்து துறை வாரியாக அதிகாரிகள் கணக்கெடுத்து, முதல்கட்ட அறிக்கையை முதல்வரிடம் அளித்துள்ளனர்.இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி நேற்று பகல் 12:00 மணி அளவில் ராஜ்நிவாஸ் சென்று கவர்னர் தமிழிசையை சந்தித்து பேசினார்.அப்போது, கனமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், அதனை தவிர்க்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் குறித்தும், மத்திய அரசிடம் முழுமையான நிவாரணத்திற்கு முன்பாக இடைக்கால நிவாரணம் பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.மாநிலத்தில் வெள்ள பாதிப்புகளை மதிப்பிட நாளை வருகை தரும் மத்திய குழுவிற்கு அளிக்க உள்ள விவரங்கள் குறித்தும், கடலோர கிராமங்களில் கடலரிப்பை தடுக்க மத்திய அரசின் உதவியுடன் தடுப்பு சுவர் கட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இம்மாத துவக்கத்தில் பெய்த மழையில் பாதித்த சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பல்வேறு கட்சிகள், பாகுபாடின்றி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளன.இந்நிலையில், கடந்த 18ம் தேதி கொட்டிய கனமழை, நேற்று முன்தினம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், அனைவருக்கும் மழை நிவாரணம் வழங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *