Share on Social Media


புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் தமிழிசை வரும் 22ம் தேதி வரை கெடு விதித்துள்ளார். அன்றைய தினம் கூடும் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு முதல்வருக்கு கவர்னர் கடிதம் கொடுத்துள்ளார். ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சபாநாயகருடன் சேர்த்து 14 எம்எல்ஏக்களும், எதிர்க்கட்சிகளிடம் 3 நியமன எம்எல்ஏக்களுடன் சேர்த்து 14 எம்எல்ஏக்களும் என சரிசமமாக உள்ளனர். ஆனால், 3 நியமன எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க உரிமை இல்லை எனவும், அதுபற்றி சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்து வருவதாகவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

இந்நிலையில், புதுச்சேரி சட்டசபை சிறப்புக் கூட்டம் கூடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்றிரவு வெளியானது. புதுச்சேரி 14வது சட்டப்பேரவையின் 4வது கூட்டத்தொடரின் ஒரு சிறப்புக்கூட்டம் வரும் 22ம்தேதி (திங்கள்) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடத்தில் நடைபெறும் என சட்டசபை செயலர் முனிசாமி தெரிவித்துள்ளார். இதற்காக சட்டசபையை தயார்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. புதுச்சேரியில் இதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பில் நியமன எம்எல்ஏக்கள் அனுமதிக்கபடவில்லை. தற்போது உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி வந்திருந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமை உண்டு என்று கூறியதன் அடிப்படையிலும் அவர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இதனால் இவ்விவகாரத்தில் சபாநாயகர் வி.பி சிவக்கொழுந்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்? என்பதை அரசியல் கட்சிகள் மட்டுமின்றி புதுச்சேரி மக்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதனிடையே சட்டசபை சிறப்பு கூட்டத்தில் பங்கேற்க முடிவெடுத்துள்ள முதல்வர் நாராயணசாமி, நியமன எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கும் விவகாரத்தை சபையில் பூதாகரமாக எழுப்பலாம் என்று தெரிகிறது. அதன்பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சபைக்கு வந்திருக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகளை பொறுத்து அடுத்தகட்ட அதிரடி முடிவை முதல்வர் எடுப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே புதுச்சேரியில் மேலும் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலக இருப்பதாக பாஜக கூறி வருகிறது. இதற்காக அவர்களிடம் பெரும் பேரம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் தேர்தலுக்கு முன்பே நாராயணசாமி ஆட்சியை கவிழ்க்க பாஜ தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மேற்கொண்ட முயற்சியால்தான் தற்போது நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்து நிற்கிறது. அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சியும் தங்களது எம்எல்ஏக்களை இனிமேல் இழக்க கூடாது என்பதற்காக தங்களது வேலைகளை தொடங்கி உள்ளது.

அதன்படி, பாஜவுக்கு போட்டியாக எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கையில் காங்கிரஸ் கட்சியும் இறங்கியுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதனால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *