Share on Social Media


புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை நிலவள வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். தமிழகத்தில் பல்வேறு கூட்டுறவு வங்கிகளிலும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக எழுந்த புகாரின் பேரில், அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவு வங்கிகளில் பிற மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தான், கீரனூர் நிலவள வங்கியில் நகைக்கடன் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக உயர் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், தஞ்சாவூரைச் சேர்ந்த மண்டல ஆய்வுக்குழு அலுவலர் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் மொத்தம் 934 பேருக்கு நகைக் கடன் வழங்கப்பட்டு இருந்ததில் 832 நகை பொட்டலங்களில் மட்டுமே நகை இருந்ததும், மீதமிருந்த 102 பொட்டலங்களில் நகையே இல்லாமல் போலியாகக் கடன் வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

வங்கி செயலாளர் நீலகண்டன், மேற்பார்வையாளர் சக்திவேல் ஆகியோர் ரூ.1.8 கோடி ரொக்கத்தை நகை இல்லாமலே தங்கள் உறவினர்களுக்கு வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

நிலவள வங்கி - கீரனுர்

நிலவள வங்கி – கீரனுர்

இதையடுத்து, வங்கி செயலாளர் நீலகண்டன், மேற்பார்வையாளர் சக்திவேல் இருவரும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். வங்கி நகை மதிப்பீட்டாளர் கனகவேலும் வங்கியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடமிருந்து அதிகாரிகள் ரூ.90 லட்சம் கைப்பற்றியதாகவும், தொடர்ந்து பணம் மீட்புப் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி மண்டல இணை பதிவாளர் உமா மகேஸ்வரி கூறும் போது, “முறைகேடு செய்யப்பட்ட 3 பேரிடமிருந்தும் பணம் முழுவதுமாக கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதோடு, கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான சில விதிமுறைகளை அறிவித்திருக்கிறது. எனவே, அரசு விதிமுறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்வோம்” என்றார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.