Share on Social Media


சென்னை: அதிமுக நிர்வாகிகள் கூட்டம் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் இன்று அவசரமாக கூடியது. புதிய அவைத்தலைவர் யார்? என்பது குறித்தும், சசிகலா குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. புதிய பதவியைப் பிடிக்க இரு அணியினரும் தீவிரமாக முயன்று வருவதால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து ஆட்சியை பறிகொடுத்தது. எதிர்கட்சி தலைவராக யாரை நியமிப்பது என்பதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இருவரும் எதிர்கட்சி தலைவர் பதவியை பிடிப்பதில் தீவிரம் காட்டினர்.

ஆனாலும் கொங்கு மண்டலத்தில் இருந்து அதிக அதிமுக எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றதால் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைத்தது. ஆனாலும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையே ஒற்றுமை இல்லாமல் தனித்தனி அணியாக அதிமுகவில் செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மக்கள் பிரச்னைகள் குறித்து அறிக்கை வெளியிடும்போது கூட இரண்டு பேரும் தனித்தனியாக தங்களது லெட்டர் பேடில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதிகாரப்பூர்வமாக கட்சி சார்பில் அறிக்கைகள் வெளியிடுவதில்லை. இதன்மூலம் இருவருக்கான மோதல் போக்கு வெளிப்படையாக தெரியவருகிறது. இதனால் அதிமுக தொண்டர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்தநிலையில், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்தது. இந்த தேர்தலிலும் அதிமுகவில் ஒற்றுமை இல்லை. அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற இரண்டாவது பெரிய கட்சியான பாமக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட்டது. அதேபோன்று சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவும், அதிமுகவை கைப்பற்ற பல்வேறு ரகசிய திட்டங்களை தீட்டிவருவதாக கூறப்படுகிறது. சிறையில் இருந்தபோதே 50க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளுடன் அவர் செல்போனில் பேசிவந்தது அம்பலமாகியுள்ளது. அடுத்து வருகிற 17ம் தேதி அதிமுக தொடங்கி 50வது ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி வருகிற 16ம் தேதி சசிகலா, ஜெயலலிதா சமாதிக்கு சென்று பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதிமுகவில் அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் மரணமடைந்தார். இந்தப் பதவியைப் பிடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். மதுசூதனன், ஆரம்பத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தார். பின்னர் கடைசி காலத்தில் இபிஎஸ் அணிக்கு மாறிவிட்டார். மேலும் கட்சியில் தற்போது பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அவைத் தலைவர் பதவியைப் பிடிக்க அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

ஓ.பன்னீர்செல்வமோ, கட்சியின் அமைப்புத் தேர்தல் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும். இந்த தேர்தல் முடிவுக்குப் பிறகு அவைத் தலைவர் குறித்து முடிவு எடுக்கலாம் என்று கூறி விட்டார். அதோடு உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் தனக்கான ஆதரவு கூட்டத்தை அதிகரிக்க, இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார் பன்னீர்செல்வம்.
இந்த பரபரப்பான சூழலில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள், கட்சியின் அமைப்பு செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், வழிகாட்டு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காரசார விவாதங்கள் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பல்வேறு நிர்வாகிகள் அதிமுகவை வழிநடத்திச் செல்லும் தலைவர்கள் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். அப்போது தான் கட்சியை சிறப்பாக வழிநடத்திச் செல்ல முடியும். வரவுள்ள தேர்தல்களிலும் வெற்றி பெற முடியும் என்று கூறினர். இன்று நடைபெற்ற அதிமுக அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆவதையொட்டி வருகிற 17ம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடுவது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பொன்விழா ஆண்டு சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அதிமுக தொடக்கவிழா ஆண்டு மலர் வெளியிடப்படும். வழக்கமாக அவைத்தலைவர் தான் இதை வெளியிடுவார். அவைத்தலைவர் மதுசூதனன் மரணமடைந்து விட்டதால் அதிமுகவிற்கு புதிய அவைத்தலைவர் தேர்ந்தெடுப்பது குறித்தும் இன்று விவாதிக்கப்பட்டது. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடத்துவதற்கும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அவைத் தலைவர் பதவியைப் பிடிக்க இரு அணிகளும் முயன்றதால், டிசம்பருக்குப் பின்னர் அவைத் தலைவரை தேர்வு செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.

அவைத் தலைவர் குறித்து இரு அணிகளும் தீவிரமாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். மேலும், அதிமுகவை சசிகலா கைப்பற்றும் முயற்சியை அனைவரும் ஒற்றுமையாக நின்று முறியடிக்க வேண்டும் என கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தினர். சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்து சமீபத்தில் பாஜக மூத்த தலைவர் ஒருவர் அமித்ஷாவுடன் பேசியபோது, சசிகலாவால் கடந்த தேர்தலில் குறிப்பிட்ட வாக்குகளை பெற முடியவில்லை. தோல்வியை தழுவினார்.

ஏன் டிடிவி தினகரனே தோல்வியடைந்து விட்டார். அவர் அதிமுகவுக்கு தேவையில்லை என்று கூறியுள்ளார். இந்த தகவல் அதிமுக நிர்வாகிகளுக்கு தெரியவந்ததால், அவர்கள் உற்சாகமடைந்து, சசிகலாவுக்கு நிரந்தரமாக செக் வைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இது குறித்தும் காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றன. இவ்வாறு அவர் கூறினார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *