Tamil News large 2644465 Tamil News Spot
Share on Social Media

சமஸ்டிப்பூர்:”பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில், தே.ஜ., கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பதுஉறுதி. வாரிசு இளவரசர்களான ராகுல், தேஜஸ்விக்கு, மக்கள் படுதோல்வியை பரிசாக அளிப்பர்,” என, பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பீஹாரில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம், நேற்றுடன் ஓய்ந்தது. இதில், 1,463 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பீஹார் சட்டசபைக்கு, மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக, 71 தொகுதிகளுக்கு, கடந்த, 28ல் ஓட்டுப்பதிவு நடந்தது. இரண்டாம் கட்டமாக, 94 தொகுதிகளில், நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

போராடுகிறது

இதையொட்டி, சமஸ்டிப்பூர் உட்பட, மூன்று இடங்களில் நடந்த பிரசார கூட்டங்களில், பிரதமர் மோடி பங்கேற்றார். தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, அவர் பேசியதாவது: ஜனநாயகத்தை காப்பாற்ற, தே.ஜ., கூட்டணி போராடுகிறது. எதிர் தரப்பு கூட்டணி, வாரிசு அரசியலை காப்பாற்ற போராடுகிறது.பீஹாரின் முதல்வராக, 15 ஆண்டுகளாக நிதிஷ்குமார் பதவி வகித்து வருகிறார்.

அவரது உறவினர்கள் யாராவது, எம்.எல்.ஏ., அல்லது எம்.பி.,யாக உள்ளனரா…என் உறவினர் யாராவது, குஜராத் சட்டசபையிலோ, லோக்சபாவிலோ, ராஜ்ய சபாவிலோ உறுப்பினர்களாக உள்ளனரா…எதிர்க்கட்சி கூட்டணியில், இரண்டு இளவரசர்கள், தங்கள் பதவியை காப்பாற்றுவதில் தான் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

இரண்டு இளவரசர்களில் ஒருவர், 2017ல் நடந்த, உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில், அம்மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு இளவரசருடன், கூட்டணி அமைத்தார். அவர்களுக்கு, உ.பி., மக்கள் படுதோல்வியை பரிசாக அளித்து, சரியான பாடம் புகட்டினர். இப்போது அந்த இளவரசர், பீஹாரின் காட்டாட்சி இளவரசருடன், கூட்டணி அமைத்துள்ளார். உ.பி., மக்கள் போல், பீஹார் மக்களும், இளவரசர்களுக்கு சரியான பாடம் புகட்டுவர் என்பது நிச்சயம்.

கடந்த ஆண்டு, புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இறந்த, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், 40 வீரர்களில் பலர், பீஹாரைச் சேர்ந்தவர்கள். அவர்களது தியாகத்தை, எதிர்கட்சிகள் அவமதித்து, பொய் பிரசாரம் செய்தன. தற்போது, பாகிஸ்தான் அமைச்சரே, புல்வாமா தாக்குதலில், தங்களுக்கு உள்ள தொடர்பை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால், எதிர்க்கட்சிகளின் முக கவசங்கள் கிழிந்துவிட்டன.

காங்கிரசுக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கும்,அவர்களது குடும்பத்தை பற்றி மட்டுமே கவலை. நாட்டை பற்றியோ,மக்களை பற்றியோ சிறிதும் கவலையும் இல்லை; அக்கறையும் இல்லை. பீஹாரில் நிதிஷ்குமார் அரசு, ஏழைகளின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறது. பீஹாரில், பல நல திட்டங்களை, மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.

இன்னும் சில வாரங்களில், ‘சாத்’ பூஜை வர உள்ளது. ‘கொரோனா பரவலில், இதை எப்படி கொண்டாடப் போகிறோம்’ என, என் தாய்மார்கள் கவலைப்பட வேண்டாம். டில்லியில் உள்ள உங்களின் மகன், சாத் பூஜையை சிறப்பாகக் கொண்டாட, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பான்.

பிடிக்கவில்லை

எதிர்க்கட்சிகளுக்கு, தேர்தல் நேரத்தில் தான், ஏழைகள் பற்றிய நினைப்பு வருகிறது; தேர்தல் முடிந்ததும் மறந்து போகிறது. தே.ஜ., கூட்டணி, ஏழைகளின் நலனுக்காகவே, திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இந்த நாட்டை ஒன்று படுத்தியவர், சர்தார் படேல். அவர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பையோ, பா.ஜ.,வையோ சேர்ந்தவர் இல்லை. சர்தார் படேல் பற்றி பேசினாலே, இப்போதுள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்களுக்கு, ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை பற்றி மட்டுமே பேச வேண்டும்.

சர்தார் படேல் பிறந்த நாளில், அவருக்கு, காங்கிரஸ் தலைவரும்,இளவரசரும், ‘டுவிட்டரில்’ கூட அஞ்சலி தெரிவிக்கவில்லை.முதல் கட்ட ஓட்டுப்பதிவுக்குப் பின், நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சியமைப்பார் என்பது, உறுதியாக தெரிகிறது. சூரியன் மறைந்து விட்டால், வீட்டை விட்டு வெளியில் செல்ல பயந்த காலத்தை, மக்கள் மறந்துவிடக் கூடாது. பீஹாரில், அப்படி ஒரு நிலை ஏற்படாது என, நம்புகிறேன். இவ்வாறு, மோடி பேசினார்.

‘காங்கிரஸ் எம்.பி., ராகுலையும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வியையும் தான், ‘வாரிசு இளவரசர்கள்’ என, பிரதமர் மோடி, சாடினார்’ என, பீஹார் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன

Advertisement

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *