Share on Social Media


புதுச்சேரி : புதுச்சேரியில், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்காமல், உள்ளாட்சி தேர்தலை அறிவித்த மாநில தேர்தல் ஆணையத்தை கண்டித்து, அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்கள், கவர்னரிடம் மனு அளித்துள்ளனர்.

புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 22ம் தேதி உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், வார்டு இட ஒதுக்கீடு குளறுபடிகளை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், குளறுபடிகளை நீக்கி தேர்தலை நடத்திட உத்தரவிட்டனர்.அதனையொட்டி, பட்டியல் இனத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு செய்து கடந்த ஆக. 23ம் தேதி வெளியிட்ட உத்தரவை திரும்ப பெறுவதாக, மாநில தேர்தல் ஆணையம் கடந்த 7ம் தேதி அறிவித்தது.அதனைத் தொடர்ந்து, கடந்த 2006ம் ஆண்டின் தேர்தல் நடைமுறையை பின்பற்றி உள்ளாட்சி அமைப்பு வார்டுகளை எஸ்.சி., எஸ்.சி.,(பெண்), பொது மற்றும் பெண் (பொது) பிரிவுகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு செய்து அறிவித்தது.இந்த இட ஒதுக்கீடு அடிப்படையில், மூன்று கட்டமாக வரும் நவ. 2, 7 மற்றும் 13ம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என, நேற்று முன்தினம் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.உச்சநீதிமன்றம் வழங்கிய பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு, ஜனாதிபதியால் சட்டமாக இயற்றப்பட்ட பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடுகளை பின்பற்றாமல் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை அறிவித்தற்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.மேலும், எவ்வித ஆலோசனையும் இன்றி, பண்டிகை காலத்தில் தேர்தல் நடைபெறும் என அறிவித்திருப்பது

பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.இந்நிலையில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளித்து உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்திட, சபாநாயகர் செல்வம் தலைமையில், நேற்று காலை எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது.சட்டசபை வளாக கூட்டரங்கில் நடந்த இக்கூட்டத்தில் அமைச்சர்கள், துணை சபாநாயகர், என்.ஆர்.காங்.,- பா.ஜ.,- தி.மு.க., – காங்., மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சபாநாயகர் செல்வம் பேசுகையில், புதுச்சேரி உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து கடந்த 2019ல் உள்ளாட்சி துறை அரசாணை வெளியிட்டுள்ளது.இந்த இட ஒதுக்கீட்டை மாநில தேர்தல் ஆணையம் கடந்த 6ம் தேதி வெளியிட்ட அரசாணை மூலம் நீக்கியுள்ளது.இதுகுறித்து புதிய அரசாணை வெளியிடுவதற்கு முன், அரசை கலந்து ஆலோசிக்காமல், அவசர கதியில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியிருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிடவில்லை’ என்றார்.பின்னர் பேசிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு இல்லாமல், பண்டிகை காலங்களில் தேர்தல் அறிவித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்தும், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து சட்டத்தின்படி பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்காமலும், சுழற்சி முறை மாற்றம் அளிக்காமல் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது.கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வார்டு வரையறை செய்ய வேண்டும்.பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை மாநில தேர்தல் ஆணையம் புறக்கணித்திருப்பது சட்ட விரோதம். சமூக நீதிக்கு எதிரான மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும்.மழைக்காலம், புதுச்சேரி விடுதலை நாள், கல்லறைத் திருநாள், தீபாவளி போன்ற திருவிழா காலங்களின் இடையில் தேர்தல் நடத்துவது நடைமுறைக்கு விரோதமானது.உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலை அனைவரும் புறக்கணிக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இதில் உள்ள குளறுபடிகளை நீக்கி, தேர்தலை நடத்த வேண்டும்.தன்னிச்சையாக முடிவு எடுக்கும் மாநில தேர்தல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பின்னர்,

இந்த தீர்மானத்தை சபாநாயகர் செல்வம் தலைமையில் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் ராஜ்நிவாஸ் சென்று, கவர்னர் தமிழிசையிடம் அளித்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களும் எதிர்ப்பு தெரிவித்து, கவர்னரிடம் மனு கொடுத்துள்ளதால், தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *