ஒன்றைப் பிறரது கோணத்திலிருந்து பாருங்கள்
சில உதவிகளை சிலர் கேட்கும்போது உங்களுக்கு எரிச்சல் வரலாம். இதற்கெல்லாமா உதவி கேட்பது என்று ஏளனமாகக்கூட எண்ணலாம். ஆனால் அதை அவரது கோணத்திலிருந்து கொஞ்சம் பாருங்கள். ஒரே எண்ணை நீங்கள் 6 என்றும் எதிர்திசையில் நிற்பவர் 9 என்றும் கூறலாம். உங்கள் விடை சரியானது என்பதற்காக எதிராளி தவறு செய்ததாக ஆகிவிடுமா?

உதவி செய்ய ஒத்துக் கொள்வதற்கு முன் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்
மிகச்சிறிய, உடனடியாக செய்யக்கூடிய உதவிகளை நீங்கள் அப்போதே செயல்படுத்தலாம். கொஞ்சம் பெரிய உதவி என்றால் உடனடியாக ஒத்துக் கொள்ளாமல் உதவி கேட்பவரிடம் மேலும் சிறிது நேரம் இது குறித்து உரையாடுங்கள். கொஞ்சம் அவகாசம் தேவை என்றால் அதற்குப் பிறகு இது குறித்துப் பேசுவதாக வாக்களியுங்கள்.
செய்ய முடியாத உதவி என்றால்…
நாங்கள் நாலு நண்பர்கள். அவர்களில் ஒருவர் தனக்கு ஒரு குறிப்பிட்ட புத்தகம் வேண்டும் என்று கேட்டார். நானும் வேறு இருவரும் எங்களிடம் அந்தப் புத்தகம் இல்லை என்று கூறினோம். ஆனால் நான்காமவர் அந்தப் புத்தகத்தை அடுத்த நாளே தருவதாகக் கூறினார். அவர் பலவித முயற்சிகள் செய்தும் அந்தப் புத்தகத்தை அவரால் கண்டறிய முடியவில்லை.

‘நம்ப வச்சு கழுத்தறுத்துட்டே’ என்ற திட்டுதான் அவருக்குக் கிடைத்தது! திட்டு வாங்கியவரின் மனிதாபிமானமும் அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் போற்றத் தக்கவை. ஆனால் அவர் முதலில் வாக்களிக்காமல் அந்த முயற்சி செய்து இருக்க வேண்டும். ‘நான் ட்ரை பண்றேன்’ என்கிற அளவோடு அந்த வாக்கு நின்றிருக்க வேண்டும். உறுதியாகச் செய்கிறேன் என்று சொன்னதால் அவரின் மீதான நம்பிக்கைத் தன்மை போய்விட்டது.
Follow @ Google News: பக்கத்தில் இணையதளத்தை செய்து ஃபாலோ செய்யுங்கள்… உடனுக்குடன் பெறுங்கள்.
தீர்வுகள் முழுவதையும் உங்கள் தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்
ஒரு பிரச்னையை ஒருவர் கூறிவிட்டு அதற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று கூறினால் உங்களுக்குத் தோன்றுவதை உடனடியாகப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை. ஆனால் ‘கவலைப்படாதே. இதற்குத் தீர்வு கண்டுபிடிக்க நான் இருக்கிறேன்’ என்பதுபோல் கூறினால் அந்த பிரச்னை உங்களுடையது ஆகிவிடுகிறது. இதற்கு பதில் ‘என்ன செய்யலாம்? நீயே யோசித்து சொல்லு பார்க்கலாம்’ என்பதுபோல் கேட்டால் அவரே உரிய விடையைக் கண்டு பிடிக்கலாம்.

வேறு விதங்களிலும் உதவ முயற்சி செய்யுங்கள்
ஒருவர் உதவி கேட்டால் உங்களால் உதவ முடியாமல் போகலாம். உங்களுக்குத் தெரிந்த வேறு யாராவது அந்த உதவியை செய்ய முடியும் என்றால் அவரது தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கலாமே. காலத்தினால் செய்த உதவி என்றென்றும் நினைவில் நிற்கும்.