Share on Social Media


நங்கநல்லுார்- நங்கநல்லுார் பிரதான சாலையில் ஏற்பட்ட, ‘திடீர்’ மெகா பள்ளத்தால், போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.சென்னை, நங்கநல்லுார் பிரதான சாலை போக்குவரத்து நிறைந்தது. இச்சாலை வழியாக, ஆதம்பாக்கம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, பாதாள சாக்கடையின் பிரதான குழாய் செல்கிறது. சமீபத்தில் பெய்த பரவலான மழையால், 10 நாட்களுக்கு மேல், கழிவு நீருடன் அதிகளவு மழை நீரும், இந்த பாதாள சாக்கடையில் செல்கிறது.இதனால், சுத்திகரிப்பு நிலையத்தில், பணிகள் பாதிக்கப்பட்டன. பாதாள சாக்கடையில் கழிவு நீர் செல்ல வழியின்றி போனது.இந்நிலையில், நங்கநல்லுார் முதல் பிரதான சாலையில் இருந்து, வாணுவம்பேட்டை நோக்கி செல்ல கூடிய பாதாள சாக்கடையின் பெரிய குழாயில், உடைப்பு ஏற்பட்டது.இதையடுத்து, நேற்று மாலை, 3:00 மணிக்கு, சாலை திடீரென உள் வாங்கியது. இதனால், அப்பகுதி கிணறு போல், 12 அடி அகலத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது.பெரிய சத்தத்துடன் சாலையில் மெகா பள்ளம் ஏற்பட்டதால், சுற்று வட்டாரப் பகுதியில் வசிப்போர், அலறியடித்து வெளியே வந்து பார்த்தனர்.அந்நேரம் வாகன போக்குவரத்து இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக பொதுமக்கள் பள்ளத்தை சுற்றி, தடுப்பு ஏற்படுத்தினர்.தகவல் அறிந்து ஆலந்துார் குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் ராணி, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். நங்க நல்லுார் நுழைவாயிலில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டன.மேலும், பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டதால், நங்கநல்லுாரில் இருந்து, சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவு நீர் செல்ல, மாற்று ஏற்பாடுகளை மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள் செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *