Share on Social Media


கொரோனா தொற்று மற்றும் இறப்பில் உலக நாடுகளின் எண்ணிக்கையில் இந்தியா முந்துகிறது. உலகத்தில் ஏற்படும் இரண்டு தொற்றில் ஒன்று, இந்தியாவில் நிகழ்கிறது. இந்தியாவின் அவலநிலை குறித்த அபாய ஒலி, பிரதமர் மோடியின் காதில் விழவில்லையா?
– தமிழக காங்., செய்தி தொடர்பாளர் கோபண்ணா

‘பிரதமர் மோடி என்ன விஞ்ஞானியா… ஒரே நடவடிக்கையில் கொரோனாவை கட்டுப்படுத்த. எல்லாரும் சேர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய விவகாரம் இது…’ என, நினைவுபடுத்த தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் கோபண்ணா அறிக்கை.

அபாண்டமான பழி மற்றும் அநாகரிகமான அவதுாறுகளுக்கிடையில் போதிய பொருளாதார வலிமையுமின்றி, புத்தம் புதிய சின்னமொன்றில் போட்டியிட்டு, ஆறில், நான்கு வெற்றி பெற்றிருப்பது மாபெரும் அங்கீகாரம். இது, வெறுப்பு அரசியலுக்கு எதிராக விழுந்த பேரிடி.
– விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்

‘வெறுப்பு அரசியலை வளர்ப்பதே நீங்கள் தான். பெரும்பான்மை மதத்தினரின் அன்பை விரும்பாமல், அந்த மதத்தினருக்கு நீங்கள் தனிப்பெயர் வைத்து அழைப்பது விருப்பு அரசியலா…’ என, கேட்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை.

மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு பின், திரிணமுல் காங்கிரஸ், அந்த மாநிலத்தில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு, இடது சாரி தொண்டர்களையும், கட்சி அலுவலகங்களையும், அவர்களது வீடுகளையும் தாக்கி வருகிறது.
– தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

‘ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத கம்யூ.,க்கள் மீது, 211 இடங்களில் வென்றுள்ள திரிணமுல் காங்., ஏன் தாக்குதல் நடத்த வேண்டும்; வினோத மாக இருக்கிறதே…’ என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிக்கை.

சமூக நீதி மண்,- பெரியார் மண் என்பதை மீண்டும் உணர்த்திடும் வகையில், தி.மு.க., தலைமையில் ஆட்சி அமைவதற்கு காரணமான வாக்காள பெருமக்களுக்கு நம் நன்றியையும், மகிழ்ச்சியையும் உரித்தாக்குகிறோம். செயற்கரிய செயல் புரியும் ஆட்சி என்று ஜெகத்தோர் பூரிப்படையும் வகையில், ஸ்டாலின் ஆட்சியை தருவார்.
– திராவிடர் கழக தலைவர் வீரமணி

‘நீங்கள் சொல்லும் பெரியார் மண்ணில் தான், நான்கு இடங்களில், பா.ஜ., வென்றுள்ளது; அ.தி.மு.க., 66 இடங்களில் வென்றுள்ளது…’ என, நினைவுபடுத்த தோன்றும் வகையில், திராவிடர் கழக தலைவர் வீரமணி அறிக்கை.

தமிழக தேர்தலில், வட ஆரிய சக்திகளின் ஆதிக்கத்திற்கு, தமிழ் மண்ணில் இடமில்லை என்ற முழக்கம், விண் அதிர எங்கும் எதிரொலிக்கிறது.
– ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ

‘சுத்த பேத்தலாக இருக்கிறது… வட ஆரிய சக்திகள் என, எந்த சக்தியும் தமிழகத்தில் இல்லையே; தவறுதலாக இலங்கை விவகாரத்தை இங்கு சொல்கிறீர்களோ…’ என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை.

மேற்கு வங்கத்தில், பா.ஜ., தன் பண பலத்தையும், தில்லுமுல்லுகளையும் பிரயோகித்த போதிலும், அங்கே அது கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. வங்க மக்கள் தெள்ளத்தெளிவாக மதவெறி சித்தாந்தத்தை நிராகரித்திருக்கின்றனர்.
– மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ

‘பா.ஜ., தோற்றது இருக்கட்டும்; 10 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியிலிருந்த, கம்யூ.,க்கள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லையே. அதற்கான காரணத்தை தான் முதலில் ஆராய வேண்டும்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ அறிக்கை.

AdvertisementSource link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *