Share on Social Media


ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணம், மேலும் பல கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையிலும், கறுப்புப் பணத்தை மீட்டு விடுவேன் என்று கூறும் பிரதமர் மோடியை மக்கள் நம்புகின்றனரா?
– தமிழக காங்., செய்தித் தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன்

‘பிரதமரை முழு அளவில் விட்டிருந்தால், கறுப்பு பணத்தை இல்லாமல் ஆக்கியிருப்பார். ஆனால், அவருக்கு தான், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் எவ்வளவு வேலை, தொந்தரவு, இடையூறுகள்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தித் தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் அறிக்கை.

மதுபான கடைகளை தமிழக அரசு திறந்திருப்பது பொருத்தமற்றது. இது, சாமானிய மக்களின் குடும்பங்களில் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், குடும்ப வன்முறைகளையும் அதிகரிக்கும்.
– அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வாலண்டினா

‘கம்யூ.,க்களின் கூட்டணியில் உள்ள காங்., பிரமுகர் சிதம்பரம், ‘மதுக்கடைகள் விவகாரத்தில் தமிழக அரசு என்ன தான் செய்ய முடியும்…’ என, கூறியுள்ளதை நீங்கள் படிக்கவில்லையா…’ என கேட்கத் தோன்றும் வகையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வாலண்டினா அறிக்கை.

நாட்டில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா செய்தியை மக்களிடமிருந்து மறைப்பதற்காக, ‘டூல் கிட்’ என்ற பொய்யான செய்தியை பா.ஜ.க-.,வினர் பரப்பி வருகின்றனர். உண்மையில் காங்கிரஸ் கட்சி அப்படி எந்தவொரு டூல் கிட்டையும் தயாரிக்கவேயில்லை.
– தமிழக காங்., தலைவர் அழகிரி

‘டூல் கிட் என்ற தலைப்பில் தயாரித்திருக்க மாட்டாது. அதுபோன்ற செயல்களில் காங்கிரஸ் நீண்ட காலமாக இறங்கியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது…’ என, கூறத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி பேட்டி.

இன்றைய சிமென்ட் விலை, குஜராத் 330, டில்லி 350, ஆந்திரா 380 ரூபாய். ஆனால் தமிழகத்தில் மே 2ல், 380 ஆக இருந்த சிமென்ட், ஒரு மாதத்தில் 530 ரூபாயாக உயர்ந்துள்ளது. கரப்ஷன், கலெக் ஷன், கமிஷன் காரணம்.
– பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா

‘உங்களுக்கு தெரிந்து விட்டது; மக்களுக்கு இன்னும் தெரியவில்லையே…’ என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா அறிக்கை.

பாலக்காடு நகரில் பயன்படுத்தப்படாமல் இருந்த கோகோ கோலா குளிர்பான நிறுவன கட்டடத்தில், 550 படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்து, கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராகி விட்டோம்.
– கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்

‘எல்லா மாநிலங்களும் இப்போதே தயார். மூன்றாவது அலைக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்காத குறை தான்…’ என, சிரிக்கத் தோன்றும் வகையில், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை.

ஆன்மிகவாதிகளை சந்தித்தால் மன மாற்றம், தெளிவு பிறக்கும். பிரதமர் மோடியை சந்தித்து திரும்பிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘ஓட்டு போடாதவர்களுக்கும் பணியாற்றுவோம்’ என்று கூறியுள்ளார். அண்ணாதுரை, ஈ.வெ.ரா., கொடுக்காத தெளிவை, அண்ணன் மோடி கொடுத்துவிட்டார்.
– தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்

‘அப்போ, அடிக்கடி டில்லி சென்று, பிரதமரை நம் முதல்வர் சந்திக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பமா…’ என, கேட்கத் துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், ஹைட்ரோ கார்பன் மற்றும் எண்ணெய் தொடர்பான பணிகளை துவங்க அனுமதிக்க மாட்டோம். அது குறித்த அறிக்கை வந்தவுடனே, முதல்வர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
– தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம்

‘அதற்குப் பதில், பாதுகாக்கப்பட்ட அந்த மண்டலத்தில் என்ன செய்து, வேலைவாய்ப்பை அதிகரிக்கப் போகிறீர்கள்…’ என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி.

தி.மு.க.,வினர் பின்னடைவை சந்திக்கும்போது, சர்ச்சை பேச்சை பேசி, திசை திருப்புவது வாடிக்கை. கொரோனா விஷயத்தில் தோற்றுள்ள நிலையில், மத்திய அரசை, ‘ஒன்றியம்’ என்று குறிப்பிட்டு அரசியல் பேசுகின்றனர்.
– பா.ஜ. சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலர் இப்ராஹிம்

‘ஒன்றரை மாதங்களில் கொரோனாவை ஒடுக்கி விட்டோம் என்றல்லவா, தி.மு.க.,வினர் பேசி வருகின்றனர்…’ என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ. சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலர் இப்ராஹிம் பேட்டி.

அனைத்து மாநிலங்களும், மத்திய அரசுக்கு அடிமை போல் செயல்பட வேண்டும் என்று விரும்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அரசு பாகுபாடுடன் செயல்படுகிறது; இது கூடாது.
– இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முத்தரசன்

‘அடிமை போல செயல்பட வேண்டும் என, மத்திய அரசு எப்போது சொன்னது… நீங்கள் சொல்வது தான் புதுமையாகவும், குதர்க்கமாகவும் உள்ளது…’ என, சொல்லத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முத்தரசன் பேட்டி.

மதுக்கடைகள் வேண்டாம்; மது விலக்கு வேண்டும் என்பது எங்கள் கொள்கை. கள்ளச்சாராயம் இருக்காது என்றால் கடையை மூடச் சொல்லலாம். அக்கடைகளை திறப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அரசால் என்ன செய்ய முடியும்?
– காங்., முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்

‘பீஹார், குஜராத், திரிபுரா, லட்சத்தீவு, மிசோரம், நாகாலாந்தில் என்ன செய்கின்றனர் என கேட்டு, அதை இங்கு பின்பற்ற சொல்லலாமே…’ என, கூறத் தோன்றும் வகையில், காங்., முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேச்சு.

மூன்றாவது அலையை சமாளிக்கும் விதமாக, தமிழகம் முழுதும் ஆக்சிஜன் வசதியுடன், அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதலாக, 70 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரிகளில் குழந்தைகளுக்காக தனி வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
– தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்

‘இப்படி அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதை பார்த்து, கொரோனா ஓடிவிடும்; இங்கே வராது…’ என, ஜாலியாக கூறத் தோன்றும் வகையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி.

இந்தியாவிலேயே குறைந்த சம்பளத்தை தமிழக அரசு மருத்துவர்கள் பெற்று வருகின்றனர். 2009ல் தி.மு.க., ஆட்சியில், மருத்துவர்களின் சம்பள உயர்வுக்கு பிறப்பித்த அரசாணையை உடனே அமல்படுத்த வேண்டும்.
– தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க சட்ட போராட்ட குழு தலைவர் பெருமாள் பிள்ளை

‘கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்ட அரசு டாக்டர்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நியாயம் தான்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க சட்ட போராட்ட குழு தலைவர் பெருமாள் பிள்ளை பேட்டி.

AdvertisementSource link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *