Share on Social Media

இந்தியாவில் இருந்து வரும் யாரையும் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கமுடியாது என நாட்டின் எல்லைகளை மூடியிருக்கிறார் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன். இதனால் ஐபிஎல் போட்டிகளில் விளையாடவந்த 40-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் நாடு திரும்பமுடியாமல் தவித்துவருகிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் தவிர 9000 ஆஸ்திரேலியர்கள் தற்போது இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா திரும்பமுடியாமல் இருக்கிறார்கள். மே 15-ம் தேதிவரை இந்தியாவில் இருந்து வரும் யாரும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையக்கூடாது எனத் தடை போட்டிருக்கிறது அந்நாட்டு அரசு.

ஐபிஎல், சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல், சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்நிலையில் மைக்கேல் ஸ்லேட்டர் ட்விட்டரில் தனது வேதனையைப் பகிர்ந்திருக்கிறார். ”ஆஸ்திரேலிய அரசுக்கு தன் மக்களின் பாதுகாப்பு மீது அக்கறை இருந்தால் எங்களை நாடு திரும்ப அனுமதிக்கும். அரசு எங்களுக்கு செய்யும் மிகப்பெரிய அவமரியாதை இது. பிரதமரின் கைகளில் இரத்தக்கறை படிந்திருக்கிறது. எவ்வளவு தைரியம் இருந்தால் நீங்கள் எங்களை இப்படி நடத்துவீர்கள்? இந்தியா சென்று ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய அரசு அனுமதித்ததால்தான் நான் இங்கே வந்தேன். ஆனால், இப்போது நாடு திரும்பமுடியாதென்று எங்களைப் புறிக்கணிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது. பணத்துக்காக நாங்கள் ஐபிஎல்-க்கு சென்றதாக சிலர் விமர்சிக்கிறார்கள்.

இதுதான் என் வேலை. இந்த வேலையிருந்தால்தான் நான் என்னுடய மூன்று குழந்தைகளின் கல்விக்குக் கட்டணம் செலுத்தமுடியும். கடன்களை அடைக்கமுடியும். என்னோடு விவாதிக்க உங்களை (பிரதமர் மாரிசன்) அழைக்கிறேன்” என மைக்கேல் ஸ்லேட்டர் ட்விட்டரில் எழுதியிருக்கிறார்.

ஆஸ்திரேலிய வீரர்களை தற்போதைக்கு மாலத்தீவு அல்லது இலங்கையில் தங்கவைக்க பிசிசிஐ ஏற்பாடுகளை செய்துவருகிறது. ஐபிஎல் தொடரில் பங்கேற்ற இங்கிலாந்து வீரர்களில் பெரும்பாலானோர் இன்று காலை லண்டன் போய் சேர்ந்துவிட்டனர்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *