Share on Social Media


திருப்பூர்:’வரும் பிப்ரவரி மாதம் முதல், ஆர்டர் வருகை அதிகரிக்கும்’ என, திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தி துறையினர் காத்திருக்கின்றனர்.திருப்பூரில் இயங்கும் உள்நாட்டு சந்தைக்கு ஆடை தயாரிக்கும் நிறுவனங்கள், நாடு முழுவதும் உள்ள வர்த்தகரிடம் ‘ஆர்டர்’ பெற்று, பின்னலாடை ரகங்களை தயாரிக்கின்றன.

பெரும்பாலானா நிறுவனங்கள், பருத்தி இழை ஆடை தயாரிப்பிலேயே ஈடுபடுகின்றன. அதனால், மற்ற சீசன்களைவிட, கோடை காலங்களில், திருப்பூர் நிறுவனங்களுக்கு அதிகளவு ஆர்டர் கிடைக்கும்.தற்போது, குளிர் அதிகரித்து காணப்படுகிறது; சில இடங்களில், மழை பெய்து வருகிறது. உள்நாட்டு சந்தையில் குளிர்கால ஆடை தேவை அதிகரித்துள்ளது. அதனால், திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, தற்போது ஆர்டர் வருகை சற்று குறைந்துள்ளது.

பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:மழை, பனிப்பொழிவு என, தற்போது, நமது நாட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. குளிருக்கு இதமான ஸ்வெட்டர் ரக ஆடைகளை மக்கள் வாங்கி அணிகின்றனர். குளிர் கால ஆடைகளை பொருத்தவரை, கடந்த ஆண்டுகளில் வாங்கியவற்றை பத்திரப்படுத்தி வைத்து அணியும் வழக்கம் மக்களிடம் உள்ளது. எனவே, மற்ற சீசன்களைவிட குளிர் காலத்தில் ஆடை தயாரிப்புக்கு ஆர்டர் குறைவாகவே கிடைக்கிறது.
குளிர் மற்றும் அபரிமிதமான நுால் விலை உயர்வால், திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, வெளிமாநில வர்த்தகரிடமிருந்து ஆர்டர் வருகை குறைந்துள்ளது. இரண்டு மாதங்கள் வரை, இந்நிலையே தொடரும். கோடையை முன்னிட்டு, வரும் பிப்ரவரி மாதம் முதல், வெளிமாநிலங்களிலிருந்து, அதிகளவு ஆர்டர் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். ஆண்டு முழுவதும் தேவை உள்ளதால், உள்ளாடை உற்பத்தி நிறுவனங்கள் சீராக இயங்கி வருகின்றன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.