Share on Social Media


புதுடில்லி :’தமிழகத்தில் ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் இறந்தது தொடர்பாக, முப்படை விசாரணை துவங்கியுள்ளது’ என, பார்லிமென்டில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற்று முன்தினம் சென்றபோது, முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவருடைய மனைவி, 12 ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில், ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக, லோக்சபாவில் நேற்று அறிக்கை ஒன்றை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தாக்கல் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:ஜெனரல் பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் 11 ராணுவ அதிகாரிகள் விபத்தில் உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது.இந்த சம்பவம் தொடர்பாக முப்படை விசாரணை, விமானப்படையின் ஏர் மார்ஷல் மனவேந்திர சிங் தலைமையில் துவங்கியுள்ளது. இந்த விசாரணைக் குழுவினர் ஏற்கனவே தமிழகம் சென்று தங்களுடைய விசாரணையை துவக்கியுள்ளனர்.இந்த விபத்தில், விமானப் படையின் குரூப் கேப்டன் வருண் சிங் காயங்களுடன், வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ள அவருடைய உயிரைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிபின் ராவத்துக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும். மற்றவர்களுக்கு உரிய ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.அதைத் தொடர்ந்து, மறைந்த பிபின் ராவத் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சபையில் இரண்டு நிமிடம் மவுனம் அனுஷ்டிக்கப்பட்டது.ராஜ்யசபாவில் நேற்று அலுவல் துவங்கியதும், பிபின் ராவத் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, சபையின் துணை தலைவர் ஹரிவன்ஷ் பேசினார்.

பிபின் ராவத்தின் சேவைகள் குறித்து அவர் குறிப்பிட்டு பேசினார். அதைத் தொடர்ந்து, லோக்சபாவில் தாக்கல் செய்த அறிக்கையை, ராஜ்நாத் சிங், ராஜ்யசபாவிலும் தாக்கல் செய்தார்.’பிபின் ராவத் மறைவு குறித்து அனைத்து கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து பேசுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்’ என, காங்.,கைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தினார். ‘அதற்கு சபை விதிகள் இடமளிக்கவில்லை. அனைவரும் இணைந்து இரங்கல் தெரிவிப்போம்’ என, ஹரிவன்ஷ் தெரிவித்தார்.இதற்கிடையே, ஜனாதிபதி மாளிகைக்கு நேற்று மாலை சென்ற ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விபரங்களை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தெரிவித்தார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *