Share on Social Media


ஆசைப்பட்ட எல்லாவற்றையும் ஆன்லைனில் வாங்கலாம் இன்று. அந்த அளவுக்கு அதில் கிடைக்காத பொருளே இல்லை. போதைப் பொருள் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஆன்லைனில் அமோகமாக நடைபெறும் போதைப்பொருள் விற்பனையின் பின்னணி, அதைச் சட்டப்படி தடுக்க முடியாததன் அவலம் என எல்லாவற்றையும் விளக்கமாகப் பேசுகிறார் ஐ.ஆர்.எஸ் அதிகாரியும் போதைப்பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவருமான வெங்கடேஷ் பாபு.

Narcotic Drugs

ஆன்லைனில் போதைப்பொருள் விற்பனைதான் தற்போதைய டிரெண்ட். எல்லா நாடுகளிலும் இது அதிகரித்து வருகிறது. ஆன்லைனில் கிரிப்டோகரன்சி பிரபலமாகத் தொடங்கிய பிறகு, போதைப்பொருள் விற்பனையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கோகைன், ஹெராயின் போன்ற விலை அதிகமுள்ள போதைப்பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. கிரிப்டோகரன்சியால் போதைப்பொருள் விற்பனை ஆன்லைனில் கல்லாகட்டிக் கொண்டிருக்கிறது.

ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்குபவர்கள் யார், விற்பவர் யார் என்பது வெளிப்படையாகத் தெரியும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, கேஷ் ஆன் டெலிவரி, யு.பி.ஐ பேமென்ட் ஆகியவற்றின் மூலம் மட்டுமே பணம் செலுத்த முடியும். வாங்குபவர், விற்பவரின் முகவரி, தொடர்பு எண், வங்கிக்கணக்கு விவரங்கள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தையும் இதன் மூலம் எளிதாகக் கண்டறிய முடியும்.

mishal ibrahim bAk6aJSIohU unsplash Tamil News Spot
Drug Addiction (Representational Image)

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துவிட்டார்கள் என்றால் அந்த நபருக்கு ரகசிய கணக்கு ஒன்று வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி வேறு பொருள்களை வாங்குவது, போதைப்பொருள் உட்பட சட்டத்துக்குப் புறம்பான பொருள்களை வாங்குவது, விற்பது போன்ற செயல்களைச் செய்ய முடியும்.

2015-ல் லண்டனில் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற மிகப்பெரிய சர்வே எடுக்கப்பட்டது. அதன் முடிவில் ஆன்லைனை போதைப்பொருள் வாங்குவதற்காகப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால், முதல் முறையாக ஆன்லைனில் போதைப்பொருள் வாங்கியவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. அதாவது வழக்கமாக ஆன்லைன் மூலம் பொருள்களை வாங்குபவர்கள் அல்லாமல் முதல்முறையாக ஆன்லைன் வர்த்தகத்தைப் போதைப் பொருளுக்காகப் பயன்படுத்தியவர்கள் அதிகம் பேர் எனத் தெரியவந்துள்ளது.

lucrezia carnelos wQ9VuP Njr4 unsplash Tamil News Spot
Shopping

Also Read: இருமல் மருந்து டு பசை; நம் வீட்டிலேயே ஒளிந்திருக்கும் `போதை அபாயங்கள்’ – நான் அடிமை இல்லை – 3

ஆன்லைன் வர்த்தகத்தைப் போதைப்பொருளுக்காகப் பயன்படுத்தியது 2015-ம் ஆண்டு 13% ஆக இருந்தது. அடுத்த ஆண்டு அந்த எண்ணிக்கை 23% ஆக அதிகரித்தது. தற்போது அந்த எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உலக நாடுகளிலும் இது அதிகரித்திருக்கவே செய்யும்.

இதுபோன்ற போதைப்பொருள் வர்த்தகம் செயல்படும் இணைய உலகத்தை டார்க்நெட் என்கிறார்கள். இத்தகைய வர்த்தகத்தின் ஆரம்பப் புள்ளியைக் கண்டறிவது சர்வதேச கிரிமினல் போலீஸாருக்கே (இன்டர்போல்) சவாலாக உள்ளது. இதை எல்லைகள் தாண்டிய `டிரான்ஸ்நேஷனல் கிரைம்’ என்பார்கள். அதாவது, ஒரு நாட்டில் இருந்துகொண்டு மற்றொரு நாட்டில் குற்றச் செயலை நிகழ்த்துவது.

இந்தக் குற்றங்களை விசாரணை செய்வதற்கான அதிகாரம் இன்டர்போலுக்கு மட்டுமே உள்ளது. இன்டர்போல் அமைப்பினாலேயே கண்டறிய முடியாத வகையில் டார்க்நெட் இயக்கப்படுகிறது. இவர்கள்தாம் இதுபோன்ற போதைப்பொருள்களை விற்பனை செய்கின்றனர்.

Tamil News Spot
Drug (Representational Image)

Also Read: பிள்ளைகளை அச்சுறுத்தும் போதை வலை: பெற்றோராக உங்கள் கடமை என்ன? – நான் அடிமை இல்லை – 15

சில காலத்துக்கு முன்பு அமலாக்கப் பிரிவு மற்றும் நீதிபதிகள் உள்ளிட்டோருக்கு ஒரு பயிற்சி நடைபெற்றது. அதில் புலனாய்வு அதிகாரி ஒருவர் கலந்துகொண்டு எங்களுக்கெல்லாம் பயிற்சியளித்தார். பயிற்சிக்காக அப்போது ஆன்லைனில் கோகைன் எனப்படும் போதைப்பொருளை வாங்குவதற்கான முயற்சியை மேற்கொண்டோம். டார்க்நெட்டை கண்டறிந்து அதன் மூலம் ஆர்டர் செய்ய முயன்றோம். ஆர்டர் செய்யப்படும்போது அதைச் செயல்படுத்தும் சர்வர் எந்த நாட்டில் உள்ளது என்பதை டிராக் செய்தோம்.

ஆர்டர் செய்வதற்காக உள்ளே நுழைந்தபோது அந்த சர்வர் ஹாங்காங்கில் இருப்பதாகக் காட்டியது. அடுத்த சில நொடிகளில் அந்த சர்வர் செக்கோஸ்லோவேகியாவைக் காட்டியது. அடுத்த சில நொடிகளில் மீண்டும் வேறு நாட்டுக்கு மாறியது. அதனால் அந்தப் போதைப்பொருளை எந்த நாட்டிலிருந்து விற்பனை செய்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியாது. அதேபோன்று ஆர்டர் செய்வதற்கு உள்ளே சென்ற ஒரு நிமிடத்தில் தானாக லாக்அவுட் ஆகிவிடும். இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதால் இதன் தொடக்கப்புள்ளியைக் கண்டறிவது மிகப்பெரும் சவால்.

Tamil News Spot
Drugs (Representational Image)

இரட்டைக் கோபுரத் தாக்குதலைச் செயல்படுத்தியவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து அதை இயக்கினார்கள் என்று முதலில் சொல்லப்பட்டது. இறுதியில் சர்வர்தான் ஆப்கானிஸ்தானிலிருந்தது; அதை இயக்கியவர்கள் பாகிஸ்தானில் இருந்தார்கள் என்பது தெரிய வந்தது. அதே போன்றுதான் போதைப்பொருள் விற்பனையும் நடைபெறுகிறது.

இந்தியாவிலும் கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி மிகப்பெரிய கறுப்புச் சந்தை இயங்குகிறது. இந்தியா என்பது வளரும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. பணமிருந்தால் இந்தியாவில் வாழ்ந்துவிடலாம் என்ற நிலை உள்ளது. பிற நாடுகளில் பணம் வைத்திருப்பவர்களால் சட்ட விரோதமாக ஒரு வீட்டைக்கூட தங்கள் பெயரில் வாங்க முடியாத நிலைதான் நீடிக்கிறது. மருத்துவமனையில் டாக்டரைச் சந்திப்பது முதல் கடைகளில் பொருள் வாங்குவது அனைத்துச் செயல்பாடுகளும் தனிநபரின் அடையாளத்துடன் இணைக்கப்பட்டுவிடும் என்பதால் அனைத்தையும் டிராக் செய்துவிட முடியும்.

Venkatesh Babu Tamil News Spot
IRS officer Venkatesh Babu

இந்தியாவில் எதை வேண்டுமானாலும் காசைக் கொடுத்து வாங்கிவிட முடியும். அதனால் இந்தியாவில்தான் கிரிப்டோகரன்சியால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாக இருக்கும். பொதுவாக, கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்துவர்கள் வருமான வரி ஏய்ப்பு செய்யும் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள், பெரும் பண முதலாளிகள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டவர்கள்தாம். இவர்கள் அதிக அளவில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதற்கு வாய்ப்புள்ளது. அவ்வாறு முதலீடு செய்பவர்கள் அதன் மூலம் போதைப்பொருள் வாங்கிப் பயன்படுத்துவதற்கும் வாய்ப்புள்ளது.

உலக நாடுகள் இதை அனுமதிப்பதால் இந்த விவகாரத்தில் இந்தியா மட்டும் தனித்து எந்த முடிவையும் எடுக்க முடியாது. அதிலும் சில நாடுகளில் இந்த வர்த்தகத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கிரிப்டோகரன்சி பயன்படுத்தி போதைப்பொருள் வாங்குவது சட்டபூர்வமானதா, சட்டத்துக்குப் புறம்பானதா என்று ஆராய்ந்ததில், அதுபற்றி இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

bitcoin 3089728 1280 Tamil News Spot
Bitcoin

Also Read: தடைசெய்யப்பட்டும் கஞ்சா சர்வ சாதாரணமாகப் புழங்குவது எப்படி? பின்னணி இதுதான்! – நான் அடிமை இல்லை 11

சட்டபூர்வமானதா, சட்டத்துக்குப் புறம்பானதா என்று வரையறுக்கப்படாத வரையில் அது சட்டபூர்வமானதும் இல்லை, சட்டத்துக்குப் புறம்பானதும் இல்லை என்றுதான் பொருள். இதை ஒரு வரம்புக்குள் கொண்டுவராதவரை ஆன்லைன் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு முடிவு கட்டுவது சாத்தியமில்லை” என்கிறார் வெங்கடேஷ் பாபு.

போதைப்பொருள் வைத்திருத்தல், விற்பனை, பயன்பாடு பற்றி சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றி அடுத்த அத்தியாயத்தில் பேசுவோம்!Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *