Share on Social Media


நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து, அதன் துணை தலைவர் சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ்., வெளியேறியுள்ளார். மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியாவும் வெளியேறியுள்ளார். அந்த பிக்பாஸ் கூடாரத்திலிருந்து அடுத்து யார் வெளிவருகிறார் என பார்ப்போம்.
– நடிகை கஸ்துாரி

‘பிக்பாஸ் போட்டியில் யார் வெல்வர் என்ற சூதாட்டம் நடந்தது போல, அங்கிருந்து ஓட்டம் பிடிப்பது யார் என்பதிலும் சூதாட்டம் நடந்தாலும் நடக்கலாம்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், நடிகை கஸ்துாரி அறிக்கை.

தடுப்பூசிக்கு சர்வதேச ஒப்பந்த புள்ளி கோரும் மாநில அரசு, முந்தைய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு உயிர் கொடுத்து, மாநில அரசே, செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்கலாமே; மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழலாமே!
– மாநில பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்

‘தடுப்பூசிக்கு அவசர தேவை இருக்கும் நேரத்தில், பழைய தொழிற்சாலையை துாசிதட்டி சரி செய்வதை விட, தயாராக உள்ள மருந்துகளை வாங்குவது தான் சரியாக இருக்கும்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், மாநில பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை.

ஏழு நாட்கள் கூட முடியவில்லை. அதற்குள், தி.மு.க., அரசை தாக்கி பதிவிடுகின்றனர், சங் பரிவார் அமைப்பினர். ஏழாண்டுகளாக ஓர் உதவாக்கரை ஒன்றிய அரசை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு, எப்படி தான் இப்படி தாக்க மனம் வருகிறதோ?
– மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் அருணன்

‘தி.மு.க., அரசின் தவறுகளை சுட்டிக்காட்டினால், கம்யூனிஸ்டுகள் கலங்குவது ஏன்…’ என, கேட்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை.

நான் செய்நன்றி மறவாதவன். பணம் பெறாது, 34 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த உங்களை சந்திப்பதை விட எனக்கு கடமை வேறில்லை. எனினும், ஊரடங்கு முடியும் வரை என்னை சந்திப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
– தமிழக நிதியமைச்சர் தியாகராஜன்

‘எங்க அப்பா குதிருக்குள் இல்லை என்பது போல, பிற தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம் பணம் கொடுத்து தான் வென்றனர் என்பது போலல்லவா இருக்கிறது…’ என, சொல்ல துாண்டும் வகையில், தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் அறிக்கை.

வெளிநாடுகளின் தடுப்பூசி நிறுவனங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. ஏனெனில் பல லட்சம், ‘டோஸ்’ தடுப்பூசிகளை மஹாராஷ்டிரா கேட்கும் நிலையில், தமிழகம், கர்நாடகா மாநிலங்கள், எங்களுக்கும் வேண்டும் எனக் கேட்கின்றன. இதனால், அந்த நிறுவனங்கள் வைக்கும் விலைக்கு தான் வாங்க முடியும்; பேரம் எடுபடாது. இது தான் அந்த நிறுவனங்களின் மகிழ்ச்சிக்கு காரணம்.
– பத்திரிகையாளர் எம்.கே.வேணு

‘இதை அறிந்து தான், மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்கி வந்தது. அதில் பாரபட்சம் காட்டப்படுவதாக, எதிர்க்கட்சிகள் புகார் கூறியதை அடுத்து, அந்தந்த மாநிலங்களே வாங்கிக் கொள்ள மத்திய அரசு அனுமதித்து விட்டது. அது தான் இந்நிலைக்கு காரணம்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், பத்திரிகையாளர் எம்.கே.வேணு அறிக்கை.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *