Share on Social Media


பெங்களூரு: ”கர்நாடக அரசில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு, நீண்ட நாட்கள் நீடிக்காது. எந்த சூழ்நிலையிலும் கவிழ்ந்து விடும் வாய்ப்பு உள்ளது,” என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, தெரிவித்தார்.
கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் செய்யப்பட்டதும், அமைச்சர் பதவி வழங்கியதில், ஆளுங்கட்சியான பா.ஜ.,வில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. அதன் பின், துறைகள் ஒதுக்கியதில் குழப்பம் ஏற்பட்டு, நீடித்து வருகிறது. இது குறித்து, காங்கிரசைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, பெங்களூரில் கூறியதாவது:
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களே அரசுக்கு எதிராக அதிருப்தியை வெளிப்படுத்தி, போராட்டம் நடத்துகின்றனர். பசனகவுடா பாட்டீல் எத்னால், அரவிந்த் பெல்லத், ராமதாஸ் உட்பட ஒருவர் பின் ஒருவராக அதிருப்தியாளர்கள் டில்லி சென்று வருகின்றனர். அரசில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு, நீண்ட நாட்கள் நீடிக்காது. எந்த சூழ்நிலையிலும் கவிழ்ந்து விடும் வாய்ப்பு உள்ளது. கொரோனா மூன்றாம் அலை ஆரம்பமாகிறது. எனவே, குடகு, தட்சிண கன்னடா, மைசூரு உட்பட மாநில எல்லை மாவட்டங்களில் விதிமுறைகள் கடுமையாக்க வேண்டும்.
மூன்றாம் அலையிலிருந்து மக்களை காக்க வேண்டியது அரசின் பொறுப்பு. வார இறுதி ஊரடங்கு அமல்படுத்துவதால் எந்த பயனும் இல்லை. தொற்று பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது. அரசுடன் இணைந்து, மக்களும் எச்சரிக்கையுடன் இருந்து, விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும்.
அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது, மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு.மூன்றாம் அலை கட்டுக்குள் வரவில்லை என்றால், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட கூடாது. இதனால், நாமே குழந்தைகளை ஆபத்தில் தள்ளியது போன்று ஆகிவிடும். மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அரசு அனுமதி தர கூடாது. இந்த ஓராண்டு பண்டிகைகள், திருவிழாக்கள் நடத்தாமல் இருப்பது நல்லது. விநாயகர் சதுர்த்தியை, வீட்டுக்குள்ளேயே கொண்டாடலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதன் பின், முன்னாள் பிரதமர் ராஜீவ் நினைவாக, பெங்களூரிலிருந்து, தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுார் வரையிலான சைக்கிள் பேரணியை, சித்தராமையா துவக்கி வைத்தார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *