Share on Social Media


பால், ஊட்டச்சத்து மிக்க ஓர் இன்றியமையாத சமச்சீர் உணவுப் பொருள். மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்குப் பால் அவசியம் தேவைப்படுகிறது. சுகாதாரமான ஆரோக்கியமான கறவை மாட்டுப்பண்ணை அமைத்து தரமான பால் உற்பத்தி செய்தல் மற்றும் தனி மனிதன் உட்கொள்ளும் பாலின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 1-ம் தேதி உலக பால் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

பால் கறத்தல்

பாலில் கொழுப்புச் சத்து, புரதச்சத்து, தாதுச்சத்து, வைட்டமின் போன்ற பல இன்றியமையாத சத்துப் பொருள்கள் உள்ளன. தீவிரப் பால் பெருக்குத் திட்டத்தின் மூலம் நம் நாட்டில் பால் உற்பத்தி ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியா, ஆண்டுக்கு 187.7 மில்லியன் டன் பாலை உற்பத்தி செய்து உலகிலேயே பால் உற்பத்தியில் முதலாவதாகத் திகழ்கிறது. இதில் தமிழகம் ஒரு நாளுக்கு 206 லட்சம் லிட்டர் பாலை உற்பத்தி செய்து இந்தியாவில் நான்காவது இடத்தை வகிக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, நாம் பால் பவுடர் மற்றும் உலர் வெண்ணெய் ஆகியவற்றை இறக்குமதி செய்து கொண்டிருந்த நிலை மாறி, இப்போது ஏற்றுமதி செய்யும் அளவுக்கு நம் நாட்டில் பால் உற்பத்தி நிலை மேம்பட்டுள்ளது.

பெரும்பாலும் அனைத்து வளர்ந்த நாடுகளும், பால் உற்பத்திக்குக் கிராமங்களையே சார்ந்துள்ளன. ஆனால், பாலின் தேவை கிராமங்களைவிட பெரிய நகரங்களில்தான் அதிகம். எனவே, கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் பால், தகுந்த முறையில் சேகரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு நகரங்களைச் சென்றடைகிறது. சாதாரணமாக மாட்டிலிருந்து கறந்த பால் சுமார் 3 மணி நேரம் வரைதான் கெடாமலிருக்கும். எனவே, பால் உற்பத்தியாளர்கள் பாலை சுத்தமாக உற்பத்தி செய்வதுடன் பால் உற்பத்தி அதிகமுள்ள காலங்களில் தங்களிடமுள்ள உபரியான பாலை வெண்ணெய், நெய், கோவா மற்றும் பாலாடைக்கட்டி போன்ற பால் பொருள்களாக மாற்றி விற்பனை செய்தால் அதிக இலாபம் பெற வாய்ப்புண்டு.

vikatan 2019 12 8c45c118 8a1c 41de ad33 321f3dfe0de8 p6a Tamil News Spot
பால் கறத்தல்

சுத்தமான பால்

எல்லா வகையிலும் பயன்படும் உணவான பாலை, நல்ல முறையில் அதன் சத்துகள் கெடாதவாறு உற்பத்தி செய்ய வேண்டும். அப்படியில்லையென்றால் பாலில் சேரும் கிருமிகள், பன்மடங்காகப் பெருகி, பாலின் தரத்தையும் கெடுத்துவிடும். பாலையும் நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது. ஏனெனில், கிருமிகள் வெகு விரைவாக வளர்வதற்கு பால் ஒரு நல்ல திரவப்பொருளாகும்.

பால் கறத்தல்

பசுவின் மடியில் பால் சுரப்பது பல உடல் கூறு இயக்கங்களால் ஏற்படுகிறது. மாட்டின் மடியில் உள்ள காம்புகளைக் கன்றுகள் சப்புவதாலும், பசுவானது தீவனத்தைப் பார்ப்பதாலும், பால் கறப்பவர் மடியைத் தடவி விடுவதாலும், நரம்புகள் மூலமாகச் சில ஹார்மோன்கள் தூண்டப்பட்டு பால் சுரப்பது இயக்கப்படுகிறது.

மாடுகளில், பால் கறப்பது ஒரு கலை. முதிர்ந்த அனுபவமும், நல்ல திறமையும் பால் கறப்பதற்குத் தேவை. பால் கறக்கும்போது, மிகக் கவனமாகவும், அமைதியாகவும், விரைவாகவும், அதே சமயத்தில் மடியிலுள்ள முழுப் பாலையும் பெறும்படி கறக்க வேண்டும். பால் கறக்கும்போது, மாடுகளுக்கு எந்த விதத்திலும் சிரமமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இரைச்சல், பயமுறுத்தல், அடித்தல் போன்றவைகளால் பால் சுரக்கும் இயக்கங்கள் தடைப்பட்டு பால் சுரப்பு நின்றுவிடும். பால் கறப்பவர் மாறினாலும், பால் அளவு திடீரென்று குறைந்துவிடும். பால் சுரக்க ஆரம்பித்தவுடன் எல்லாப் பாலையும் கறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் பால் மடியிலேயே தங்கிவிடும்.

unnamed 2 Tamil News Spot
மாடுகள்

பால் கறக்கும் முறைகள்

முழு விரல்களை உபயோகித்தல்

இம்முறையில், ஒரு கை விரல்களால் காம்பைப் பிடித்து உள்ளங்கையின் மீது அழுத்துவதால் பால் கறக்க முடியும். இம்முறை கன்று ஊட்டுவது போன்று காம்புகளின் எல்லாப் பக்கங்களிலும் ஒரே அளவான அழுத்தத்தை ஏற்படுத்தும். பெரிய காம்புகள் உள்ள மாடுகளிலும் எருமைகளிலும் இம்முறையைக் கையாள்வது சிறந்தது.

இரு விரல்களை உபயோகித்தல்

கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் காம்புகளைப் பிடித்து சிறிது அழுத்தம் கொடுத்துக் கீழே இழுப்பதன் மூலம், பால் கறக்க முடியம், இம்முறையில் காம்புகளுக்கு ஒரே அளவான அழுத்தம் கிடையாது. மேலும் காம்பின் மேல் பக்கம் இதனால் பாதிக்கப்பட்டு சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இம்முறையைக் காட்டிலும் மேற்கூறிய முறைதான் சிறந்தது. எனினும், சிறு காம்புகள் உள்ள மாடுகளிலும், பாலைக் கறந்து முடிக்கும் போதும், இம்முறையைக் கடைப்பிடிக்கலாம்.

vikatan 2020 09 03f0ac16 a51d 4f36 b4f0 2084f0341416 CBS 8202 Tamil News Spot
கொட்டகை சுத்தப்படுத்தும் பணி

பாலில் சேரும் அசுத்தங்களும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

கறவை மாடுகளின் மடியிலேயே சில கிருமிகள் இருப்பதற்கு வாய்ப்புண்டு. ஆரோக்கியமான நோயற்ற மாடுகளில் இவ்வகையான கிருமிகள் எவ்விதக் கெடுதலும் செய்வதில்லை. எனவே, பால் கறக்கும்போது முதலில் வரும் பாலை நீக்கிவிட வேண்டும்.

கறவை மாடுகள் காசநோய், கருச்சிதைவு, அடைப்பான், மடி வீக்கம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடாது. எனவே, ஆரோக்கியமான நோயற்ற மாடுகளாக இருக்க அவ்வப்போது பரிசோதனை செய்ய வேண்டும்.

மாடுகளின் உடலிலிருந்தும் அசுத்தங்கள் பாலில் சேர வாய்ப்புண்டு. உரோமம், மண், சாணம், வைக்கோல் போன்றவற்றுடன் சில கிருமிகளும் பாலில் சேரும். எனவே, மாடுகளை நன்கு தேய்த்து அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, மடியின் மீதும், பக்கத்திலுள்ள இடங்களிலும் நீண்ட உரோமம் காணப்பட்டால் அவற்றைக் கத்தரித்து நீக்கலாம்.

பால் கறப்பதற்கு முன் மடி, பக்கத்தொடை ஆகிய பாகங்களைப் பொட்டாசியம் பர்மாங்கனெட் கலந்த நீரால் கழுவி சுத்தமான உலர்ந்த துணியினால் துடைப்பது சரியான முறையாகும்.

பால் கறக்கும் இடம் நன்கு கழுவி சுத்தமாக இருத்தல் வேண்டும். பால் கறக்க முற்படுவதற்கு முன், கொட்டகையைக் கூட்டுவதாலும், மாடுகளைத் தேய்ப்பதாலும், காய்ந்த தீவன வகைகளைக் கொடுப்பதாலும் கொட்டகையின் காற்று அசுத்தமடைந்து பாலில் சேர வாய்ப்புண்டு.

மேலும், குழிப்புல், சாணம் முதலியவற்றிலிருந்து வாசனையைப் பால் எளிதில் கிரகிக்கும் தன்மை கொண்டது. எனவே, இவ்வசுத்தங்களைப் போக்க பால் கறக்கும் இடத்தை நன்கு கழுவி சுத்தமாக வைத்திருப்பதுடன் முன் கூறிய செயல்களைப் பால் கறக்கும்போது செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

குறுகிய வாயுள்ள பால் பாத்திரங்களை உபயோகிப்பதன் மூலம் காற்றால் சேரும் அசுத்தங்களை ஓரளவு குறைக்க முடியம். சுற்றுப்புறம் அசுத்தமாகவும், காற்று அதிகமாக வீசும் இடமாகவும் இருந்தால் பாலில் அசுத்தம் மற்றம் கிருமிகள் எளிதில் கலந்துவிட வாய்ப்புள்ளது.

vikatan 2019 09 7e11fef7 14c3 41f2 b849 4318bd551fed p70d Tamil News Spot
பால் கறத்தல்

அதேபோன்று பால் கறக்கும் பாத்திரங்களை சுத்தமாகக் கழுவி வெயிலில் உலர்த்தி வைத்து பயன்படுத்த வேண்டும். பால் கறப்பவர் நோயுற்றிருந்தால் பால் கறப்பதைத் தவிர்க்க வேண்டும். இப்படி பால் கறப்பதில் உள்ள விஷயங்களைக் சொல்லிக் கொண்டே போகலாம். உணவுப் பொருளுக்கு மட்டுமல்ல, பாலுக்கும் நகரங்கள் கிராமங்களையே சார்ந்துள்ளன. அதனால், பால் உற்பத்தி தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. எனவே, விவசாயிகள் தொடர்ந்து பால் உற்பத்தி செய்து வருமானத்தைப் பெருக்கி ஊரகப் பொருளாதாரத்தை நிலைநிறுத்துமாறு விவசாயிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.

– ந.அகிலா மற்றும் ந.முத்துசாமி

முதுநிலை விஞ்ஞானி,

வேளாண் அறிவியல் நிலையம், நாமக்கல்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *