Share on Social Media

73 கிலோ எடைப்பிரிவிற்கான ஜூடோ போட்டியில் இஸ்ரேலிய வீரர் தோஹர் புட்புல்லை எதிர்த்து சூடானைச் சேர்ந்த முகமது அப்துல் ரசூல் மோதுவதாக இருந்தது. ஆனால், திடீரென அப்துல் ரசூல் போட்டியிலிருந்து விலகியதால் சர்ச்சை எழுந்தது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இப்படி இஸ்ரேலிய வீரர் புறக்கணிப்பை சந்திப்பது இது இரண்டாவது முறையாகும்.

இதற்கு முந்தைய சுற்றிலும் இதேப்போன்று புட்புல்லுக்கு எதிராக விளையாடுவதை மறுத்து போட்டியிலிருந்து விலகியிருந்தார் அல்ஜீரிய வீரர் நவுரின்.

ஏன் அப்துல் ரசூல் போட்டியில் பங்கேற்கவில்லை என சர்வதேச ஜூடோ சங்கமும், சூடானிய அதிகாரிகளும் உடனடியாக எதுவும் சொல்லவில்லை. தற்போது நவுரினும் அவரது பயிற்சியாளரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் இவர்கள் இருவர் மீதும் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் சர்வதேச ஜூடோ கழகம் அறிவித்துள்ளது.

“எங்கள் விளக்கத்தை ஒலிம்பிக் கமிட்டியிடம் கூற எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனால் இவை எல்லாவற்றையும் விட பாலஸ்தீன பிரச்சனைதான் எங்களுக்கு முக்கியம்” எனக் கூறியுள்ளார் நவுரின். 2019 உலக ஜூடோ சாம்பியன்ஷிப்பின் போதும் இஸ்ரேலிய வீரர் புட்புல்லை சந்திப்பதை தவிர்த்து போட்டியிலிருந்து விலகியிருந்தார் நவுரின்.

நவுரினின் பயிற்சியாளர் அமர் பெனிஹல்ஃப் கூறுகையில், “இஸ்ரேல் வீரரோடு மோதுவோம் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால்தான் போட்டியிலிருந்து விலகினோம். நாங்கள் நல்ல முடிவையே எடுத்துள்ளோம்” என்றார்.

இப்படி இஸ்ரேலிய வீரர்கள் புறக்கணிப்பை சந்திப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் ஜூடோ போட்டிகளில் நிகழும் போது சர்வதேச கவனம் பெறுகிறது. ஏனென்றால், இதுவரையிலான ஒலிம்பிக் போட்டிகளில் இஸ்ரேல் வாங்கிய பத்து பதக்கங்களில் 5 பதக்கம் ஜூடோ மூலம் கிடைத்ததே.

இரு வீரர்களும் போட்டியை புறக்கணித்ததால், அப்போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட புட்புல்லால் கடைசியில் ஏழாவது இடமே பிடிக்க முடிந்தது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இஸ்ரேலும் சூடானும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி இரு நாட்டிற்கும் இடையே நட்புறவே நீடிக்கிறது. ஆனாலும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து அந்நாட்டில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் அல்ஜீரியா, இஸ்ரேலோடு பல வருடங்களாக எந்த உறவும் வைத்துக்கொள்வதில்லை.

“விளையாட்டில் அரசியலுக்கு இடமே இல்லை. எங்களுக்கு எதிராக விளையாட விருப்பம் இல்லையென்றால், ஏன் இங்கு வர வேண்டும். வீட்டிலேயே இருந்திருக்கலாமே” என கொதிப்படைகிறார் இஸ்ரேல் அரசியல்வாதியான யோல் ரவாசோவ். இவரும் ஒரு ஜூடோ வீரர்தான். 2001 உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் இதேப் போன்ற புறக்கணிப்பை சந்தித்துள்ளார் ரவாசோவ்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *